இந்திய சினிமா – 1972க்கு முன் உலக சினிமாவில் இந்தியத் தடங்கள்

உலக சினிமாவின் போற்றத்தக்க படங்கள் வரிசையில் இந்தியாவின் பதேர் பாஞ்சாலிக்கு பிறகு மகத்தான படங்கள் எதுவும் வரவில்லை. காந்தி(Gandhi), பண்டிட் குயின்(Bandit Queen), ஸ்லம் டாக் மில்லியனர்(Slumdog millionaire) என இந்தியாவில் உருவான ஆங்கிலப்படங்கள் அவ்வப்போது சில சலனத்தை உலக அரங்கில் உருவாக்கி வந்தாலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்திய மொழிப் படங்கள் பதேர் பாஞ்சாலி அடைந்த உச்சசாதனையைத்தொடரமுடியவில்லை. ஆனாலும் அதற்கான முயற்சிகள் இந்தியாவில் தொடர்ந்து நடந்த படியேதான் இருக்கின்றன.

அதேபோல சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி (1955) க்கு பிறகுதான் இந்திய சினிமா உலக அளவில் அங்கீகாரம் பெற்றதாக பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது அது முற்றிலும்தவறு. ரே-வுக்கு முன்பே சில படங்கள் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு சிறந்த படத்துக்கான பரிசை பெற்றுள்ளன.

சாந்த துக்காராம் 1936 (Sant tukaram)

இத்தாலியின் வெனிஸ் திரைப்பட விருது விழா துவக்கி ஐந்தாம் ஆண்டு 1937 ல் மராத்தி மொழிப்படமான சாந்த துக்காராம் கலந்து கொண்டு அந்த ஆண்டின் உலகின் சிறந்த படங்களில் ஒன்றாக சிறப்பு பரிசைப் பெற்றது

இந்த படத்தை Vishnupant Govind Dhamle and Sheikh Fattelal எனும் இருவர் சேர்ந்து இயக்கியிருக்கின்றனர். புகழ்பெற்ற இயக்குனர்வி. சாந்தாராம் தன் பிரபாத் ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்த இப்படம் 12 டிசம்பர் 1936ல் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடியிருக்கிறது . இந்தியாவில் அதிக நாட்கள் ஓடிய முதல் படம் இதுதான் .
இந்த படம் வெனிஸ் விழாவில் விருது பெற்ற தகவல் வெளியுலகுக்கு தெரியவந்ததே ஒரு சுவாரசியமான விஷயம்.

வெனிஸ் திரைப்பட விழா விருதுக்கமிட்டி சிறந்த படமாக இந்த படத்தைத் தேர்வு செய்யப்பட்டமைக்கு தந்த பட்டயம் 1974ல் புனே வில் சட்டக்கல்லூரி சாலையின் குப்பைத்தொட்டி ஒன்றில் கிடந்திருக்கிறது.

அந்த நேரம்அந்த வழியாக வந்த புகழ்பெற்ற மலையாள ஒளிப்பதிவாளரான சன்னிஜோசப்கண்ணில் அது படப்போக அதை எடுத்துப்பார்த்த அவர் அதிர்ச்சியடைந்து புனே திரைப்படக்கல்லூரி அதிகாரிகளிடம் தெரிவிக்க அதன் பிறகுதான் இப்படி ஒரு படம் வெனிஸ் விழாவில் விருது பெற்ற சம்பவமே மீண்டும் திரையுலகுகிற்கு தெரிய வந்துள்ளது.

1946 நீச்ச நகர் (Neecha Nagar)
சேத்தன் ஆனந்த் (chetan Anand) இயக்கத்தில் 1946-ல் வெளியான நீச்ச நகர்தான் சமூக அரசியலை பேசிய இந்தியாவின் முதல் படம். சேத்தன் ஆனந்த் இயக்கிய இந்தப் படம் தான் பிரான்ஸின் கான் விருது Grand Prix du Festival International du Film வாங்கிய முதல் இந்தியப் படம். அதுவும் அந்த விருது துவங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே முதல் விருதைப் பெற்றது என்பதுதான் இதில் விசேஷம் அதுவும் யாரோடு தெரியுமா, புகழ்ப்பெற்ற நியோ ரியலிஸ இத்தாலி படமான ரோம் ஓபன் சிட்டியுடன் இந்த படம் விருதைப் பகிர்ந்து கொண்டது. நடிகர் தேவ் ஆனந்த்(Dev Anand), இயக்குனர் விஜய் ஆனந்த் (Vijay Anand)ஆகியோரின் மூத்த சகோதரர் தான் இந்த படத்தின் இயக்குனரான சேத்தன் ஆனந்த். மாக்ஸிம் கார்க்கியின் The Lower Depths. தான் படத்தின் மூலக்கதை.

1953 தோ பிகா ஜமீன் (Do Bigha Zamin)

1953-ல் பிமல் ராய்(Bimal Roy) இயக்கத்தில் வெளியான தோ பிகா ஜமீன் சமூக அரசியலை அழுத்தமாக பேசிய இன்னொரு முக்கியமான படம். பிமல் ராய் என வெறும் பெயரைச் சொல்வதைவிட இவர்தான் தேவதாஸ்(Devdas-1955)எனும் புகழ்பெற்ற இந்திய காதல் காவியத்தை வங்காளத்தில் எடுத்தவர் . பிற்பாடு தெலுங்கு தமிழ் என பலமுறை மீட்டுருவாக்கம் கண்டு தேவதாஸ் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றது நாடறிந்த சேதி.

வறுமை காரணமாக 60ரூபாய் ஜமீனிடம் கடன் வாங்கும் ஏழை விவசாயியின் கதைதான் ” தோ பிகா ஜமீன் “ . அந்தக் கடனை அடைக்க அவன் படாதபாடு படுவான், பிற்பாடு நகரத்துக்குச் சென்று ரிக்‌ஷா இழுத்து கடுமையாக உழைத்து பணம் சம்பாதித்து வீடு திரும்பும் போது அவன் நிலம் முழுவதுமாக ஜமீனால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் தொழிற்சாலைக்கான ஆரம்பப் பணிகள் நடந்துகொண்டிருக்கும்.

மேலும் அவன் நிலத்தில் நிற்கக்கூட உரிமை மறுக்கப்பட்டு அவனும் அவன் குடும்பமும் ஜமீன் ஆட்களால் விரட்டியடிக்கப்படுவர். இறுதியாக அவன் அங்கிருந்து புறப்படும் போது ஒரு பிடி மண் எடுக்கப் போக, அது கூட அவன் கையிலிருந்து தட்டி பறிக்கப்படும்.
கண்ணீரை மட்டும் நிலத்துக்கு சொந்தமாக்கிவிட்டு வெறும் கையோடு ஊரை விட்டு அவன் குடும்பத்தோடு புறப்படுவதோடு படம் முடியும் .இந்த படம் ஏழாவது கான் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது.

1951 அமர் பூபாலி (Amar Bhoopali)

வி. சாந்தாராம் இயக்கத்தில் உருவான இப்படம் கான் திரைப்பட விழாவில் திரையிடும் கவுரவத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் லதா மங்கேஷ்கர் பாடி வசந்த் தேசாய் இசையமைத்த கன்ஷியாம் சுந்தரா ( Ghanshyama sundara) பாடலுக்காக இசைப் பிரிவில் The Immortal Song, France : Le Chant Immorte Grand Prize of the Festival விருதைபெற்றது . இன்றும் அப்பாடல் சிறந்தபக்திப்பாடலாகவழிபாட்டுத்தலங்களில் வட இந்தியா முழுமைக்கும் பாடப்பட்டு வருகிறது,. கான் விருது இதை 60 வருடங்களுக்கு முன்பே காலத்தால் அழியாத இசை என தீர்மானித்தது எவ்வளவு உண்மை என்பதற்கு உதாரணம் இப் பாடல் பல்வேறு இசைகலைஞர்களால் காலத்திற்கேற்ப மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு இன்றும் விற்பனையில் சாதனை செய்து வருவதுதான்

இதனைத் தொடர்ந்து 1956-ல் பதேர் பாஞ்சாலி அந்த ஆண்டுக்கான சிறந்த படம் போட்டிப்பிரிவில் கலந்துகொண்டு சிறந்த மனித ஆவணம் Palme d’Or விருது பெற்றதோடு சிறந்த மனித ஆவணம் என்கிற அங்கீகாரத்தையும் பெற்றது. உடன் அந்த ஆண்டில் உலகம் முழுக்க பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றதோடு தலை சிறந்த திரைப்படமாக இன்றும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது

(பதேர் பாஞ்சாலி குறித்தும் சத்யஜித்ரே, ரித்விக் கட்டக்(Ritwik Ghatak) ,குருதத்(Gurudutt) குறித்தும் முழு நீளக்கட்டுரைகள் உலகசினிமா வரலாறு பாகம் இரண்டு மறுமலர்ச்சி யுகம் 1929-1972 நூலில் முழுமையாக குறிப்பிடப்பட்டுள்ளது )

1958 தோ ஆங்கே பாராத் (Do Aankhen barah haath)

வி. சாந்தாராம் இயக்கத்தில் வெளியான இப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் அந்த ஆண்டின் சிறந்த இரண்டாவது படத்துக்கான வெள்ளிகரடி விருதை பரிசாக பெற்றது . மற்றும் அந்த வருடத்துக்கான கோல்டன் க்ளோப் விருதுக்கான Samuel Goldwyn Award. க்கான இறுதிப் பட்டியல் வரை தேர்வாகியிருந்தது. இந்த படத்தின் கதைதான் பிற்பாடு 1975ல் முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்க பல்லாண்டு வாழ்க எனும் படமாக வெளியானது.பிரம்மாண்ட வணிக வெற்றி

இந்திய சினிமாவின் பொழுதுபோக்கு பிரிவில் உருவாகியிருந்தாலும் 1972க்கு முன் வெளி நாடுகளில் மிகப்பெரிய அங்கீகாரங்கள் பெற்ற இரு படங்கள் ஆவாரா மற்றும் மதர் இந்தியா ஆகியவை .

ஆவாரா (Awaara)

ராஜ்கபூர் நர்கீஸ்தத் ஜோடியாக நடித்து 1951ல் வெளியான ஆவாரா இந்தியாவில் மிகப்பெரிய வணிக வெற்றியை பெற்றது . அதன் மொத்த இந்திய வசூல் 2.3 கோடி ரூபாய் . இது தான் அப்போதைக்கு இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் . இந்தியா மட்டுமல்லாமல் இப்படம் ரஷ்யாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று ராஜ் கபூரை இந்தியாவின் கலாச்சார அடையாளமாக மாற்றியது . இதன் வெற்றியை தொடர்ந்து இந்திய படங்களையும் இந்திய கலாச்சாரத்தின் மீது ஆர்வத்தையும் ரஷ்யர்களுக்குள் உண்டாக்கியது என்றால் மிகையில்லை . இந்த வசூல் சாதனையை பிற்பாடு 80களில் வந்த மிதுன் சக்கரவர்த்தியின் டிஸ்கோ டான்ஸர்(Disco Dancer) படம் தான் முறியடித்தது . ரஷ்யாவில் டிஸ்கோ டான்ஸர் ஏன் வெற்றியடைந்தது என்பதற்கு பல அரசியல் சமூக காரணங்கள் இருப்பதை ரஷ்ய அரசியலை அதன் முந்தைய ஆண்டுகளை உற்று வாசிப்பவர்களால் புரிந்து கொள்ளமுடியும் . மக்களின் இந்த கொண்டாட்ட உணர்வு தான் அடுத்து வந்த பெரிஸ்த்ராய்க்கா கிளாஸ் நாஸ்ட்(Perestroika and Glasnost) ஆகியவற்றுக்கு வழி போட்டுக்கொடுத்தது.

மதர் இந்தியா (Mother India)
25 October 1957 வருடம் வெளியான மதர் இந்தியா இந்தியாவில் மிகப்பெரிய வணிக வெற்றியீட்டியது போல அயல் நாடுகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மகபூப்கான்(Mehboob Khan) இயக்கிய இந்த படத்திலும் நாயகி நர்கீஸ்தத். இந்த படத்தின் மையப் பாத்திரமான தாய் பாத்திரத்தில் நர்கீஸ் நடிக்க அவருடைய இரண்டு மகன்களாக சுனில் தத் மற்றும் ராஜேந்திரகுமார் நடித்திருந்தனர் . மகனாக நடித்த சுனில் தத்தையே பிற்பாடு நர்கிஸ் காதல் திருமணம் செய்ய நேர்ந்தது இந்திய சினிமாவின் அதிசயங்களுள் ஒன்று.
1958ம் ஆண்டு நடந்த ஆஸ்கார் பரிசு போட்டியில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான போட்டிப்பிரிவின் கடைசி ஐந்து படங்களில் ஒன்றாக தேர்வானது இப் படத்தின் மிகப்பெரிய சாதனை , ஆஸ்காரில் அப்படியான தகுதியை அடைந்த முதல் இந்திய படமென்ற பெருமையும் இதற்கு உண்டு. ஆனால் இறுதியில் அந்த வருடம் விருது இத்தாலிய இயக்குனர் பெட்ரிக்கோ பெலினியின்(Federico Fellini) Nights of Cabiria படத்தின் முன் ஒரே ஓட்டில் தோல்வியடைந்தது . தன் படத்துக்கு ஆஸ்கார் நிச்சயம் கிடைக்கும் என எதிர்ப்பார்த்து காத்திருந்த இயக்குனர் மகபூப்கானால் இந்த தோல்வியை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை .
இந்த படத்திற்கு பிறகுதான் 1989ல் மீரா நாயரரின்(Mira nair) மிஸிப்பி மசாலா(Mississippi Masala) படம்தான் இறுதி போட்டியில் கடைசி ஐந்து படங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து 2002ல் லகான் (Lagaan) படமும் இதே வெளிநாட்டு சிறந்த படங்களில் இறுதி ஐந்து தகுதியான படங்களுள் ஒன்றாக தேர்வாக காத்திருந்தது .
இந்திய சினிமா (1972-2000)
பேர்லல் சினிமாக்கள்

சத்யஜித்ரே வின் பதேர் பாஞ்சாலிக்கு கிடைத்த அங்கீகாரம் இந்திய சினிமாவில் கலை சினிமாவுக்கான மறுமலர்ச்சியை உருவாக்க துவங்கியது. திரைப்படச்சங்கங்கள் உருவாகின . அதன் வழியாக இந்தியாவில் சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இது புதிய தலைமுறை இளைஞர்களை உருவாக்கியது. அவர்கள் திரைப்பட சங்கங்களை உருவாக்கி சினிமா குறித்த ரசனையை பரவலாக கொண்டுச் சென்றனர். குறிப்பாக வங்காளம் மற்றும் கேரளாவில் இது துரிதமாக இயங்கியது . வெறும் படம் பார்ப்பது மட்டுமல்லாமல் கூட்டமாக நமது படங்களையும் உலக சினிமாக்களையும் அலச துவங்கினர் .

பெரும்பாலும் நமது படங்கள் நாயகத்தன்மையையும்மிகையுணர்வு நாடக காட்சிகளையும் ஆடல் பாடல்களையுமே சார்ந்திருக்கின்றன.இவைதான்நம் ரசனைக்குறைவுக்கு காரணம் என முடிவு செய்தனர் . மேலும் நம் படங்களில் காமிரா வெறும் வசனம் பேசுபவர்களை வேடிக்கை பார்க்கும் சினிமாவாக மட்டுமே இருக்கிறது. ஐரோப்பிய சினிமாவின் கவித்துவமோ காட்சி மொழி வழி கதையாடலோ நமது படங்களில் இல்லை என்பதை உணர்ந்தனர் . அதே சமயம் வணிக சினிமாக்களிலும் சில மாறுதல்கள் உருவாகத் துவங்கின . அவை 1972க்கு பிறகுதான் துணிந்து அரசியலை பேசத் துவங்கின. அன்றைய இந்திய சமூகத்தின் சமூக அரசியல் பொருளாதார மாற்றங்களும் இதற்கு முக்கியக்காரணம் .
நவீன இந்தியாவின் தோற்றம்

எழுபதுகளின் துவக்கம்தான் இந்தியாவில் பல மாற்றங்களை உருவாக்கின . அறுபதுகளில் துவங்கிய நகரமயமாக்கள் தொழிற்சாலை பெருக்கம் ஆகியவை எழுபதுகளின் துவக்கத்தில் உச்சத்தில் இருந்தன .புகைக்கும் உயரமான கூண்டுகளுடன் பெரிய தொழி்ற்சாலைகள் நகரங்களில் பெருகி மக்கள் கிராமம் சிற்றூர்களிலிருந்து புறப்பட்டு நகரங்களை நோக்கி நகரத்துவங்கினர் .

மும்பை கல்கத்தா டெல்லி சென்னை போன்ற நகரங்களில் கட்டிடங்களும் மிகப்பெரிய குடிசை பகுதிகளும் அதிகம் தோன்றத்துவங்கின . வேலையில்லாதிண்டாட்டம் பெருகியது.
பெண்கள் வேலைக்கு போக வெளியே வந்தனர். உறவுச் சிக்கல்கள் உருவாகின. கூட்டுக்குடும்பங்கள் சிதையத்துவங்கின .நில உடமை வாழ்க்கையின் போலித்தனங்கள் உடையத்துவங்கின . படித்த வர்க்கம் அல்லது மாத சம்பளம் வாங்கும் புது சமூகம் பெருகியது . பத்திரிக்கைகள் அதிகமாகின உடன் மக்களின் ரசனைகளும் மாறத்துவங்கின லைப்பாய்சோப்பும், பாண்ட்ஸ்பவுடரும் அதிகமாக விற்பனையாகத் துவங்கின

இது சினிமாவிலும் பிரதிபலிக்க துவங்கியது . இந்த மாறிவிட்ட வாழ்க்கையை அது சார்ந்த மக்களின் பிரச்சனைகளை சினிமாவில் பார்க்கத்துவங்கினர் அதுவரை ஒரே மாதிரியான காதல் கதைகளைப் பார்த்து பார்த்து போரடித்துப்போன மக்களின் எதிர்பார்ப்பும் ரசனை மாற்றத்துக்கான நெருக்கடியை உருவாக்கியபோது இந்திய சினிமாவில் சில அதிசயங்கள் நிகழத்துவங்கின .

அது மைய நீரோட்ட இந்தி சினிமாக்களில் பாதிக்கத் துவங்கியது, அப்படங்களில் கோபக்கார இளைஞன் பாத்திரத்தில் அமிதாப் பச்சன் புதிய நட்சத்திரமாக உருவாகிறார்.

இன்னொருபக்கம் வங்காளத்திலிருந்து மிருணாள் சென்(Mrinal Sen) ,ஷியாம் பெனகல்(Shyam Benegal), கோவிந்த் நிகலானி(Govind Nihalani), ரிஷிகேஷ் முகர்ஜி (Hrishikesh Mukherjee), பாசு சட்டர்ஜி(Basu chatterjee) , பாசு பட்டாச்சார்யா(Basu Bhattacharya) , மணிகவுல்(ManiKaul) , தபன் சின்ஹா (Tapan sinha), எம்.எஸ். சாத்யூ(M.S Sathyu) , புத்த தேவ் தாஸ் குப்தா(Buddha Dev Das guptha) ,கவுதம் கோஷ் (Gautam Ghosh) கன்னடத்தில் க்ரீஷ் காசரவள்ளி (Girish Kasaravalli) , கேரளாவில் அடூர் கோபாலகிருஷ்ணன் (AdoorGopalakrishnan),ஜி.அரவிந்தன் (G.Aravindan) போன்ற இயக்குனர்கள் உருவாகத்துவங்கினர் . இவர்களின் படங்கள் அன்று இந்திய வணிக சினிமாக்கலோடு வெளியாகி மக்களிடையே வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன

இவ்வகை சினிமாக்களில் நாயக வழிபாடு ஆக்ஷன் காட்சிகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்துமே நாம் வாழ்வில் சந்திக்கும் அடித்தட்டு நடுத்தர மக்களை பிரதிப்பலிப்பது போல உருவாக்கப்பட்டன அதுவரை நாயகர்கள் ராஜேஷ்கண்ணா போல அழகாக பளபளவென இருந்தாக வேண்டும் என்ற மரபு உடைக்கப்பட்டது. நஸ்ரூதீன்ஷா,ஓம்புரி, அமோல்பலேகர் போன்ற திறமை வாய்ந்த நடிகர்கள் நாயகர்களாகியினர்.

ஒருபக்கம் பர்வீன் பாபிகளும், ஹேமமாலினிகளும் பளபள மேக்கப்புகளுடன் கனவுக்கன்னிகளாக வலம் வந்த அதே நேரத்தில் முகப்பூச்சுகள் இல்லாமல் எதார்த்த முகத்துடன் எளிய ஆடைகளுடன் நடுத்தர குடிசைபெண்களாக ஸ்மிதா பட்டீல் , ஷ்பனாஆஸ்மி, தமிழில் நம் ஷோபா போல புறம் தாண்டி உணர்வை இயல்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க நடிகைகள் நாயகிகளாக அறிமுகமாயினர் .

பலரும் பேர்லல் சினிமா (parlell cinema) என்றவுடனே கலை சினிமாவையும் அதையும் போட்டு குழப்பிக்கொள்கின்றனர் கலை சினிமா என்பது எந்த சமரசமும் இல்லாமல் சினிமா எனும் கலையை முழுதாக நேசித்து வணிக சினிமாவின் கட்டமைவுகளை புறக்கணித்து எடுக்கப்படுவது . production , distribution, , exhibition பொதுவாக இவை மூன்றும் தான் வணிக சினிமாவின் முக்கிய கூறுகள் . இதில் distribution, தவிர்த்து நேரடியாக தயாரிப்பதும் தியேட்டர்கள் அல்லாமல் திரைப்பட விழாக்களில் வெளியிடுவதும் அதற்காக உருவாக்கப்படும் படங்கள் கலை சினிமா.

இவை ஏதாவது வெளிநாடுகளில் போட்டியில் வென்று பரிசு வாங்கியப்பின் தமிழ்நாட்டில் விநியோக உரிமை பெற்று குறைந்த அரங்கங்களில் திரயிடும் வாய்ப்பை பெறும் இவைதான் கலை சினிமாக்கள்

அதே சமயம் வணிக சினிமாவின் செயல்பாட்டுக்குள் முழுவதுமாக பொருந்தி வழக்கமான ஹீரோயிசம் நாடகத் தன்மையான வசனம் இவையெதுவும் இல்லாமல் உண்மையை சமூக அரசியலை சினிமாவின் வழியாக கொண்டுசெல்லும் புதிய வகை படங்கள் உருவாகின . இதில் பாடல் காட்சிகளுக்கு அனுமதி உண்டு ஆனால் அதில் பிரம்மாண்ட செட்டுகளோ நடன அமைப்புகளோ இருக்காது கலை சினிமா போல திரைப்பட விழாக்களுக்கான படமாக மட்டுமே இல்லாமல் வெகுமக்கள் பார்க்கும் விதமான சமரசத்துடன் இவை அமைந்தன.

இவற்றையே பேர்லல் சினிமாக்கள் என காலம் பின்னாள் அடைமொழியிட்டு அழைத்துக்கொண்டது. மைய நீரோட்ட வணிக சினிமா கட்டமைப்புகளுக்கு இணையாக தனித்த வழியில் இப்படங்கள் உருவானதால் இணைகோட்டு சினிமா எனும் பேரைப்பெற்றது.1970களில் வங்காளத்தில் துவங்கிய பேர்லல் சினிமாக்கள் அலை மெல்ல இந்திக்கு பரவி பின் கன்னடம், மலையாளம் என விரிந்து எழுபதுகளின் இறுதியில் தமிழ் நாட்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி 80பதுகளின் இறுதியோடு முடிவுக்கு வந்தது

மிருணாள் சென் Mrinal Sen ( 14 May 1923 – )

இந்த பேர்லல் சினிமா அலையின் தந்தை என்று குறிபிடப்படும் மிருணாள் சென்னின் படங்கள் மனித வழ்வை கூர்ந்து நோக்கி அதன் அரசியலை எதார்த்த பின் புலத்தில் பேசின. இன்று பங்களாதேஷ் என அழைக்கப்படும் கிழக்கு வங்காளத்தில் 1923ல் பிறந்த மிருணாள் சென் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டபடிப்பு முடித்துவிட்டு சில காலம் இடதுசாரி இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர். சமுக மாற்றங்களை சினிமா எனும் ஊடகம் மூலம் அழுத்தமாக கூற முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மிருணாள் சென் திரைப்டத்துறையில் இணைந்து1955ல் Raat Bhore, எனும் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானர் . அப்படத்தில் நடித்த உத்தம் குமார் பிற்பாடு வங்காளத்தின் மிகப்பெரிய நட்சத்திரமாக அறியப்பட்டார். தொடர்ந்து பல படங்கள் இயக்கி வந்தாலும் அவரை இந்திய இயக்குனராக அடையாளம் காட்டியது 1969-ல் வெளியான இவரது புவன் ஷோம். இப் படம்தான் பேர்லல் சினிமாவின் துவக்கப்புள்ளி எனலாம் சத்யஜித் ரே, கட்டக்-குப் பிறகு எதார்த்தம், தீவிரமான காட்சி மொழி, இரண்டோடு கூர்மையான அரசியலையும் பேசியது.

இவரது ஏக் தீன் பிரதின் (Ek Din Pratidin ) படம் வேலைக்கு போய் வீடு திரும்பாத ஒரு இளம் பெண்ணைப்பற்றிய கதை. அந்த ஒரு இரவில் அந்த வீட்டின் அனைவரும் பதட்டமாகி என்னென்ன செய்கிறார்கள் என காட்சிகளில் சொல்லிக்கொண்டிருக்க மறுநாள் காலையில் அவள் யாரையும் எதையும் பொருட்படுத்தாமல் அசட்டையாக அலட்டிக்கொள்ளாமல் வீட்டுக்குள் நுழைய படம் முடிகிறது. அந்த இரவில் அவள் என்ன ஆனாள் எங்கே போனாள் எதையும் இயக்குனர் சொல்லவில்லை. பலரும் அவரைத் துரத்தி துரத்தி கேட்டனர் அவள் என்ன ஆனாள் யாரிடமாவதுபடுத்தாளா எனகேட்க மிருணாள்சென் எனக்கு தெரியாது ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம் என சொல்ல, இந்த பதில் அப்போது பெரும் அதிர்ச்சியை மீடியாக்களின் மத்தியில் உருவாக்கியது.

Chorus 1974,Mrigayaa 1976: : Akaler Sandhane 1980 : Oka Oori Katha 1977 , Khandhar 1984 1983 Kharij Chaalchitra 1987 என மொத்தம் 28முழு நீள படங்களும் நான்கு ஆவணபடங்களும் இயக்கியிருக்கிறார்.
Moscow International Film Festival , Berlin International Film Festival, Cannes Film Festival – Jury Prize
என உலகின் சிறந்த திரைப்பட விழாக்கள் அனைத்திலும் கலந்துகொண்டு விருதுகள் பல பெற்றுள்ளன . 32 வது பெர்லின் திரைப்பட விழாவின் நடுவராகவும் பணியாற்ற அழைத்து விழாக்குழு இவரை பெருமைப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இவரது படங்கள் 19க்கு மேற்பட்ட தேசிய விருதுகளை குவித்திருக்கிறது.
ரிஷிகேஷ் முகர்ஜி: Hrishikesh Mukherjee (30 September 1922 – 27 August 2006)
வங்காளம் இந்திய சினிமாவுக்கு கொடுத்த மற்றுமொரு சிறந்த இயக்குனர் 1957 முதல் படம் Musafir முசாபிர் துவங்கி 1997 ல் இறுதிப்படம் Jhooth Bole Kauwa Kaate வரை நான்குதலைமுறைஇயக்குனர்களுடன்நாற்பதுக்குமேற்பட்ட படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளரகவும் படத்தொகுப்பாளராகவும் பல படங்களில் பணி புரிந்து பின் பிமல்ராயிடம் தோ பிகா ஜமின் தேவதாஸ் ஆகிய படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்து 1957ல் இயக்குனராக பரிணாமல் பெற்றவர்.
முதல் படம் அனுராதா 1961ம் ஆண்டு Berlin International Film Festivalலில் தங்ககரடி விருதுக்கான இறுதிபட்டியலில் தேர்வு செய்யப்பட்டது Asli-Naqli (1962), Anand (1971),, Guddi (1971), Bawarchi (1972), Abhimaan (1973), , Chupke Chupke (1975), Gol Maal (1979), போன்றவை இவர் இயக்கத்தில் சிலகுறிப்பிடத்தகுந்த படங்கள் ஏழு தேசிய விருதுகளை பெற்ற இவருக்கு இந்திய அரசு இவரது சேவையை பாராட்டி தாதா சாஹிப் பால்கே விருது வழங்கி கவுரவித்துள்ளது

ஷியாம் பெனகல் Shyam Benegal (born 14 December 1934)

மிருணாள் சென்னுக்கு அடுத்தப்படியாக பேர்லல் சினிமாவின் உயிர்நாடியாக கருதப்படுபவர் இயக்குனர் ஷியாம் பெனகல் . துல்லியமான காட்சி மொழி ,அழுத்தமான திரைக்கதை , எதார்த்த காட்சியமைப்புகள் ஆகியவை ஷியாம் பெனகலின் பலம் . ஆந்திரா மாநிலம் செகந்திராபாத்தில் 14 December 1934ல் பிறந்த பெனகல் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்துவிட்டு சினிமா மீதான ஆர்வத்துடன் ஹைதராபாத் பிலிம் சொசைட்டி ஒன்றை நண்பர்களுடன் துவக்கினார்

அவருக்கு சினிமா மீதான ஆர்வத்தை கிளர்வதற்கு இன்னுமொரு முக்கியகாரணம் அவரது தூரத்து உறவினர் அவரும் புகழ்பெற்ற இயக்குனர் .பியாசா எனும் காவியத்தை தந்த குருதத் தான் அவர் . குருதத்தின் பாட்டியும் ஷியாம் பெனகலின் பாட்டியும் அக்கா தங்கை .
பட்ட படிப்பு முடித்த கையோடு புனா பிலிம் இன்ஸ்டியூட்டில் இயக்குனர் பிரிவில் மாணவராக சேர்ந்தவர் துவக்கத்தில் ஆவணபடங்கள் இயக்குவதில் ஆர்வமாக இருந்தார் . 1974ல் இவர் இயக்கிய முதல் முழு நீளப்படம் ஆங்கூர் . ஷ்ப்ணா ஆஸ்மி ஆனந்த் நாக் இருவரையும் அறிமுகப்படுத்திய முதல் படமே தேசிய விருதை பெற்றதோடு இந்தியா சார்பாக ஆஸ்கார் விருதுக்காக அந்த வருடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது .1975ல் வெளியான மூன்றாவது படம் Nishant அந்த ஆண்டு கான் விருதுக்காக போட்டிப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

அடுத்த படமான மாந்தன் குஜராத்தின் வெள்ளை புரட்சி என்றழைக்கபடும் கிராம கூட்டுறவு பால் பண்ணைகள் பற்றியது. இதுவே இந்தியாவின் முதல் க்ரவுட் பண்டட் எனப்படும் மக்கள் பணத்தில் உருவான திரைப்படம் . கிட்டத்தட்ட குஜாரத்தின் ஐந்து லட்சம் விவசாயிகள் நபர் ஒருவருக்கு 2 ரூபாய் போட்டு தயாரிக்கப்பட்ட முதல் படம் . படம் வெளியான போது தாங்களே தயாரித்த படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக பால் கேனுடன் தியேட்டருக்கு வந்து பார்த்தது அரிய காட்சி
தொடர்ந்து ஹன்ஸா வடேகர் எனும் மராத்தி நடிகையின் வாழ்க்கையை அடியொற்றி ஸ்மிதா பாட்டீல் நடிக்க இவர் இயக்கிய பூமிகா மிகப்பெரிய வெற்றியை பெற்றது . 1985ல் இவர் இயக்கிய சத்யஜித் ரே குறித்த ஆவணப்படம் இவரது முக்கியமான படைப்பாக கருதப்படுகிறது. இதுவரை இவர் எடுத்துள்ள 25 முழு நீள படங்களில் மண்டி , மம்மோ, சர்தாரீ பேகம் ஜுபைதா ,போன்ற படங்கள் குறிப்பிடத்தகுந்தவை

1981ல் இவர் இயக்கத்தில் வெளியான கலியுக் மாஸ்கோ திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கம் வென்றது . பத்துக்குமேற்பட்ட படங்கள் இந்தியாவின் சிறந்த படங்களுக்கான தேசியவிருதை பெற்றுள்ளது வாழ் நாள் சாதனைக்காக இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதாசாகிப் பால்கே விருது வழங்கி இந்திய அரசு இவரை கவுரவித்துள்ளது

கோவிந்த் நிகலாணி Govind Nihalani (born 19 December 1940)

ஷியாம் பெனகலின் பல முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி ஒளிப்பதிவாளராக தேசிய விருதுகளைப்பெற்ற பின் இயக்குனராக பரிணமித்தவர் கோவிந்த் நிகலாணி. பாகிஸ்தானை சேர்ந்த கராச்சியில் சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ் இந்தியாவில் 1940ல் பிறந்த 1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது குடும்பத்துடன் இந்தியா வந்து சேர்ந்தவர் . இந்தியாவின் புகழ்பெற்ற கறுப்பு வெள்ளை ஒளிப்பதிவின் மேதை என அறியப்படும் வி. கே. மூர்த்தி எனும் ஒளிப்பதிவாளரிடம் உதவியாளராக பணி புரிந்து பின் ஷியாம் பெனகலின் முதல் படமான ஆங்கூர் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தொடர்ந்து அவரோடு முக்கியாமன படங்களில் தன் பங்களிப்பை செய்தவர் 1980ல் என் எஃப்டிசி தயாரிப்பில் ஆக்ரோஷ் முதல் படத்தை இயக்கினார் தொடர்ந்துஅர்த்சத்யா(Ardhsathya),த்மஸ்(Tamas),பார்ட்டி(Party),த்ருஷ்டி(Drishti),பிதா
(Pita),துரோகால்(Droh Kaal) போன்ற சமூக அரசியலைத் தீவிரமாக பேசிய படங்களை இயக்கி இந்தியாவின் மிக முக்கியமான் பேர்லல் சினிமா இயக்குனாராக அறியப்பட்டார்

சிறந்த ஒளிப்பதிவாளர் சிறந்த இயக்குனர் என பத்துக்குமேற்பட்ட இந்திய அரசின் தேசிய விருதுகளை பெற்றவர் இவரது த்ரோகால் திரைப்படம் தமிழில் குருதிப்புனல் என வெளிவந்து இந்தியா சார்பாக அந்த வருடத்தின் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது

கவுதம் கோஷ் Gautam Ghosh (born 24 July 1950)
சத்தியஜித்ரே.,மிருணாள்சென், புத்ததேவ் தாஸ் குப்தா ஆகியோர் வரிசையில் வந்த வங்காள இயக்குனரான கவுதம் கோஷ் பத்தே திரைபடங்களை எடுத்து இந்திய சினிமாவில் தனித்த அடையாளத்தை பெற்றவர். . கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்த துவக்க காலத்தில் நாடகத்துறையில் தீவிர ஈடுபாடுகொண்ட கவுதம் கோஷ் 1973ல் தன் முதல் படமாக Hungry Autumn ஆவணப்படத்தை எடுத்தார் இப்படம் ஜெர்மனியில் நடைபெறும், Oberhausen Film Festival லில் சிறந்த படத்துக்கான விருதைப்பெற்றது. இவரது முதல் படம் தெலுங்கு மொழியில் வெளியானது .உருது மற்றும் ஹிந்தி இலக்கியத்தில் பிரபலமான கிருஷ்ண சந்தர் எழுத்தில் தெலுங்கானா நக்சலைட் இயக்கம் சார்ந்த கதையில் வெளியான படத்தின் பெயர் மா பூமி(Maa Bhoomi) . அவரது முதல் படமே 1980ல் நடந்த திரைப்பட விழாவில் சிறப்பு திரையிடலுக்கு தேர்வானது தொடர்ந்து அவ்வருடம் Karlovy Vary Film Festival மற்றும் Cairo and Sidney Film Festivals. ஆகிய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. தொடர்ந்து Antarjali Yatra, Padma Nadir Majhi, Patang, Abar Aranye, Gudia, Kaalbela அகிய படங்களை இயக்கி பதினாறுக்கு மேற்ப்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்
1987ல் வெளியான இவரது அந்தர் ஜாலி யாத்ரா வங்காள பிராமண வகுப்பில் நடக்கும் மூடத்தனமான சடங்குகளை விமர்சிக்கிறது வயதான முதியவனுக்கு இறக்கும் போது உடன் இறக்க அவனுடைய மனைவி விரும்பவில்லை .ஆனால் சடங்குபடி நடக்க இறக்கும் தருவாயில் இருக்கும் கிழவனுக்கு கல்யாணம் செய்து உடன் இறக்க தன் மகளை கல்யாணம் பன்ணி வைக்கிறான் ஒரு ஏழை பிராமணன்.
எல்லாம் திட்டப்படி நடக்க சுடுகாட்டில் கணவனோடு மனைவியையும் தனியாக விட்டு விட்டு கிளம்புகின்றனர்.
கிழவன் இறந்தவுடன் இளம் பெண்ணும் உடன்கட்டை ஏறவேண்டும் ஆனால் அது நடக்கவிடாமல் தடைசெய்கிறான் பிணத்தை எரிக்க வந்த வெட்டியான். இளம் பெண்ணோ கணவனுக்கு உண்மையாக இருக்க போராட அவன் அவளை தடுக்க இறுதியில் கங்கைக்கரையில் அவர்களுக்குள் ஒரு காதல் முகிழ்கிறது..
மணி கவுல் Mani Kaul (25 December 1944 – 6 July 2011)

இந்திய கலைப்பட இயக்குனர்கள் என்றாலே வங்காளிகளாக மட்டுமே இருந்து வந்த காலத்தில் ராஜஸ்தானிலிருந்து வந்த முதல் இயக்குனர் . பூனா திரைப்படக்கல்லூரியில் ரித்விக் கட்டக் ஆசிரியராக பணியாற்றிய அக்கல்லூரியின் பொற்காலத்தில் அவருடைய மாணவனாக பயின்றவர்.,

பிரெஞ்சு நியூ வேவ் உருவாக்கிய காமிராவால் எழுதுதல் எனும் ஆச்சர் தியரியில் முழுமையான நம்பிக்கை கொண்ட மணிகவுலின் படங்கள் மிகுந்த கவித்துவமும் தத்துவார்த்த பின்புலமும் கொண்டவை. ரேவுக்கு பிறகு மிகுந்த அழகியல் தன்மையுடன் சினிமாவை கலையாக அணுகுபவர் என்ற பெயரும் இவருக்கு உணடு முதல் படம் Uski Roti (1969 ) அவருக்கு தேசிய அளவில் அங்கீகாரத்தை உருவாக்கி தந்தது மூன்றாவது படமான துவிதா Duvidha i1973 ராஜஸ்தானின் புகழ்பெற்ற நாட்டுபுறக்கதையை அடிப்படையாக கொண்ட இப்படம் ஒரு புதுணப்பெண்னை விட்டு விட்டு கணவன் வெளியூருக்கு போனபின் அவளை ஒரு பேய் காதல் வலையில் வீழ்த்துவதும் அதனால் கணவன் மனைவிக்குமிடையே உண்டாகும் சிக்கல்களை பற்றி கூறும்படம் . இப்படம் வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

புத்த தேவ் தாஸ்குப்தா Buddhadeb Dasgupta ( 1940_)
இவரும் ஒரு வங்காள இயக்குனர். கவிஞர் சத்யஜித்ரேவின் பால் தீவிர அபிமானம்கொண்டவர். மேற்கு வங்காளத்தில் Puruliya I பகுதியில் பிறந்த அப்பா ரயில் ஊழியர் என்பதால் சிறுவயதிலேயே பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டம் பெற்றவர் . கல்கத்தா பிலிம் சொசைட்டியில் சேர்ந்து விட்டோரியா டி சிகா , அகிரா குரசேவா போன்ற மேதைகளின் படங்களை பார்த்து இயக்குனராக விரும்பினார் 1968ல் Samayer Kache (1968) குறும்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அதை தன் ஆசான் சத்யஜித்ரேவுக்கு காண்பித்து அவரது பாராட்டைப் பெற்றார். .;தொடர்ந்து இவர் இயக்கிய Bagh Bahadur (1989), Charachar (1993), Lal Darja(1997), Mondo Meyer Upakhyan (2002) and Kaalpurush (2008), while Dooratwa (1978) and Tahader Katha (1993) என 25க்குமேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். .
கிட்டத்தட்ட 12 தேசிய விருதுகள் சிறந்த படங்களுக்காக பெற்றிருக்கும் இவர் பெர்லின் திரைப்பட விழாவில் Spain International Film Festival in Madrid எனும் உயர்ந்த அங்கீகாரத்தை பெற்றார்.
.அடூர் கோபால கிருஷ்ணன் Adoor Gopalakrishnan 3 July 1941 (age 76)

கேரள மாநிலம் அடூர் எனும் சிறிய நகருக்கு பெரிய புகழை பெற்றுத்தந்த கோபாலகிருஷ்ணன் கேரள அறிவுஜீவிகளின் இலச்சிணை என கொண்டாடப்படுபவர் எட்டு வயதில் நாடக நடிகராக கலை வாழ்க்கையை துவக்கியவர் பின் எழுத்துக்கு திரும்பி சில நாடகங்களை இயக்கவும் செய்தார் .கல்லூரி படிப்பு முடித்தவுடன் திண்டுக்கல் காந்திகிராம் கல்வி நிறுவனத்தில் அரசு அதிகாரியாக 1961ல் சேர்ந்தவர் 1962 ல் அந்த பதவியை துறந்து புனே திரைப்படக்கல்லூரியில் மாணவராக சேர்ந்தார். படிப்பை முடித்தபின். Chithralekha Film Society கேரளாவின் முதல் திரைப்பட சங்கத்தை நிறுவினார் 1972ல் ஸ்வயம்வரம் படம் மூலம் இயக்குனர் பயணத்தை துவக்கியவர் பதினோரு முழு நீளப் படங்களும் 30க்குமேற்பட்ட குறும்படம் மற்றும் ஆவணப்படங்களையும்இயக்கியிருக்கிறார்.அவருடையபடங்களில் Kodiyettam, Elippathayam, Mukhamukham, Anantaram, Mathilukal, Vidheyan and Kathapurushan ஆகியவை குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

1982ம் ஆண்டில் இவர் இயக்கிய எலிப்பத்தாயம் படத்துக்கு எதார்த்தம் மற்றும் நம்பகத்தன்மையான படைப்புக்காக British Film Institute Award எனும் மதிப்புமிக்க பரிசை பெற்றார். உலக விமர்சகர்கள் பரிசு எனப்படும் The International Film Critics Prize (FIPRESCI) இதுவரை ஆறு முறை இவரது வெவ்வேறு படங்களுக்கு வழங்கப்பட்டது. உலகின் சிறந்த திரைப்பட விழாக்களாக கருதப்படும் Cannes, Venice, Berlin, Toronto, London, Rotterdam அனைத்துதேசங்களின் திரைப்பட விழாக்களிலும் இவரது படங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன கிட்டத்தட்ட 17 தேசிய விருதுகள் இவரது படங்களுக்காக வழங்கப்பட்டிருக்கின்றன. மட்டுமல்லாமல் இந்திய அரசாங்கம் இவரது கலைச்சேவையை பாரட்டி பத்ம விபூஷன் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை தந்து கவுரவித்திருக்கிறது.. தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

ஜி. அரவிந்தன். Govindan Aravindan (21 January 1935 – 15 March 1991)

கேரளாவைச் சேர்ந்த கோட்டயம் நகரில் பிறந்த அரவிந்தன் மாத்ருபூமி எனும்புகழ்பெற்ற இதழில் துவக்க காலங்களில் கார்டூனிஸ்டாக பணிபுரிந்தவர் . சிறிய மனுஷனும் வல்லியலோகமும் எனும் அவருடைய கார்டூந்தொடர் மிகப்பெரிய வெற்றி பெற தொடர்ந்து வார இதழ்களுக்கு கார்டூந்தொடர் வரைந்தும் எழுதியும் கொடுத்து வந்தார் . காவலம் நாராயண பணிக்கர் என்பவருடன் நாடகத்துறையில் இணைந்த பிறகுதான் இவரது கலைவாழ்க்கை துரிதமாகியது.. உத்தராயணம் 1974ல் இவரதுமுதல்திரைப்படம்வெளியாகியது. சுதந்திரபோராட்டபின்னணியில்மனிதர்களின் கயமைகளையும் கிழ்மைகளையும் தீவிரமாக அலசிய இத்திரைப்படம் மாநில அரசின் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றது . மட்டுமல்லாமல் இந்தியா சுதந்திரம் பெற்ற 25ம் ஆண்டுக்கான சிறந்த படமென்ற தேசிய விருதையும்பெற்றது.

தொடர்ந்து காஞ்சன சீதா(Kanchana Sita),கும்மாட்டி(Kummatty),எஸ்தப்பன்(Esthappan) ,தம்பு(Thampu) போக்கு வெயில்(Pokkuveyil) , சிதம்பரம்(Chidambaram) என சிறந்த படங்களை இயக்கி கேரளாவின்பெயரை இந்திய சினிமாவில் அழுத்தமாக பதித்தார்,
அரவிந்தனின் திரைப்படங்கள் மனித வாழ்வின் அபத்தங்களையும் அவலங்களையும் சன்னமான குரலில் பேசுபவை தொன்மம் ஆன்மிகம் தத்துவம் எதார்த்தம் என பல்வேறு புள்ளிகள்.
ஒன்றிணைந்த அவரது படங்கள் இந்திய இயக்குனர்களில் அவருக்கு தனித்துவமான அடையாளத்தை தந்துள்ளன.. சில படங்களுக்கு அவரே இசையமைப்பாளராகவும் அவரே படத்தொகுப்பாளராகவும் பணி புரிந்திருக்கிரார், அவர் இயக்கிய பதினெட்டு படங்களில் ஆறு படங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ளார்.

க்ரீஷ் காசரவள்ளி Girish Kasaravalli (3 December 1950)

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த தீர்த்தஹள்ளி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். கர்நாடகாவின் நாட்டுபுறக்கலையான யக்ஷகானா கலைஞரான கணேசராவின் பத்து குழந்தைகளுள் ஒருவராக பிறந்தவர். சிறுவயதில் டூரிங் டாக்கிஸ்கள் மூலமாக கன்னட வணிக சினிமாக்கள் மிது இவருக்கிருந்த ஆர்வத்தை தடம் மாற்றியவர் அவரது தாய்மாமன். அவர் கர்நாடகாவில் கலைகளுக்காகவே நினாசம் எனும் அமைப்பை உண்டாக்கி ஒரு கிராமத்தையே கலைக் கிராமமாக உருவாக்கியவர் கே வி சுப்பண்ணா எனும் பெயர்கொண்ட அவரது கலைசேவையை பாராட்டி ராமன் மாகசேசே விருது வழங்கப்பட்டிருக்கிறது . அத்தகைய கலை பாரம்பரிய பின்னணி அவருக்கிருந்த காரணத்தால் கலை சினிமா பக்கம் அவரது கவனம் முழுமையாக திரும்பியது. 1975ல் புனே திரைப்படக்கல்லூரியில் மாணவராக சேர்ந்த இவர் கன்னட சினிமாவின் கலை சினிமாவின் முன்னோடியான பி.வி.கரந்திடம் சோமனதுடி எனும் புகழ்பெற்ற படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார்
• புனா கல்லூரியில் தங்க விருது பெற்ற மாணவராக வெளியே வந்த காரணத்தாலோ என்னவோ அவர் இயக்கிய படங்களுக்கு இந்திய அரசின் தங்கத்தமாரை விருதுகளும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டேயிருந்தன . 1977ல் முதல் படமான Ghatashraddha படத்தில் துவங்கி 1987ல் Tabarana Kathe 1988ல் Bannada Vesha Mane 1996ல் Kraurya 1997ல் Thaayi Saheba 2002ல் Dweepaஎன தொடர்ந்து சிறந்தபடத்துக்கான தேசிய விருதுகள் அகில இந்திய அளவிலும் ப்ராந்திய மொழிபிரிவிலும் கிடைத்தபடி இருந்தன. த்வீபா Dweepa – படத்துக்காக 2001 ல் சிறந்த படத்துக்கான விருதை Moscow film festival லிலும் ,The Catholic Jury Award மற்றும் Ducats Award at the Manneham Film Festival Germany ஆகிய விருதுகளை Ghatashraddha – 1977 படத்துக்கும் மற்றும் NETPAC Award at Asiatica Filmediale, Rome உலக அளவில் தன் படத்துக்கான அங்கீகாரங்களை பெற்றுள்ளார்

மேற்குறிப்பிட்ட பேர்லல் சினிமாலையின் படங்கள் அனைத்தும் இந்திய அளவிலும் உலக அளவிலும் விருதுகளை அள்ளிக்குவித்தனவேயொழிய தியேட்டர்களில் அதுவும் மெயின் ஸ்ட்ரீம் எனப்படும் சாதாரண பார்வையாளர்களை சென்றடையவில்லை . தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஞாயிறு மதிய ஒளிபரப்பின் மூலமாக மட்டுமே சில ரசனைமிக்க பார்வையாளர்களீடம் சென்று சேர்ந்தது
தமிழ்கத்தில் இது போன்ற தீவிர சினிமாவுக்கான முயறசிகள் பல துவங்கி முழுமையடைஅயவில்லை
ஆனால் வணிக சினிமாவில் பெரும் தாக்கத்தை தமிழகத்தில் உண்டாக்கியது. 1977 முதல் 1983 வரை இந்த அலையில் பல எதார்த்த படங்கள் வெளியாகி பெரிய வணிக வெற்றிபெற்ற.
இயக்குனர் பாரதிராஜா வின் பதினாறு வயதினிலே 1977ல் வெளியானதன் மூலமாக தமிழ் நாட்டில் ஒரு பெரிய ரசனை மாற்றத்தை உண்டாக்கி தொடர்ந்து அதே பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் ருத்ரையாவின் அவள் அப்படித்தான் மகேந்திரனின் முள்ளும் மலரும் உதிரீப்பூக்கள் பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் மூன்றாம் பிறை துரை யின் பசி தேவராஜ் மோகனின் ரோசாப்பூ ரவிக்கைகாரி ,பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் என சமூக எதார்த்த படங்கள் தொடர்ந்து வெளியாகி மக்களால் கொண்டாடப்பட்டு வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியும் பெற்றன. .இவ்விதத்தில் தமிழர்களின் வெகுஜன ரசனை இதர மாநிலத்தவரைக்காட்டிலும் அக்காலத்தில் மேம்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது
அதேசமயம் இவை முந்தைய வட இந்திய கேரள பேர்லல் படங்களைப்போல திரைப்பட விழாக்களில் பங்கேற்கவோ பரிசோ உலக அங்கீகாரமோ பெற முடியாமல் போனது ஆச்சரய முரண்
ஒருவேளை இந்த படங்களில் பாடல்காட்சிகள் இடம் பெறாமல் இருந்திருந்தால் மேற் சொன்ன தமிழ் படங்களும் கலைப் படங்களுக்கான அங்கீகாரத்தை அடைந்திருக்கக்கூடும்’
என்ற போதும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படங்களாக மேற்சொன்ன படங்கள் இன்றும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது
# ( தமிழ் சினிமாவின் நியூ வேவ் (1977-1983) என ஆசிரியரின் தனிபுத்தகம் விரைவில் வெளிவரவிருக்கிறது )

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *