மறைந்த கவிஞர், எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மனாபா குடும்பத்துக்கு நிதியுதவி செய்வீர்…

அன்பின் உங்களுக்கு,
கவிஞராகவும், எழுத்தாளராகவும், சிறுபத்திரிகையாளராகவும் மொழிபெயர்ப்பாளனாகவும் முக்கிய தடங்களைப் பதித்துள்ள ஸ்ரீபதி பத்மநாபா கடந்த ஜூன் 15ம் தேதி சனிக்கிழமை அன்று நுரையீரல் தொற்று காரணமாக இறந்தார். 48ம் வயதிலேயே சடுதியில் நேர்ந்துவிட்ட அவரது மரணம் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு பேரிழப்பு.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புப் பணி செய்தவர்களுள் ஸ்ரீபதி பத்மனாபா குறிப்பிடத் தகுந்தவர். குறிப்பாக, அவர் மொழிபெயர்த்த குஞ்ஞுண்ணி கவிதைகள் தமிழ் இலக்கியச் சூழலையே திரும்பிப் பார்க்கவைத்தது. குறைந்த சொற்களில் ஒரு காட்சி சித்திரத்துடன் எள்ளல் மற்றும் அங்கதச்சுவை நிரம்பிய குஞ்ஞுண்ணு மாஸ்டரின் கவிதைகள் ஸ்ரீபதியின் மொழி பெயர்ப்பில் அழகாய் துலங்கின. இதைத் தவிர, ஷகிலா வாழ்க்கை வரலாற்றையும், எம்.டி.வாசுதேவன் நாயரின் பெருந்தச்சன் திரைகதை நூலையும் மொழி பெயர்த்துள்ளார். மலையாளக் கரையோரம் என்ற மலையாள இலக்கியம் பற்றிய கட்டுரைத் தொகுப்பும் வந்துள்ளது. பூஜ்யம் கவிதைகள், என்பது போலொரு தேஜாவூ ஆகியவை ஸ்ரீபதி எழுதிய கவிதை நூல்கள். இதைத் தவிர மலையாள இலக்கிய மேதை வி.கே.என் எழுதிய பையன் கதைகள், கிருஷ்ணன் நாயர் எழுதிய கட்டுரைகள் மற்றும் ஸ்ரீபதியின் சிறுகதைகள், கவிதைகள் ஆகியவையும் அச்சாக்கம் பெற காத்திருக்கின்றன.
புனைவு, கவிதை மொழிபெயர்ப்பு ஆகியவற்றை போலவே இதழியல் துறையிலும் முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியவர். 2000ம் ஆண்டுகளில் ’ஆரண்யம்’ எனும் சிற்றிதழை சக எழுத்தாளர் சுதேசமித்திரனுடன் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆசிரியப் பொறுப்பேற்று நடத்தியது அவரது இலக்கியப் பணிகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. அடிப்படையில் ஓவியருமான ஸ்ரீபதி ஆரணயம் இதழை மிக நவீனமாக வடிவமைத்தார். இது, சிறுபத்திரிக்கைச் சூழலைத் தாண்டி இதழியல் துறைக்கே ஒரு மைல் கல் எனலாம்.
கோவையில் பிறந்த ஸ்ரீபதியின் பெற்றோர் கேரளாவை சேர்ந்தவர்களென்றாலும் அவர் அம்மா சரஸ்வதி தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றியவர். அதனாலேயே ஸ்ரீபதிக்கும் சிறுவயதிலேயே இலக்கிய ஈடுபாடு உருவானது. திரைப்படத்துறையின் மீதான கனவும் லட்சியமும் அவரை சென்னைக்கும் கோவைக்குமாக அலைக்கழித்ததில் வாழ்க்கை பற்றுக் கோடில்லாமல் அவரை பதட்டத்திலேயே இருக்கவைத்தது. இந்தப் பதட்டங்களுக்கிடையேதான் எழுதிக்கொண்டிருந்தார் ஸ்ரீபதி.
இந்நிலையில் அவரது மனைவி சரிதா புற்றுநோயால் பாதிக்கப்படவே சிகிச்சைக்காக கேரளவின் ஆலப்புழாவுக்கு இடம் பெயர்ந்தார். பத்தாம் வகுப்பில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற அவரது செல்ல மகள் பாரதியின் படிப்பும் அம்மாவின் பணிவிடைகளுக்காக பாதியிலேயே அறுந்தது. எழுத்து வாழ்வில் எதிர்கொள்ளும் துயரங்கள் எல்லாம் தான் உருவாக்கப்போகும் அமரத்துவமான படைப்பின் பொருட்டே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்ட ஸ்ரீபதி, தன் மனைவியின் இக்கட்டான தருணத்தை எதிர்கொண்ட தருணத்தில்தான் இந்த கொடூர மரணம் அவர் கனவுகளை சிதைத்து பலிகொண்டுவிட்டது.
இச்சூழலில் அவரது மனைவி சரிதாவின் மருத்துவசிகிச்சை மற்றும் நல்வாழ்வுக்காகவும் மகள் பாரதியின் கல்விச் செலவுகளுக்காகவும் நிதியாதரங்கள் தேவைப்படுகிறது.
எழுத்தாளர் பாமரன், கவிஞர் கரிகாலன், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், பதிப்பாளர் டிஸ்கவரி வேடியப்பன், கவிஞர் நிஷா மன்சூர், ஓவியர் எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன், எழுத்தாளர் அசதா, கவிஞர் அமிர்தம் சூர்யா, கவிஞர் ராம் வசந்த், கவிஞர் ஜான் சுந்தர், கவிஞர் இசை ஆகியோரோடு மேலும் பல நண்பர்கள் அணி சேர்ந்து நான் உட்பட (அஜயன் பாலா) ஒரு குழு அமைத்து நிதி சேகரித்துத் தர முடிவெடுத்திருக்கிறோம்.
தங்களின் அன்பை நிதியாக கீழுள்ள வங்கிக்கணக்கில் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

B.ELANGOVAN
S.B A/C NO.50100269201360
HDFC BANK
PERUNGUDI BRANCH
IFSC CODE: HDFC0000795

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *