பேரன்புடன் – ஒரு கடிதம்

அன்புடன் நண்பன் இயக்குனர் ராமுக்கு
நேற்று இரவு பேரன்பு பார்த்தேன்…
உனது முந்தைய படங்களான கற்றது தமிழ், தங்க மீன்கள் மற்றும் தரமணி ஆகியவை குறித்து உன்னிடம் நேரிடையாக கடுமையாகவே விமர்சித்து வந்துள்ளேன், குறிப்பாக தங்க மீன்கள் தவிர மற்ற இரண்டு படங்கள் மீதும் எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் நேற்று பேரன்பு பார்த்தவுடன் எப்படிப்பட்ட மகத்தான கலைஞன் நீ என வியக்கத்தோன்றியது. ராம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதம் நீ
. இந்த படத்திலும் குறைகளை சொல்ல முடியும் ஆனால் படம் முடிந்து வீட்டுக்கு வந்தபின் நெடுநேரம் தூங்காமல் உன் படத்தை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். இது உலகப்படமா அல்லது தமிழின் ஆகச்சிறந்த படமா என்ற அளவுகோல்கள் கடந்து ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும். தமிழின் ஆகச்சிறந்த இயக்குனர் நீ. உன்னளவுக்கு உயர்ந்த சிந்தனையுடன் படம் எடுத்தவர்கள் தமிழில் யாரும் இல்லவே இல்லை. பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்றவர்கள் கூட கலையம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே படங்களை எடுத்தனர். ஆனால் மனித மனத்தின் தேவைகள் குறித்தும் படைப்பின் வழியாக தமிழ் சமூகத்துக்கு மாற்று சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் ஒரு இயக்குனராக உன் குருநாதர்களை நீ கடந்து நிற்கிறாய்… உன்னை அண்ணாந்து பார்க்கிறேன், மேகங்களை கடந்த உயரத்தில் தெரிகிறது உன் கண்ணாடியணிந்த முகம்.
பிரபஞ்சத்தின் சக உயிரிகளிடமும் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களிடமும் படைப்பின் வழியாக நீ காட்டும் பேரன்பு மகத்தானது. படம் பற்றி பேச எவ்வளவோ இருக்கிறது. அதை இப்படி செய்திருக்கலாம் இதை இப்படி செய்திருக்கலாம் என. ஆனால் அவையாவும் அபிப்ராயங்களே. தமிழ் சினிமாவின் வழமை உடைக்கும் உன் முயற்சி ஒருவகையில் சினிமா புரட்சி. உன் அபாரமான உழைப்புக்கும் சிந்தனைக்கும் தமிழுலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நாள் ஒன்று வரும்… அது நீ வாழும் காலத்திலேயே கிட்டும்,
இருபது வருடங்களுக்கு முன் நா.முத்துக்குமாரும் நானும் உன்னோடு கழித்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். பெருமையாக இருக்கிறது. அவன் இன்மையை உணருகிறேன். .
தமிழுலகுக்கு நீ கற்றுத்தரும் பேரன்புடன்

அஜயன் பாலா
02-02-2019
சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *