விதி – சிறுகதை -அஜயன் பாலா

 சாரா இங்க வாயேன்  

சொல்லுங்க அடுப்படியில வேலை இருக்கு 

டிவில பாரேன் பாப்பா நம்ம மஞ்சு ஜாடையிலயே இருக்கு

உங்களுக்கு எப்பவும் இதே வேலைதான்

அவசரமாக டிவி ஹாலுக்கு வந்த சாரா கணவன் அமர்ந்திருந்த சோபாவின் அருகே வந்து நின்று டிவியை பார்க்க ஆச்சரயப்பட்டாள்.

சட்டென முகம் மாறியது அவள் அங்கிருந்து விலகி படுக்கையறைக்குள் நுழைய கேசவன் அப்படியே அமர்ந்துவிட்டான். அவன் முகம் தொலைக்காட்சியில் இருந்தாலும் மனம் பெரும் பாரத்தில் கனத்திருந்தது.

அந்த விளம்பரம் போய் சீரியல் மீண்டும் துவங்கி ஓடிக் கொண்டிருந்தது, ஆனால் அவன் கண்ணின் விழித்திரைகளில் தொலைக்காட்சி உருவங்கள் குட்டியாக அசைந்துகொண்டிருந்த போது சட்டென நீர் பொங்கி கன்னத்தில் வழிந்துகொண்டிருந்தது. அவசரமாக கையால் கன்னத்தை துடைத்தான்

படுக்கையறைக்குள் மனைவி சாரா  விசும்புவது சன்னமாக கேட்டது .

அவனுக்கு நன்றாக தெரியும் சாரா இதை பார்த்தால் கண்டிப்பாக அழுவாள்   அதற்காகத்தான் அவளை வரச்சொன்னான் . அழட்டும் . எல்லாத்துக்கும் அவள் தான் காரணம் அவள் அந்த வேதனையிலிருந்து தப்பிக்க கூடாது தான் செய்த தவறுக்காக தினம் தினம் மருகி மருகி உருக்குலைய வேண்டும்  .

குழந்தை அப்படி பிறப்பது யார் குற்றம், விளம்பரத்தில் பார்ப்பது போல பல பெற்றோர்களை அவன் பார்க்க நேரிடுகிறது. சென்ற வாரம் கூட ரேஷன் கார்டு ஆதார் அட்டையோடு இணைக்க அருகிலிருக்கும் நெட் கடைக்கு சென்ற போது அதே போல பேச  நடக்க முடியாத குழந்தையை  பெற்றவர்கள் இருவரும் எப்படி கொஞ்சினார்கள் . பிறவியிலேயே குழந்தை கைகால் சூம்பிகிடப்பது யார் குற்றம், ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் காரணத்தோடு தான் பிறக்கின்றன பிறவியிலேயே குருடனாகவும் செவிடனாகவும் ஒருவன் பிறப்பதற்கும் காரணம் இருக்கிறது.  இயற்கையின் இந்த முரட்டு விதிகளுக்கு எதிராக போராடி ஜெயிப்பதுதான் வாழ்க்கை. நன்றாக பிறந்து ஓடி ஆடி வளர்ந்தபின் விபத்தில் கைகால் இழந்து வீட்டில் கிடப்பதை விட  இது எவ்வளவோ மேல்  . அன்று டாக்டர் தெளிவாக விலாவாரியாக சொன்னார் .இது போன்ற குழ்ந்தைகள பிறந்தால் நம் வீட்டில் கடவுள் பிறந்திருப்பதாக நினைத்து கவனித்துக்கொள்ள வேண்டும் என ஒரு சாமியாரைப்போல லெக்சர் கொடுத்தார்

ஆனாலும் அவள் கேட்கவில்லை.                              

பிடிவாதமாய் இருந்துவிட்டாள் . பிறந்ததிலிருந்து தாய் குழ்ந்தையை தொடாமலே இருந்தாள் எப்படி ?   யாருக்காவது தூக்கி  கொடுத்து விடுங்கள் என ஹிஸ்டீரியா போல கத்தினாள்

அந்த இரண்டு மாதங்களும் வீட்டில் நரக வேதனை. அழும் குழந்தைக்கு பால் கூட கொடுக்கமாட்டேன் என்ற அவளுடைய பிடிவாதம் . இது எல்லாம் அவனுக்கு அவளை கொலை செய்துவிடும் அளவுக்கு கோபத்தை கொடுத்தது. ஒரு வேளை தான் படித்த வளர்ந்த ஹாஸ்டலும் அது உண்டாக்கிய சூழலும் தான் தன்னை இப்படி கோழையாக சாத்வீகனாக ஆக்கிவிட்டதோ என உணர்ந்தான்

மேலும் குழந்தை அப்படி பிறந்ததற்கு காரணம் ஜீன்களின் குறைபாடு காரணமாகவும் இருக்கலாம் என டாக்டர் சொன்ன போது அவனுக்கு சட்டென தன் இரண்டாவது பெரியப்பாவின் பையன் ஞாபகத்துக்கு வந்தான் .

ஒருவேளை தனது மரபணு பிசகுதானோ என்ற சந்தேகம் வேறு அவனை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கியது. நல்ல வேளையாக டாக்டரிடம் இதை அப்போதைக்கு சொல்லவில்லை.

இதெல்லாம் தான் தன்னை அவளிடம் பேச முடியாமல் தடுத்துவிட்டது

வேறு வழியே இல்லாமல் சாராவும் அவள் அப்பாவும் சேர்ந்து  குழந்தையை  காணாமல் எங்காவது விட்டு விடச்சொல்லி முருகன் அழைத்து வந்த பெண்ணிடம்   தூக்கி கொடுத்த போது இவன் படுக்கை அறையை விட்டு வெளியே வரவில்லை

முருகன் அந்த குழந்தையை என்ன செய்தானோ .. அவன் சாராவின் அப்பா விடம் டிரைவராக வேலைசெய்துவருபவள் பத்து வருடமாக அவன் குடும்பத்தில் நல்லது கெட்டது எல்லாம் சார அப்பாதான் முன்னாள் நின்று செய்து கொடுப்பவர்  யாரோ ஏழைப்பெண்  யார் என்ன விவரம் என இவர்களும் கேட்கவில்லை . அவளும் சொல்ல விரும்பவில்லை ..வெளியே போலீசுக்கு தெரிந்தால் குற்றம் என்பதால் ரகசியமாக பத்துமணிக்கு மேல் முடிந்தது. குழந்தையை எது வேண்டுமானாலும் செய்துகொள் என சொல்லி 2 லட்சம் பணமும் அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்கள் .

அதன் பின் முருகனும் வேலையை விட்டு பெங்களூர் போய்விட்டான் தொடர்பும் இல்லை  அந்த காரியத்தை செய்ய துணிந்த மன அழுத்தமோ என்னவோ  அடுத்த மூன்றே மாதத்தில் மாரடைப்பு சாராவின் அப்பா மாணிக்கமும் போய் சேர்ந்துவிட்டார்.

அவள் அப்பா சாவின் போது மனைவியை கேசவன் சமாதானப்படுத்தினாலும் ஒருவித குரூர திருப்தி. அம்மா இல்லாத காரணத்துக்காக மகளின் எல்லா பிடிவாதங்களுக்கும் தடை சொல்லாத  ஒரு அப்பாவுக்கு மாரடைப்பைவிட கொடூர மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும்  கேசவனுக்கு ஒரு வகையில் விடுதலை . சரியான வேலையில்லை என்ற காரணத்தால் வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொண்ட அவர்களது பணத்திமிரை சாவு வெற்றிக்கொள்வதாக நி8னைத்தான்

அப்பாவின் மரணத்தை சாராவால் தாங்கிக்கொள்ள  முடியவில்லை .அந்த வீட்டை விற்று விட்டு இந்த புது ப்ளாட்டுக்கு வந்து நான்கு வருடமாகிறது .

எப்போதாவது எங்காவது கைகால் சூம்பிய நிலையில் நானகைந்து வயது குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கும் இவனுக்கும்  நம் குழந்தையோ என்ற படபடப்பு சூழும் ,

என்னதான் அவள் அன்று அப்படி குழந்தையை கொடுத்து விட்டாலும்  அவளை மீறிய தாய்மை உணர்ச்சி அவளை பெரும் துக்கத்தில் அவ்வப்போது வாட்டி வதைத்துக் கொண்டுதான் இருந்தது. அழட்டும் அழட்டும் நன்றாக அழட்டும் அப்போதாவது அந்த தவறை அவள் உணரவேண்டும் என நினைப்பான் அதனாலேயே இன்று சற்று முன் தொலைக்காட்சியில் அது போன்ற குழந்தைகளைப் பற்றிய அரசு விழிப்புணர்வு விளம்பர படம் வந்த போது இவன் சாராவை அவசரமாக அழைத்து காண்பித்தான் அவன் நினைத்தது போல நடந்தது  அவளும் இப்போது கட்டிலில் அழுதுக் கொண்டிருக்கிறாள்.

பழி வாங்கிய குரூர திருப்தி உள்ளுக்குள் புகைந்தாலும் அதிலிருந்து பிடிவாதமாக வெளியில் வந்தவன் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு எழுந்து படுக்கை அறைக்குச் சென்று அழுதுகொண்டிருக்கும் மனைவியை ஆறுதலுடன்  கட்டித்தழுவினான். .கன்னத்தில் வழியும் உப்பு நீரை இறுக்கமான  முத்தங்களால் துடைத்தான்.  அன்று மாலையே இருவரும் புறப்பட்டு சிம்லா டார்ஜிலிங் என இரண்டு வாரத்திற்கு சுற்றிவிட்டு வந்தனர். இருவரும் மன அழுத்தங்களில்லிருந்து விடுபட்டனர். டாக்டரின் ஆலோசனைப்படி அடுத்த குழ்ந்தைக்கு சாரா சம்மதித்தாள் 

டாக்டர் அவளது துணிச்சலைப் பாராட்டினார் பரவாயில்லையே ஆல்தி பெஸ்ட் என வாழ்த்து கூறினார் . இம்முறை ஒவ்வொரு வாரமும் கவனத்தோடு மருத்துவமனை போய் செக் அப் செய்தார்கள்,இந்த முறை குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்  என டாக்டர் நம்பிக்கை கொடுத்தார்.  அவர் குறித்த  நாள் நெருங்க நெருங்க இருவருக்கும் பதட்டம் தொற்றியது. கேசவனை விட சாரா தெளிவாக இருந்தாள்  

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்து நின்ற டாக்ஸியிலிருந்து கையில் தாங்கிய குழந்தையுடன் அவள் வீட்டுக்குள் இறங்க வேலைக்காரி ஆரத்தி சுற்றி அவளுக்கு பொட்டு வைத்தாள்.

குழந்தைக்கும் பொட்டு வைத்த வேலைக்காரி சூம்பிக்கிடந்த குழந்தையின் விரல்களுக்கு முத்தம் கொடுத்தாள்.

இது எதையும் அறியாத நான்கு வருடங்களுக்கு முன் பிறந்த அவர்களது முதல் குழந்தை பழனி மலை அடிவார சிக்னலில் கார் கதவை தட்டிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் அழுக்கேறிய கைகளில் அமர்ந்த்படி சூம்பிய கையை காலத்தில் அசைத்துக்கொண்டிருந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *