செம்மொழி சிற்பிகள்- உழைப்புக்கு கிடைத்த பெறுமதி

என் கடின உழைப்பு  திங்கட்கிழமை (10-12-2018) அன்று  தினத்தந்தி தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.

  2010ஆம் ஆண்டு கோவை செம்மொழி மாநாட்டையொட்டி  ஏதாவது புதியதாக  செய்யவேண்டும்  என  அப்போதைய  திமுக  ஆட்சியின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த திரு. பரிதி இளம் வழுதி  விரும்பி அவரது தனிச்செயலராக  பதவி வகித்த திரு. நாச்சி முத்து அவர்களிடம் கூற  திரு நாச்சிமுத்து என்னை தொடர்புகொண்டு  ஆலோசித்தார். எங்களுடன்  மறைந்த பெரியார் சாக்ரடீஸு அவர்களும் கலந்துகொள்ள நால்வரும் ஆலோசனை செய்து தமிழுக்காக தொண்டாற்றி மறைந்த அறியப்படாத அறிஞர்கள் நூறு பேரை தொகுத்து  அதை உயர்தரத்தில் ஆங்கில  மொழிபெயர்ப்புடன் வெளியிடலாம் என முடிவு செய்தோம். அதன் பேரில்  ஆறு மாத கடும் உழைப்பின் பலனாக  செம்மொழி சிற்பிகள் நூல் உருவாக்கம் பெற்றது. முதலில் நூறுபேரை  தேர்வு செய்வதில் துவங்கி அவர்களை பற்றிய தகவல் திரட்டுவது வரை திரு. நாச்சிமுத்து மற்றும்  பெரியார் சாகரடீசு அவர்களின்  பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள்  திரட்டிய  செய்திகளை படித்து தொகுப்பதுதான் என் வேலை . ஒவ்வொரு அறிஞர் குறித்தும் அனைத்து புத்தகங்களையும் படித்து சாரமாக எடுத்து அதை ஒருபக்க அளவில் எழுதுவது கடுமையான பணி. காரணம் தகவல்கள் மிக்க பழமையான நூல்களில் படிக்கவே முடியாத நிலையில்  இருந்தன. ஒவ்வொருவர் பற்றியும் முழுமையாக படித்து எழுதுவது ஒவ்வொரு பாறாங்கல்லாக சுமந்து மலையேற்றி இறக்கி வைக்கும் காரியமானது.  இப்படியாக  நூறுபேரையும் எழுதிமுடிக்க 6 மாதகாலம் ஆனது. பின்  நான் எழுதியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க யாரை பணியமர்த்தலாம் என முயற்சித்த போது ரமேஷ் சக்ரபாணி முன் வந்தார். பின் ஒவ்வொரு அறிஞரையும் ஓவியமாக வரைந்து கட்டுரைகளின் முகப்பிலிடலாம் என முடிவுசெய்தபோது ஓவியர் பச்சை முத்து எங்களுடன் கைகோர்த்தார். ஒருவழியாக பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில்  புத்தகத்தை விஜயன்  அழகான முறையில் வடிவமைத்து கொடுத்தார். புத்தகத்தை அச்சாக்கி முழுமையாக்கும் பணியில் பெரியார்  சாக்ரடீசு மற்றும் நாச்சிமுத்து ஆகியோர் பொறுபேற்று சிறப்பான முறையில் வடிவமைத்து கொடுத்தனர் . 

செம்மொழி  மாநாட்டையொட்டி மேடையில் கலைஞர் கையால்  இந்நூலை வெளியிடலாம் என முடிவு செய்தோம். ஆனால் ஏற்கனவே நிகழ்ச்சி நிரல் முழுமையாக  திட்டமிட்ட படியால் மேடையில் வெளியிடமுடியாமல் தனிப்பட்ட முறை நிகழ்வில் கலைஞர் கையால் வெளியீடு செய்தோம்.  புத்தகம் சிறப்பாக உருவாக்கம் பெற்றாலும் இதை சந்தைப்படுத்துவது என்பது சிரமமாக இருந்தது. காரணம்  130 ஜி எஸெம் டிராயிங் பேப்பரில் ஒருகிலோ எடையுள்ள கார்ட் பவுண்டாக  மெகாசைசில்  புத்தகம் இருந்தபடியால் விற்பனைக்காக அங்காடிகளில் வைப்பதும் வெகு சிரமமாக இருந்தது. மேலும் தொடர்ந்து  அதிமுக ஆட்சி காரணமாக எதிர்பார்த்தபடி  நூலக ஆர்டரும் இல்லாமல் போக புத்தகம் வெறுமனே குறுகிய வட்டங்களில் புத்தக கண்காட்சிகளில் மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. கடந்த எட்டு வருடமாக  இப்படியாக இந்த எங்களின் கடுமையான உழைப்பு பயனில்லாமல் முடங்கிக் கிடந்த நிலையில்  கடந்த திங்களன்று இந்த நூலுக்கு கிடைத்த முக்கியத்துவம் எங்களை பேரதிர்ச்சியிலும் இன்பத்திலும் ஆழ்த்தியது. திமுக தலைவர்  திரு.மு.க.ஸ்டாலின்  டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் பரிசாக எதையாவது கொடுக்க விரும்பியபோது அப்போது அவர்கண்ணுக்கு  நண்பர்கள் முன் வைத்த புத்தகம் எங்களுடைய  செம்மொழி சிற்பிகள். இவ்வளவு அருமையான புத்தகம் எப்படி இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் போனது என  திரு. ஸ்டாலின் அவர்கள் நெகிழ்ந்து உடனே எனக்கு மூன்று நூல்கள் வேண்டும் என கட்டளையிட  திரு.செந்தில் மூலமாக என்னை தொடர்பு கொண்டனர். நான் அப்போது சென்னையில் இல்லை.  மனைவியும் இல்லாத சூழலில் உதவியாளர் மூலமாக அலுவலகத்தில் யாருக்கோ பார்சலில் அனுப்ப காத்திருந்த இரண்டு பிரதிகள் மற்றும் நண்பர் மீரா கதிரவன் கைவசம் வீட்டிலிருந்த புத்தகம் என நூல்களை உதவியாளர் ஜேம்ஸ் மூலம் பெற்று அறிவாலயத்தில் ஒப்படைத்தோம் .  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அப்போதுகூட  நான் எதிர்பார்க்கவில்லை.மறுநாள்  தினத்தந்தி நாளிதழில் முதல் பக்க கொட்டை எழுத்து செய்தியாக திரு. ஸ்டாலின் அவர்கள் சோனியா கந்தியை சந்தித்து கைகுலுக்கிய செய்தியுடன்  எங்கள் புத்தகம் பரிசளித்த செய்தியும் இடம்பெற்றதை அறிந்தபோதுதான் மகிழ்ச்சி கடலில் திளைத்தேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்  கடுமையாக உழைத்த உழைப்பு இன்று முக்கியத்தும் பெற்ற சம்பவம்  ஒரு தேசிய விருது கிடைக்கப் பெற்றதற்கு ஈடான மகிழ்ச்சியை எனக்கும் எங்கள் குழுவுக்கும் உண்டாக்கியது.

உண்மையான உழைப்பு என்றும் வீணாகாது, ஒருநாள் அது  மாலை சூடும்  என்பதற்கு  இது ஓர் எடுத்துக்காட்டு என்பதற்காக இதை பதிவு செய்கிறேன்.

 இந்த புத்தக உருவாக்கதில் என்னோடு பங்களித்த திரு. நாச்சிமுத்து அவர்களுக்கு நன்றி. மேலும் இப்புத்தகம் உருவாக மூல காரணமான முன்னாள் அமைச்சர். திரு.பரிதி இளம்வழுதி மற்றும் புத்தகப் பணியில் கடுமையாக உழைத்த பெரியார் சாக்ரடீஸ் ஆகியோர் இன்று நம்மிடம் இல்லை. அவர்களை கண்ணீர் மல்க நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். மேலும் எனது எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த Chakrapani Ramesh மற்றும் ஓவியங்கள் வரைந்து தந்த Thillaikkannu Pachaimuthu ஆகியோருக்கும் வடிவமைத்த Vijayan Masilamani ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

2 Comments

 1. அழகிய பெரியவன்

  அந்த நூல் பிரதிகள் விற்பனைக்கு உள்ளனவா அஐயன்?
  -அழகிய பெரியவன்

  Reply
  1. ajayan bala (Post author)

   இருக்குங்க அழகிய பெரியவன் .. டிஸ்கவரி மற்றும் புத்தக உலகில் கிடைக்கும் புத்த்க கண்காட்சியில் நாதன் பதிப்ப்கம் வாருங்கள் கூடுதல் தள்ளுபடியில் தருகிறேன்

   Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *