உலக நாடக தின சிறப்புப் பதிவு

பி.யூ.சின்னப்பா : (05.05.1916 – 23-09-951)

( விரைவில் வெளிவரவிருக்கும் எனது தமிழ் சினிமா வரலாறு (1916-1947) எனும் நூலிலிருந்து நாடக தினத்துக்காக எடுத்தாளப்படுகிறது)

விஜய் – அஜீத், கமல்- ரஜினி, எம்.ஜி.ஆர்-சிவாஜி போல அவர்களுக்கு முன் தமிழ்த்திரையுலகில் முதல் இரட்டை உச்ச நட்சத்திரங்களாக கொண்டாடப்பட்டவர்கள் தியாகராஜ பாகவதர்- சின்னப்பா பாகவதர். எம்.கே.தியாகராஜ பாகவதர் வெறும் பாட்டு மூலம் மட்டுமே புகழுச்சி பெற்ற நிலையில் பாட்டுடன் சண்டைக்காட்சிகளுக்கும் குறிப்பாக வாள் சண்டைக்கும் பெயர் போனவர் பி.யூ.சின்னப்பா.

புதுக்கோட்டையில் உலகநாதப்பிள்ளை மீனாட்சி அம்மாளுக்கு 05.05.1916ஆம் ஆண்டு மகனாகப் பிறந்த சின்னப்பாவின் இயற்பெயர் சின்னச்சாமி. சின்னச்சாமியின் அப்பா ஒரு நாடகக் கலைஞராக இருந்த காரணத்தால் இயல்பிலேயே அவரது உடம்புக்குள் கலை ரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அப்பாவோடு நாடகக் கொட்டகைக்கு சென்று அதுபோலவே அவரும் பாடவும் நடிக்கவும் பயிற்சிகள் எடுத்துக்கொண்டார். அப்பா நடிக்கும் நாடகங்களில் அவ்வப்போது மேடையில் தோன்றி ரசிகர்களிடம் கைதட்டல் பெறுமளவுக்கு சேஷ்டைகள் செய்து வந்தார். ’சதாரம்’ நாடகத்தில் குட்டிதிருடனாக அவர் தோன்றியபோது கொட்டகையே சிரிப்பலையால் தள்ளாடும்.  அதனால் அவர் படிப்பு வாழ்க்கையும் தள்ளாடி நான்காம் வகுப்போடு நின்றுகொண்டது. அப்பாவின் ஆசைக்கிணங்க நாடக நடிப்பு பயிற்சியோடு சிலம்பம், குஸ்தி வகைகளை ஆர்வத்துடன் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

துவக்கத்தில் தத்துவ மீனாலோசனி சபாவில் சேர்ந்து அங்கிருந்த டிகே எஸ் சகோதரர்களுடன் ஆறு மாதகாலம் பயிற்சி எடுத்துக்கொண்டு வந்த சின்னப்பா அங்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் அப்போது புதுக்கோட்டையில் முகாம் போட்டிருந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நாராயணசெட்டியார் என்பவரது சிபாரிசின் மூலம் சேர்ந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது ஒன்பது, ஒப்பந்தம் 15 வருட காலம். மாதம் 15 ரூபாய் சம்பளம்.

அப்போது மதுரை பாய்ஸ் கம்பெனியில் பிற்காலத்தில் புகழ்பெற்ற பல நடிகர்கள் பயிற்சி எடுத்தனர். சுருக்கமாக சொல்வதானால். பேசும் சினிமாவின் துவக்க காலம் துவங்கி அடுத்து இருபதாண்டு காலம் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த பல முன்னணி நடிகர்கள் தாங்கள் பிற்காலத்தில் பெரிய சினிமா நட்சத்திரமாகப் போகிறோம் என தெரியாமலேயே சிறுவர்களாக பாய்ஸ் கம்பெனியில் பயிற்சி எடுத்துக்கொண்டு வந்தனர். எம்.ஜி.ஆர் அவரது அண்ணன் எம்.ஜி.சக்ரபானி ஆகிய இருவரும் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இதனால் பாய்ஸ் கம்பெனி அளப்பரிய திறமைகளின் முகமாக விளங்கியது. இதற்கெல்லாம் காரணம் கம்பெனி முதலாளியான சச்சிதானந்தம் பிள்ளை… பொதுவாக அப்போது நாடகக் குழுக்கள்  பல இருந்தாலும் அவையெல்லாமே பரவலாக சோபிக்கவில்லை, காரணம் ஒழுக்கமின்மை, நிர்வாகச் சீர்கேடு. ஆனால் பாய்ஸ் கம்பெனி அதற்கு நேர் எதிர். ராணுவ கட்டுப்பாடும் கண்டிப்பும் ஒழுங்குமாக சச்சிதானந்தம்பிள்ளை நடத்தி வந்ததால் பேரும்புகழும் பெற்று விளங்கியது.

இச்சூழலில்தான் பலத்த போட்டிகளுக்கிடையே சின்னப்பாவின் திறமை, குடை மறைத்த குன்றாக அதிகம் தெரியாமல் இருந்து வந்தது. ஒருநாள் சச்சிதானந்தம் பிள்ளை மாடியில் சாமி கும்பிடும் போது கீழிருந்து ஒலிக்கும் அற்புதமான குரலைக்கேட்டு மெய்மறந்து கீழிறங்கி வந்து யார் அப்படிப்பட்ட குரலுக்கு சொந்தக்கரான் என பார்க்க வந்தபோது அங்கே கண்ணை மூடி சிறுவன் சின்னச்சாமி சதி அனுசூயா நாடக பாடலை பாடி ஒத்திகை செய்வதை பார்த்தார். அடுத்த நாளே அவர் மாத சம்பளம் 25 ஆக உயர்த்தினார். இது உடன் பயின்ற பல கலைஞர்களின் கண்களில் பொறாமைத் தீ வளர்த்தது. அதன்பிறகு முதலாளிக்கு எந்த நாடகமென்றாலும் கூப்பிடு சின்னச்சாமியை. நாளடைவில் சின்னச்சாமி சின்னப்பாவாக மாறி ராஜபார்ட்டுகளில் களைகட்டினார்.  அப்போது அவருக்கு ஸ்த்ரீ பார்ட்டாக ஜோடி சேர்ந்த சிறுவர்களான எம்.ஜி.ஆர், பி.ஜி.வெங்கடேசன், பொன்னுசாமி, அழகேசன்  போன்றோர் பிற்பாடு தமிழ்த் திரையுலகின்  நடிகர்களாக பிராகசித்தனர். சின்னப்பா நடித்த பல நாடகங்கள் பெரு வெற்றிபெற்றன. பாதுகா பட்டாபிஷேகம் நாடகம் மட்டும் சென்னையில் ஒரு வருட காலம் நடத்தப் பட்டது. அதில் பரதனாக வேடம் கட்டிய சின்னப்பாவை பார்ப்பதற்காக ரசிகர்கள் நாடக கொட்டகை நோக்கி திரண்டு வந்தனர். தொடர்ந்து சந்திரகாந்தா ராஜ்மோகன் போன்ற சமூக நாடகங்களும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தன.

இப்படியாக கம்பெனி ஸ்டாராக சிறந்து விளங்கிய பி.யூ.சின்னப்பாவுக்கு ஒருநாள் பேரதிர்ச்சி. பருவம் காரணமாக தொண்டை கெட்டியாகியது. நாடகமேடைகளில் தோற்றத்தை விட குரலுக்கே முதலிடம். குரல் போனால் அவ்வளவுதான் அத்தோடு முடிந்தது கதை. அதுவரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய கம்பெனி ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிவிடும், சாப்பாடு வரிசை முதற்கொண்டு அனைத்திலும் கடைசி வரிசைக்கு அனுப்பி அவமானப்படுத்தும். காரணம் மகரக்கட்டை உடைந்தால் மேடையில் முகரக்கட்டை எடுபடாது.  மேலும் கம்பெனிக்கு சோப்பு சீப்பு முதல் சோறுவரை அனைத்தும் தண்டச்செலவு. சட்டென ஒப்பந்தம் மீறி வெளியேறவும் முடியாது. இதனால் இப்படியாக மகரக்கட்டை உடைந்தவன் பெட்டியில் யாரையாவது விட்டு நகையை வைக்க சொல்லிவிட்டு பின் அந்த நகை திருடு போய்விட்டது என பரபரப்பு உண்டாக்கி அனைவரது பெட்டியும் பரிசோதனை செய்யப்படும்போது குறிப்பிட்ட ஆளின் பெட்டியில் இருப்பதை வைத்து திருட்டுப் பழி சுமத்தி அந்த ஆளை வெளியேற்றுவது பாய்ஸ் கம்பெனியின் வாடிக்கை.

இதனால்தான் மகரக்கட்டை உடைந்தவுடன் சின்னப்பா பெரும் மனநெருக்கடிக்கு ஆளானார். அடுத்த நாளே சொல்லாமல் கொள்ளாமல் பெட்டியை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான புதுக்கோட்டை நோக்கி ஓடிப்போனார். பிற்பாடு இவ்விவகாரத்தில் பி.யூ.சின்னப்பாவுக்கு உதவியதாக எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மேல் பழி சுமத்தி கம்பெனி ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக கூறுகின்றனர்.

புதுக்கோட்டைக்கு சென்று அங்கு கொஞ்சகாலம் மாறிய குரல்வளத்துக்கேற்ப சங்கீத பயிற்சி மேற்கொண்ட கையோடு தீவிரமாக குஸ்தி பயிற்சிகள் மேற்கொண்டார். புதுக்கோட்டையில் உள்ள தால்மியான் கொட்டடி என்கிற சாமியாசாரி கொட்டடியில் சேர்ந்து ராமநாத ஆசாரியிடம், கத்திச் சண்டை, கம்புச்சண்டை போன்றவைகளில் நல்ல தேர்ச்சி பெற்று வந்தார். இது தவிர சுருள் பட்டா வீசுவதிலும் சின்னப்பா சூரர் ஆகிவிட்டார். குறிப்பாக  சுருள் பட்டா சுற்றுவதில் அவர் மிகவும் தேர்ச்சி பெற்றார். சுருள் பட்டா பயங்கரமான ஆயுதம், ஊமைத்துரை பயன்படுத்திய ஆயுதம். எதிரே  பத்தடி தூரத்தில் இருந்தாலும் தலையை கவ்வும்…. கொஞ்சம் விட்டால் அதை பிடித்திருப்பவர் தலையும் சேர்த்து எடுத்துவிடும். அப்படிப்பட்ட அபாயகரமான ஆயுதபயிற்சியில் அவர் மிகவும் தேர்ந்து விளங்கினார். அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான குஸ்தி பயிற்சி வீரர்கள் நஞ்சுண்டப்பா, ஆஷக் உஷேன், சியாமசுந்தர் ஆகியோர் புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு வந்து குஸ்தி போட்டிகளை நடத்தியபோது அவர்களோடு மோதி வெற்றிபெற்று புதுக்கோட்டையில் நாயகனாக வலம் வந்தார். உடம்பு பூராவும் பிரம்பு வளையங்களை மாட்டிக் கொண்டு தீ பந்தங்கள் சொருகிய கம்புகளை கையில் ஏந்தி, சண்டை போடும் ஆபத்தான விளையாட்டை சின்னப்பா புதுக்கோட்டையில் அன்றைய நீதிபதி ஸ்ரீ ரகுநாதய்யர் முன்னிலையில் செய்து காட்டி, சிறப்பு பரிசுகளை பெற்றார்.

இந்நிலையில் மீண்டும் நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஸ்டார் கம்பெனி தியேட்டருடன் ரங்கூனுக்கு சென்று ஆறு மாத காலம் நாடகம் நடத்தினார். எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர், சந்தானலட்சுமி, பி.எஸ்.சிவபாக்கியம், எம்.ஆர்.சுவாமிநாதன், எம்.ஜி.சக்ரபாணி, பி.ஜி.வெங்கடேசன் ஆகியோர் இந்த குழுவுடன் இருந்தனர். ரங்கூன் ஹரி கிருஷ்ணன் ஹாலில் சுமார் ஆறுமாத காலம் நாடகங்கள் நல்ல ஆதரவுடன் நடைபெற்றன. ராஜம்மாள், சந்திரகாந்தா போன்ற சமூக நாடகங்கள் பொதுமக்கள் ஆதரவை பெற்றன.

சந்திரகாந்தா நாடகத்துக்கு கிடைத்த அபாரமான வரவேற்பு ஜூபிடர் பிக்சர்ஸுக்கு சினிமாவாக எடுக்கும் ஆவலைத் தூண்ட அதில் சுண்டூர் இளவரசனாக நடித்த சின்னப்பாவே நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட, அதன் மூலம் சின்னப்பாவின் திரைவாழ்க்கை கணக்கும் துவங்கியது.

1936ஆம் ஆண்டு வெளியான சந்திரகாந்தா மூலம் சின்னச்சாமி  பி.யூ.சின்னப்பாவாக தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து சின்னப்பா பஞ்சாப் கேசரி, ராஜ்மோகன், அனாதைப்பெண், யயாதி, மாத்ருபூமி போன்ற படங்களில் நடித்தார். அனைத்தும் சுமாரான வெற்றியை பெற்றுவந்த நிலையில் அவரது வாழ்வில் திடீர் சறுக்கல். திரைவாழ்க்கையில் வெற்றியோடு வரும் இன்னும் சில மூன்று எழுத்து சமாச்சாரங்கள் அவரை நெருக்கி சூழ உடல்பருமன் அதிகமாகி தோற்றமே மாறிப்போனது. நெருங்கி வந்த அதிர்ஷ்ட தேவதைகளின் முகங்கள் மாறிப்போனது. வாய்ப்புகள் விலக மீண்டும் பழைய வாழ்க்கை நோக்கி புதுக்கோட்டைக்கே திரும்பினார்.

இந்தச் சூழலில்தான் வாழ்க்கை அவருக்கு இன்னொரு வாய்ப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தை பி.யூ.சின்னப்பாவின் வீடு தேடி அனுப்பி வைத்தது. அப்போது அவர் எடுக்க நினைத்த உத்தமபுத்திரன் படத்துக்கு வாள்வீச்சில் திறம்பெற்ற ஒரு நடிகர் தேவைப்பட அப்போது அதில் புகழ்பெற்று விளங்கிய ஒரே ஆள் சின்னப்பா மட்டும்தான். இதனால் திறமையை தேடி வாய்ப்பு புதுக்கோட்டைக்கு வந்தது. அதுவும் இரட்டை வேடம். தமிழில் முதல் இரட்டை வேடப்படம் என்ற புகழுடன் 1940ஆம் ஆண்டு வெளியான உத்தமபுத்திரன் மிகப்பெரிய வெற்றிபெற்று பி.யூ.சின்னப்பாவுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை உருவாக்கித்தந்தது.தொடர்ந்து ’தயாளன்’,’ தர்மவீரன்’, ’பிருதிவிராஜன்’,’மனோண்மணி’,’ஆர்யமாலா’ மற்றும் ’கண்ணகி’  என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி பெரு வெற்றிபெற்றன.

அதுவரை தியாகராஜ பாகவதரை மட்டுமே கொண்டாடி வந்த ரசிகர்கள் பி.யூ.சின்னப்பாவையும் பாகவதராக  கொண்டாடுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இரண்டு ரசிகர்களும் தியேட்டர்களில் மோதிக்கொண்ட சம்பவமும் அரங்கேறியது. சண்டைகள் கலவரமாகி சில இடங்களில் போலீஸ் வருமளவுக்கு பிரச்சனை ஆகியது.

ஒருபக்கம் தியாகராஜ பாகவதர் நிதானமாக படங்களை தேர்வுசெய்து நடிக்க சின்னப்பாவோ அதிரடியாக வருடத்துக்கு இரண்டு மூன்று படங்களாக நடித்து வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்.

பிருத்விராஜன் படத்தில் நடிக்கும்போது சம்யுக்தையாக நடித்த ஏ.சகுந்தலாவை உண்மையிலேயே வாழ்க்கை எனும் குதிரையில் ஏற்றிக்கொண்டு 1944-ல் சட்டப்படி திருமணமும் செய்துகொண்டார்.

கண்ணகியின் மிகப்பெரிய வெற்றி அவருக்கு இன்னும் புகழை பெற்றுத்தந்தது, அதில் வசனம் எழுதிய இளங்கோவன் மூலமாக அதுவரை இசையை மட்டுமே கவனித்து வந்த ரசிகர்களை வசனம் நோக்கி திருப்பினார். அவர் போட்ட பாதைதான் பிற்பாடு அண்ணா, கருணாநிதி போன்ற புரட்சி எழுத்தாளர்கள் வசம் சினிமா திசைதிருப்ப அடிகோலியது.  தொடர்ந்து அவர் மூன்று வேடங்களில் நடித்த மங்கையர்கரசியுடன் பங்கஜவல்லி, துளசி ஜலந்தா, விகடயோகி, கிருஷ்ணபக்தி ஆகிய படங்களும் அவருக்கு புகழையும் வெற்றியையும் ஈட்டித்தந்தன.

இப்படி தொடர்ந்து இரவு பகலாய் படப்பிடிப்பில் கலந்துகொண்டதன் காரணமாக உடல் சோர்வுற்ற போதெல்லாம் மதுவின் பிடியில் வீழத்துவங்க அதுவே அவரது வாழ்க்கையின் இறுதியாத்திரைக்கு வழி செய்து தந்தது.

தமிழ் திரையுலகில் முதன்முதலில் ’நடிக மன்னன்’ என புகழப்பட்ட சின்னப்பா 23/09/1951ஆம் ஆண்டு இரவு 9.45 மணிக்கு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

அவரது ஒரே மகன் ராஜ் பகதுர் பிற்பாடு ’கோவில் புறா’ எனும் படத்தில் நாயகனாக நடித்தபோது உலகம் எவ்வளவோ மாறிவிட்டிருந்தது. அந்த தலைமுறைக்கு பி.யூ.சின்னப்பா என்பது வெறும் பெயர். அச்சூழலில் பி.யூ.சின்னப்பாவின் மகன் என்ற விளம்பரம் எடுபடவில்லை.

அவரும் அப்பாவைப்போல சிறுவயதிலேயே மறைந்தும் போனார்.

( விரைவில் வெளிவரவிருக்கும் எனது தமிழ் சினிமா வரலாறு (1916-1947) எனும் நூலிலிருந்து நாடக தினத்துக்காக எடுத்தாளப்படுகிறது)

1 Comment

 1. Jan

  hey man
  for me it was a game changer when I found Rockwall and started investing with them
  my passive income started to grow much faster than before
  I’m really happy with me results and I’m so excited, because I know my passive income will increase every day (by contrast to fixed salary)
  https://janzac.com/how-to-earn-money-with-rockwall-investments/#my_rockwall_results

  wish you the best man. good luck!

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *