அஜயன் பாலா கதைகள் விமர்சனம் … • யூமா வாசுகி

.
பெருத்துக் கனத்த துன்பங்கள் பாறைகளாகப் பொழியும் காலம் அது. வறுமையின் அந்த ராட்சதப் பறவை தலைக்கு மேல் நித்யமாய்ச் சிறகு விரித்து ஒளி மறைத்த காலம். எனக்கும் அஜயன் பாலாவுக்கும் இப்படியிருந்தது. நாங்கள் பழவந்தாங்கலில் அருகருகே வசித்தோம். ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் அனாதைத் துவத்தையும் பெருநகரத்தில் எதிர்கொள்ளப் போகிற வாதைகளையும் எண்ணி ரயிலில் அழுதபடி சென்னை வந்து சேர்ந்த புதிது.
வழக்கப்படி காலையில் அறையை விட்டுப் புறப்பட்டுவிட்டேன். நாள் முழுவதும் தேடியலைந்தும் ஒற்றைத் தானிய மணிபோலும் கிட்டாத குருவியாக திரும்பினேன். கடைசி இரயிலுக்கு முந்தைய ரயிலில்தான் திரும்பியது. பன்னிரண்டு மணி இரவு. தூக்கத்தின் பாதியில் எழுந்து எதற்கோ வெளியே வந்த அஜயன் தெருவிளக்கொளியில் என்னைப்பார்க்கிறார். சாப்பிட்டீர்களா? என்பது அவரது கேள்வி. நான் பதில் சொல்லவில்லை. அவருக்கும் புரிந்திருக்கும். அன்று அப்போது அஜயன் ஒரு திரைப்பட உதவி இயக்குனர். வீட்டுச் சூழல் உவப்பானதாக இல்லை. பற்கடிப்பிலும் பகற்கனவிலும் உழன்று தனித்தொதுங்கிய இருப்பு.
நான் உறங்கிப்போனேன். இரவை மிகக் கவனமாக கூர்மையாக அலங்கரித்துக் கொண்டிருந்தது அமைதி. யாரோ என் அறைக்கதவைத் தட்டினார்கள். சற்றே திரும்பிப் பார்த்துவிட்டு, அமைதி மீண்டும் தன் பணியைத் தொடங்கியிருக்கக் கூடும். கதவைத் திறந்தால் அஜயன் பாலா, இரவுக் கருமையோடு சேர்ந்து நிற்கிறார். அவர் கையிலொரு பாத்திரம். இதை சாப்பிட்டு படுங்கள்..
வீட்டில் எல்லோரும் உறங்கிய பிறகு சமையலறையில் மிச்சமிருந்த உணவைத் திரட்டி வந்து அகாலத்தில் ஏந்தி நிற்கிறார். அப்போது அந்தக் கண்களில் ஒளிர்ந்த பரிவும் கருணையும் இங்கே நீ தனியனல்ல என்று எனக்கு உணர்த்தியது.
இந்த நிகழ் கவிதையின் சாரத்தை அவர் கதைகளிலும் நான் பார்த்திருக்கிறேன். அஜயன் பாலா கவிதைகள் எழுதுகிறார் அவை கதை வடிவத்தில் அலைகின்றன. இவர் தன் கதையினுள் ஆழ்ந்து போகும் தன்மை. இங்கு நான் நினைவு கூற விரும்பும் மற்றொரு மிகு உண்மை. இவர் தனித்திருந்து ஒரு கதை இயற்றுகிறார். கதையின் ஒரு பாத்திரத்திற்கு உடல் நலிவுறுகிறது. எழுத்தாளர் கூடுவிட்டுக் கூடு பாய்கிறார். அந்தப் பாத்திரத்தை விவரிக்கிறார். போக்கில், மிச்ச சொச்சமிருந்த தான் அம்சமும் இழந்து, பாத்திரத்தோடு உடனுறைகிறார். இந்த நிலையில் பாத்திரத்தின் உடற்பிரச்சினையும் எழுத்தாளர் அனுபவிக்கிறார். ஆக அஜயன்பாலா சில நாட்கள் காய்ச்சலாக கிடந்தார். இதை நான் அருகிலிருந்து பார்த்தேன். கதை மாந்தனின் பாடுகளும், படைப்பாளியின் பாடுகளும் ஒன்றேயாகும் அபூர்வம். பால்சாக் எழுதும்போது தனியறையில் தன் கதாபாத்திரத்துடன் உரத்துப்பேசி சச்சரவிடுவார் என்று படித்திருக்கிறேன். இந்த மனநிலையில்தான் அஜயன்பாலாவின் படைப்புகள் பிரசன்னமாகி வருகின்றன. படைப்பின் சகல முனைகளிலும் குவிந்து எரியும் ஒரு புள்ளியில் தன்னைப் பலி ஈனும் தன்மை அது.
தவிர, இயற்கையின்மீது அதன் பரிணாமங்கள் மீது, மனிதர்களின் மீது அஜயன்பாலாவுக்கு அப்பழுக்கற்ற பரவசம் உண்டு. இயல்பில் இது இவருக்குச் சிறகுகள் போல, ஒரு இலைச் சருகிற்கோ அல்லது ஒரு திராட்சைக் கொத்திற்கோ அல்லது ஒரு சிறுமியின் பின்னலில் உள்ள பூவிற்கோ இவரைத் தொலைதூரத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் உண்டு. அதுபோன்ற தொடர்பயணங்களில்தான் அறியாத பல இடங்கள் நகர்ந்து வந்து தாமாகவே இவருக்குத் தங்களை இனங்காட்டிக் கொள்கின்றன. எதனினும் அரிதைத் கிரகிக்கும் இந்த சுபாவத்தால்தான், இன்னும் அவரது கதைகளின் நிகழ்ச்சிகள் பலவும் இரயில் பயணச் சன்னலோரம் எதிர்பாராத நேரத்தில் விளைநிலம் கடந்து செல்வதுபோல, அடிக்கடி என் மனதில் பசேலென்று தவிக்கின்றன.
இவர் எழுதிய கதையுடன் தான் குதிரைவீரன் பயணத்தின் முதல் இதழ் வெளிவந்தது. அன்றிலிருந்து இவர் எழுத்து வகைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். சினிமா மற்றும் பிறவகையான எழுத்துக்கள் மிகப்பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அத்துடன் இவரது கதைகளும், அலை வெளிவரும்போதே கூர்ந்த கவனம் பெற்றிருக்கின்றன. புறப்பட்டு வெகு நாட்களான பின்னும் அந்த கூட்ஸ் வண்டி பயணம் இன்னும்தானே தொடர்ந்து கொண்டிருக்கிறது! மாறிப்போன தன் முகத்தை வீட்டுக்கார அம்மாவுக்கு மறைத்தபடி இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறான். அந்த சினிமா உதவி இயக்குனன். பூங்காவில் ஒருவன் மழைக்காட்டுடன் இப்போதும் உயிர்த்து அமர்ந்திருக்கிறானே!
வாழும் கதைகள் இவை. அனுபவத் துளைப்பிலிருந்து பொங்கும் மனச்சுனைகள். இவற்றிலிருந்து பெருகும் உதிரமும் உற்ற நிறங்களும் அடிச் சுவடுகளாக இவர் நடைவெளியெங்கும் பதிகின்றன. சற்று உயரத்திலிருந்து பார்க்கும்போது, நடந்த இடங்களிலிருந்தெல்லாம் ஓவியங்கள் மேலெழுந்து வருகின்றன. சற்றும் ஒப்பனையற்ற, எதையும் வலிந்தேற்கும் துருத்தலற்ற மனப்பூர்வத்தில் சுடர்விடுபவை. அஜயன்பாலாவின் கதைகள் மீதில் எனக்கொரு இலக்கியக் கிரக்கம் உண்டு. அவற்றை முன்பு நான் ரகசியமாக உச்சி முகர்ந்த சிலாகித்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான்.
கலைஞருக்கு என் பிரார்த்தனைகள்,
வரவிருக்கும் இன்னுமனேகப் படைப்புகளுக்காக
என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
யூமா வாசுகி
8/1/2012
செ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *