தமிழ் சினிமாவில் மெட்ராஸ் பாஷை   அல்லது சென்னை வழக்காறு

 

                                

பொதுவாக கோவை நகர மக்கள் பேச்சை கொங்கு பாஷை என்றும் மதுரை நகரம் முழுமையும் பேசப்படும் வழக்கை மதுரை என்றும் அது போல நெல்லை  நாகர்கோவில்  என அந்தந்த நகரத்தின் அனைத்து பிரிவு மக்கள் பேசும் வழக்கை  வைத்து பொது அடையாளமாக அழைக்கிறோம் ஆனால் சென்னை பாஷை  அப்படி அழைக்கப்படுகிறதா மத்திய சென்னை தென் சென்னை பகுதிகளில் வசிப்பவர்கள் யாரும் அப்படியாக பேசுவதில்லை. ஆனால் வடசென்னையில் ஒடுக்கப்பட்ட மீனவர்கள்,மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பேசும் பாஷையைத்தான் நாம் காலம் காலமாக மெட்ராஸ் பாஷை என்றும் சென்னை  வழக்கு என்றும் பேசியும் எழுதியும் வருகிறோம்.

ஆகவே சென்னை கலாச்சாரம் என்றால் அதன் பூர்வகுடிகளான இந்த வடசென்னை மக்களையும் அவர்கள் வாழ்வையும் குறிப்பிடுவதே முறைமை என்பது என் தனிப்பட்ட கருத்து. அதன் அடிப்படையில்தான் நான் சென்னை வழக்காறு எனும்  என் கட்டுரையையும் கட்டமைக்கிறேன்.

சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் வரை எனக்கு சென்னை என்றால் மாம்பலம், அடையார், அண்ணா நகர், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக் நகர் ஆகிய நகர்களைத்தான் நினைத்திருந்தேன். மீடியாக்கள் எனக்குள் அப்படித்தான் உருவாக்கி வைத்திருந்தன

உண்மையான சென்னை என்றால்; அதாவது பலகாலமாக மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த சென்னை எதுவென்றால் இன்று வடசென்னை என குறிப்பிடப்படும் ராயப்பேட்டை, தண்டையார் பேட்டை, மூலகொத்தளம், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஜார்ஜ் டவுன், கொண்டித்தோப்பு, புரசைவாக்கம், எழும்பூர் பகுதிகள்தான்.

இந்த பாஷை உருவாக காரணம் ஆங்கிலோ இந்தியர்கள், நவாப் ஆளுகையின் கீழ் வாழ்ந்த உருது, அரபு, தெலுங்கு பேசும் மக்கள் மற்றும் வடநாட்டிலிருந்து வந்தவர்கள். இவர்களின் பேச்சு மொழிக் கலப்பு வெகு காலத்துக்கு முன்பிருந்தே வந்திருக்கிறது.

இந்த மெட்ராஸ் பாஷையை பிரபலப்படுத்தியதில் தமிழ் சினிமாக்களுக்கு பெரும்பங்கு உண்டு. அதன் வரலாறை பார்ப்பதற்கு முன் சினிமாவில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் சில சொற்களுக்கான அர்த்தங்களை பார்ப்போம்

சென்னை பாஷையில், உருதுக்கு அடுத்தபடியாக ஆங்கிலச்சொற்கள் அதிகமிருக்கும். காரணம் ஆங்கிலேயர்களிடம் கூலிகளாக வேலை செய்தவர்கள் அங்கு எஜமானர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை வீட்டிலும் பயன்படுத்தினார்கள்.

அங்கு மேடம்மேடம்என  பெண்களை அழைப்பதை  சுருக்கி ஆங்கிலேயர்கள் மேம்மேம் என அழைத்தனர். அதை பார்த்து மக்கள் வீட்டுப் பெண்களிடம் அப்படியே கூப்பிட நாளடைவில் இன்னாமேபோமேவாமேஎன்றானது.

அந்தாண்டஇந்தாண்ட

அந்த எண்டிலிருந்து இந்த எண்ட் வரை என்பதுதான் சுருங்கி அந்தாண்ட இந்தாண்ட என்றானது

அஞ்சலை,

வழக்கமாக வடசென்னையில் அஞ்சலை என்ற பெயர் பிரசித்தம். சூர்யா நடித்த ஒரு படத்தில் அஞ்சலை.. அஞ்சலைஅஞ்சலை என்ற பாட்டே உண்டு

அந்த பெயர் எப்படி வந்தது என்றால் ஆங்கிலேயர்கள் வீட்டில் மனைவியை ஏஞ்சல்ஏஞ்சல்என கொஞ்சுவதிலிருந்து உருவானது.

கம்னாட்டி,

ஹே நாட்டி கேர்ல்என ஆங்கிலத்தில் சிலர் கொஞ்சுவதை பார்த்திருப்போம், இதுதான் எஜமானர்கள் விசுவாசமான குறும்புக்கார வேலைக்காரனைகம் நாட்டி பாய்என அழைக்க அதுவே காலப் போக்கில் கம்னாட்டி என ஆனது.

போடா கஸ்மாலம் என்ற சொல் அடிக்கடி புழக்கத்தில் இருந்தது.

கசியும் மலம் போன்ற அருவருப்பானவனே என்பதுதான் கஸ்மாலம்.

உடான்ஸ், பீலா, டபாய்க்கிற, கலாய்க்கிற, சோமாரி, நாஷ்டா, டோமர் என பல சொற்கள் சுவாரசியமாக பயன்படுத்தப்பட்டு வருபவை.

பேமானிஎன்பார்கள் பேமானி என்பது அபிமானி என்ற சொல்லின் எதிர்ப்பதம். அபிமானி என்றால் நம்பத்தகுந்தவன்பேமானி என்றால் துரோகி

பெரும்பாலும் இந்த சொற்கள் உருது வழி வந்தவை.

இவற்றில் சில தமிழ் தூய தமிழ் சொற்களும் அடங்கும்.

பன்னாடை, குந்து.. போன்றவை அவற்றில் சில

சர்தான் சித்த நேரம் குந்து மேஎன்பார்கள்

உட்காரச் சொல்வதைத்தான் குந்து என்கிறார்கள் என்பது நாமனைவரும் அறிந்த விடயம். அது எப்படி உருவானதென்றால் நாற்காலி போன்ற இருக்கைகள் உருவாகாத காலத்தில் நின்றுகொண்டே பேசும் விருந்தாளிகளை குந்தியிருங்கள் என சொல்ல ஆரம்பித்தனர். இதன் உண்மையான சொல் குண்டியிரு…. குண்டியால் இரு என்பதன் அர்த்தம் இது. நாளடைவில் இது மருவி குந்தியிரு என்பதாகி பின் குந்துவாகிவிட்டது. இதைத்தான் நமது பாவேந்தர் பாரதிதாசன்காற்று குந்திச் சென்றது; மந்தி வந்து குந்திஎன்று குந்து, குந்தி என்ற சொற்களை அழகாக தனது கவிதைகளில் பயன்படுத்தி இருப்பதை காணலாம்.

பன்னாடை என்பது இயற்கை வடிகட்டி.. தென்னங்கள்ளை இறக்கும் போது அதில் இருக்கும் புழுக்களை, தூசி தும்புக்களை வடிகட்ட பயன்படுத்துவது வழக்கம். அது கெட்ட விஷயங்களை எடுத்துக்கொண்டு நல்ல விஷயங்களை கீழேவிடுவதால் அதுபோல கெட்ட விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்பவனை பன்னாடை என திட்டுவது வழக்கம்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மெட்ராஸ் பாஷை என்பது நகைச்சுவை. நடிகர்களால்தான் அதிகம் பேசப்பட்டு வந்தது. அது கிண்டலுக்குரிய பாஷையாக அல்லது அதை பேசினாலே சிரிப்புவரும் பாஷையாக தமிழ் சினிமாவில் உலவி வந்தது மிகுந்த ஆச்சர்யமான ஒன்று. சினிமாவின் கர்ப்பகிரகமாக சென்னை இருக்கும் போதே சென்னை பாஷை ஏதோ அன்னியமாக வேற்றுகிரக பாஷை போல உருவாக்கம் கண்டது ஆச்சர்யம் தான்.

ஆனால் மவுன சினிமா காலங்களில் நடிகர்களாக நடித்தவர்கள் பெரும்பாலும் சென்னை சுற்றிய ஆட்களாகத்தான் அழைத்து நடிக்க வைத்தனர். குறிப்பாக அப்போது ஆக்ஷன் மற்றும் சர்க்கஸ் காட்சிகளுக்கு வரவேற்பு இருந்த காரணத்தால் சென்னையில் ஒடுக்கப்பட்ட பகுதிகளில் குஸ்தி போடும்  வஸ்தாஸ்த்துக்களைத் தேடி மவுன சினிமா தயாரிப்பாளர்கள்  அலைந்தனர் .

அப்போது சென்னையில் பல்வேறு குழுக்கள் குஸ்தி சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டனர்.  நாட்டு மருந்து வைத்தியர் பரம்பரை, சார்பேட்டா பரம்பரை, இரும்பு மனிதர் ராசமாணிக்கம் பரம்பரை  போன்ற பரம்பரைகள் வெவ்வேறு குழுக்களாக  பிரிந்து முறையாக குஸ்தி சிலம்பம் போன்றவற்றை கற்றுக்கொடுத்தனர்.

அதில் பயிற்சி பெற்றவர்களை சாண்டோ என அழைத்து கவுரவித்தனர் . ராஜா சாண்டோ, சாண்டோ சின்னப்ப தேவர் போன்றவர்கள் இப்படி வந்தவர்களே. ஆனால் இவர்கள் வெளி மாவட்டத்திலிருந்து வந்தவர்கள். சென்னையில் அப்படி குஸ்தி பயில்வானாக இருந்து நடிகராக மாறியவர்களில் ஸ்டண்ட் ராஜூ மற்றும்   பாட்லிங் மணி .. ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்

 

 

பாட்லிங் மணி

தலித் சினிமா இன்று தமிழ் சினிமாவில் பேசு பொருளாகியுள்ளது முக்கிய கவனம் பெற்றுள்ளது. ஆனாலும் இந்த தலித் சினிமாக்களின் தந்தை என்றால் பாட்லிங் மணியைத்தான் சொல்ல வேண்டும்.

மவுனப் படங்களில் நடிக்க குஸ்தி தெரிந்த ஆட்களை தேடி சென்னையில் ஒரு இயக்குனர் தேடியபோது புகழ்பெற்ற தாதாவாக இருந்தவர் இந்த மணி. அக்காலத்தில் தெருச்சண்டைகளின் போது சோடா பாட்டிலை திறமையாக சுற்றக்ககூடியவர். அதனாலேயே அவருக்கு பாட்லிங் மணி என பெயர் வந்திருக்ககூடும் என கருதுகின்றனர்.

மவுன படங்களில் குஸ்தி சண்டை மூலமாக புகழ்பெற்ற இந்த பாட்லிங் மணி பேசும்பட காலத்திலும் தொடர்ந்து நடித்து வந்தார்.  1936ல் மெட்ராஸ் மெயில், ,1937ல் மிஸ் சுந்தரி  போன்ற படங்களில் நடித்தவர். பெரும்பாலும் அப்போது தயாரிப்பு முதற்கொண்டு சினிமாவின் அனைத்து துறைகளிலும் பிராமணர்களே ஆதிக்கம் செய்து வந்த சூழலில் 1938ல் ஹரிஜன சிங்கம் என தலைப்பு வைத்து அதில் நாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் தானே தயாரித்தும் வெளியிட்டார். பிற்பாடு வியாபாரத்துக்காக மெட்ராஸ் சிஐடி என இன்னொரு தலைப்பு வைத்துக்கொண்டார். அக்காலத்தில் இரண்டு தலைப்பு வைப்பது வழக்கம், அவ்வகையில் தமிழ் சினிமாவில் தலித் சினிமாவின் முன்னோடியாக சென்னை நடிகராகவும் முத்திரை பதித்த பெருமை பாட்லிங் மணிக்கு உண்டு.

அதேபோல அக்காலத்திலேயே ஹரிஜனப் பெண் என்ற தலைப்பில் அதே ஆண்டு ஒரு படம் வந்தது. அதில் நடிகையாக நடித்த எம்.எஸ்.விஜயாள் சிறுவயதிலிருந்தே நாடகத்தில் நடித்து புகழ்பெற்று மவுனப்படங்களிலும் நடித்து பேசும்பட காலத்தில் புகழ் உச்சியை தொட்டவர். அவர் இந்த கதையின் முற்போக்கு சிந்தனையை அறிந்து அதை தயாரித்த சி.வி.இராமன் என்பவரிடம் தனக்கு இப்படத்தில் சம்பளமே வேண்டாம் என மறுத்துவிட்டார்.

 

ஆரம்பகால சினிமாக்களில் புராணக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  பிற்பாடு அடுக்கு மொழி, இலக்கிய நடை, வசனம் பயன்படுத்த ஆரம்பித்தனர். இக்காலத்தில் தஞ்சையை சேர்ந்த எழுத்தாளர்களின் ஆதிக்கம் சினிமாவில் அதிகரிக்கத் துவங்கியது.

திருவாரூரிலிருந்து மட்டும் கலைஞர் கருணாநிதி, தங்கராசு, ஆரூர்தாஸ் ஆகிய மூவர் 50களில் கொடிகட்டிப் பறந்தனர்.  பற்றாக்குறைக்கு பாடல் எழுத வந்த மருதகாசி பட்டுக்கோட்டை என அவர்களும் காவிரி பூமியை சார்ந்தவர்கள். இதனால் எடுத்த எடுப்பிலேயே தமிழ் சினிமாவுக்கு தஞ்சை திருச்சி பேச்சு வழக்கு தொற்றிக்கொண்டதால் சென்னை மொழி சினிமாவில் சுத்தமாக ஒதுக்கப்பட்டது.

ஆனாலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக மெட்ராஸ் பாஷை தமிழ்  சினிமாவில் புழங்கத் துவங்கியது.

மெட்ராஸ்பாஷை எனப்படும் சென்னை பாஷையில் சில சொற்றொடர்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றையும் இதற்கான உண்மையான அர்த்தங்களையும் கொஞ்சம் பார்ப்போம்.

என்.எஸ்.கிருஷ்ணன்தான் நகைச்சுவைக்காக மெட்ராஸ் பாஷையை பயன்படுத்திய முதல் நடிகர். தனது கிந்தனார் கலாட்சேபத்தில் அவர் கலாட்சேபத்தினூடே மெட்ராஸ் பாஷையை அறிமுகப்படுத்தும் விதமாக இப்படி கூறுவார்

மதராஸ்ல ரிக்ஷாகாரங்களுக்குனு தனியா ஒரு பாஷை உண்டு”. ஒருத்தன் கேட்பான். “இன்னா நைனாநேத்து உன்னே காணும்”.? என்று. அதற்குஉடம்பு பேஜார் பிடிச்சுப் போச்சு வாத்தியாரே! ஜல்பு புடிச்சுகிச்சு.!” என்பார். அதாவது ஜலதோஷம் பிடித்திருப்பதை ஜல்பு என்று சொல்லுவார்கள்!” இப்படி என்.எஸ்.கே அவர்கள் நகைச்சுவையாக கூறுவார்.

என்.எஸ்.கேவுக்குபின் சினிமாவில் மெட்ராஸ்பாஷையை அதிகம் பயன்படுத்தியவர் சந்திரபாபு. இவரது பூர்வீகம் தூத்துக்குடி, ஆனால்  பெரும்பாலும் மெட்ராஸ் பாஷைதான்  படங்களில் பயன்படுத்தி வந்தார்.

ஸ்ரீதர் இயக்கத்தில் 1962ஆம் ஆண்டு உருவானபோலீஸ்காரன் மகள்படத்தில்தான் முழுவதுமாக மெட்ராஸ்பாஷை பேசி நடித்தார். ’‘மணிக்கொடிஇதழ் எழுத்தாளர்களில் ஒருவரான பி.எஸ்.ராமைய்யா எழுதியிருந்த நாடகம் தான் போலீஸ்காரன் மகள். இப்படத்தில் சந்திரபாபுமனோரமா ஜோடிக்கான வசனங்கள் அனைத்தையும் சென்னை வட்டார வழக்கில் எழுதியிருந்தார் கோபு.

ஸ்ரீதரின் ஆஸ்தான எழுத்தாளரான கோபு சென்னையை பூர்வீகமாக கொண்டவர். போலீஸ்காரன் மகள் படத்தில் சந்திரபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருந்ததற்கு முதல்நாள், நகைச்சுவை காட்சிகளை கோபு படித்துக் காட்டியவுடன் அவரையே வெறித்துப் பார்த்த சந்திரபாபு, “கோபு, ஒங்க வூடு எந்த ஏரியாவாண்டே இருக்கு?” என்று மெட்ராஸ் பாஷையில் கேட்டார். “திர்லகேணி வாத்தியாரே!” கோபு மெட்ராஸ் பாஷையிலேயே பதிலடி கொடுக்க, சந்திரபாபு சிரித்துவிட்டார்.”ஆங்ங்அதான பார்த்தேன்பேட்டை பாஷை அப்படியே நொம்பி ஊத்துது.! மதராஸ் பாஷை பிறந்ததே. ஜார்ஜ் டவுன், திர்லகேணி, மைலாப்பூர் ரிக்ஷா ஸ்டாண்டுலதான் அது தெரியுமா வாத்தியாரே உனக்கு?” என்று கேட்டார் சந்திரபாபு.

சபாஷ் மீனா படத்தில்இன்னாடா இது பேஜாரா போச்சு.. இன்னாடி எப்ப பார்த்தாலும் ராங் பன்ற நீஎன சந்திரபாபு அவ்வப்போது மெட்ராஸ் பாஷை பேசுவார். அதைத் தொடர்ந்து அதிகமாக மெட்ராஸ் பாஷை பேசி நடித்தவர் சோ.

1968ஆம் ஆண்டு சோமனோரமாவுடன் சேர்ந்து நடித்த பொம்மலாட்டம் எனும் படம் முழுக்க முழுக்க மெட்ராஸ் பாஷையை அடிப்படையாக வைத்துவா வாத்யாரே ஊட்டாண்டேஎனும் பாடலை பாடி ஆடி நடித்திருப்பார்கள்.

வி.குமார் இசையில் வாலி எழுதிய பாடல் இன்றும் பிரபலம்.

சோவுக்கு பிறகு தேங்காய் சீனிவாசன். ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் ரிக்ஷா ஓட்டுனராக வரும் தேங்காய் சீனிவாசன், ஆரம்பத்திலிருந்து கடைசிவரை செம லோக்கலாக மெட்ராஸ் பாஷை பேசி கலக்கியிருப்பார். மெட்ராஸ் பாஷையைப் பேசுவதில் சந்திரபாபுக்கு அடுத்தபடியாக அதிகமாக பாராட்டுப் பெற்றவர் தேங்காய் சீனிவாசன். அவர் தன்போல புதுப்புது வார்த்தைகளை உருவாக்குவதிலும், வல்லவராக இருந்தார்.

இந்த வரிசையில் ஏனோ நாகேஷ் மட்டும் சென்னை பாஷை பேசி நடிப்பதில் அவ்வளவாக சோபிக்க முடியவில்லை.

சென்னை நகர அடித்தட்டு மக்களின் வாழ்வை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட முதல் படமானபசிபடத்தின் உரையாடல்கள் முழுக்கவும் மெட்ராஸ் பாஷையில் உருவானதுதான்.

இப்படத்தில் நடித்தபசிசத்யா தொடர்ந்து பல படங்களில் சென்னை குடிசைப் பகுதி பெண்ணாக மெட்ராஸ்பாஷை பேசி நடித்தார்.

சுருளிராஜன் படங்களில் பெரும்பாலும் மெட்ராஸ் பாஷை இருக்கும். அவர் கிராமத்தானாக நடித்தாலும் மெட்ராஸ் பாஷையில்தான் பேசுவார்.

சினிமாவில் உண்மையில் மெட்ராஸ் பாஷையை பிரபலமாக்கியவர்லூஸ் மோகன்”. கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொண்டு முகத்தை அஷ்ட கோணலாக்கி மெட்ராஸ் பாஷை பேசி நம் மனதைக் கவர்ந்தவர் சிரிப்பு நடிகர் லூஸ் மோகன். அவர் பேரைச்சொன்னாலே மெட்ராஸ் பாஷை ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு மெட்ராஸ் பாஷையையும் லூஸ் மோகனையும் பிரிக்க முடியாது. இன்னா பயண்ட்டியா? நான் ஆர் தெரிமா…? என ஒருபக்கம் உடலை சாய்த்துக்கொண்டு பேசியது தனி அடையாளமானது. லூஸ் மோகனின் மெட்ராஸ் பாஷை மூலம் மற்ற மாவட்டங்களில் உள்ளவர்ளும் அதைப்போல பேசவும் செய்து பார்க்கவும் பழகினர். இவர் தந்தை லூஸ் ஆறுமுகம். அவரும் திரைப்பட நடிகரே! கடைசியாக நடித்த படம் தங்கர்பச்சானின் அழகி படம். இதில் நடிகர் பாண்டுவின் தந்தையாக நடித்திருந்தார்.

நாயகர்களில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த முதல் நடிகர் கமல்ஹாசன் தான். சட்டம் என் கையில் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக வரும் நாயகன் மெட்ராஸ் பாஷை பேசுவான்.

அப்போது கமலுக்கு மெட்ராஸ் பாஷை கற்றுக் கொடுத்தவர் லூஸ் மோகன் தான்.

திருட்டை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட இன்னொரு கமல் படமான சவால் முழுவதும் மெட்ராஸ் பாஷையிலேயே உருவாக்கப்பட்டிருக்கும். இதில் கூடுதலாக மனோரமா பர்மா பாப்பா எனும் பெயரில்                         மெட்ராஸ் பாஷை பேசி கலக்கியிருப்பார். பர்மா அகதிகள் பலர் சென்னை வியாசர்பாடியில் தஞ்சமடைந்து தனி காலணியை உருவாக்கினர். அவர்களது வாழ்கையும், கலச்சாரமும் சென்னையோடு கலந்து இன்னொரு பரிணாமத்தை உருவாக்கியது. பர்மா பாப்பா பாத்திரத்தில் நடித்த மனோரமா அதை பிரதிபலித்தார்.

இதுவரை சினிமாவில் பயன்படுத்தபட்ட மெட்ராஸ் பாஷை எல்லாமே அசலானது அல்ல. அவை செயற்கையானது. லூஸ் மோகன் ஒருவர் தவிர கமலஹாசன் உட்பட சென்னை பாஷையை போலியாகவே பிரதியெடுத்தனர். உண்மையில் மற்ற எந்த பாஷை நடிப்பிலும் எதார்த்ததை பிரதிபலிக்கும் கமலஹாசனால் சென்னை பாஷையை எதார்த்தமாக பேச முடியவில்லை. பம்மல்.கே.சம்மந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் வரை அவர் அதற்கு முழு நியாயம் செய்யவில்லை. சோ, கிரேஸி மோகன், உருவாக்கிய மேடை மெட்ராஸ் பாஷையின் நீட்சியாகவே இருந்தது.

இதில் என்ன கொடுமை என்றால் உழைக்கும் வர்க்கத்தினரால் உருவாக்கப்பட்ட இந்த சென்னை பாஷை சினிமாவில் திருடர்கள், ரவுடிகள் பேசும் மொழியாக சித்தரிக்கப்பட்டது ஒரு காலக்கொடுமை.

ஜனகராஜ் தான் ஓரளவு இந்த இழி நிலையை மாற்றினார்.  

கோட் சூட் போட்டுக் கொண்டும் இன்னாநைனாமெட்ராஸ் பாஷை பேசும் கலாச்சாரத்தை சினிமாவுக்கு கொண்டு வந்தவர். பொதுவாக வாயைக் கோணலாக வைத்துக்கொண்டு இவர் பேசும்போது அதில் மெட்ராஸ் பாஷையை கலந்து அடிப்பது பரோட்டாவும் சேர்வாவும் சேர்த்து குழப்பிவிட்டு ஒரு ஆப்பாயிலை உடைக்காமல் விழுங்கி அதை ஆப் செய்வதுபோல முழுமையாக இருக்கும்.

புதியபாதை படத்தில் பார்த்திபன் ஓரளவு முயற்சித்திருப்பார்.   

அடுத்து பாரதிராஜா  என் உயிர்த்தோழன் திரைப் ப்டத்தில் சென்னை குடிசைப் பகுதி வாழ்க்கை அதில் அரசியல்  வாதிகளால் சுரண்டப்படும் இளைஞன் என சென்னை படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டார்.              

சென்னை பாஷை பல வருடங்கள் இல்லாத சூழலில் சித்திரம் பேசுதடி 2006ஆம் ஆண்டு வெளியாகியது. அதில் கானா உலகநாதன் பாடியவாளை மீனுக்கும்.. விலாங்கு மீனுக்கும்பாடல் மெட்ராஸ் பாஷையில் அமைந்ததோடு அல்லாமல் அது அங்கு வாழும் குறிப்பிட்ட மீனவ சமுதாய வாழ்க்கையை பிரதிபலித்தது.  அதே ஆண்டு வெளியான எஸ்.பி ஜனநாதனின் படம் தமிழ் சினிமாவில் சென்னை பாஷைக்கு ஓரளவுக்கு மரியாதை செய்த முதல்படம் எனலாம்.

இதன் பிறகு 2007க்குப் பின் வடசென்னையை மையமாகக் கொண்டு பல படங்கள் வத வதவென வெளியாகத் துவங்கின. சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என வகைப்பாடில்லாமல் ஒரு காலத்தில் கிராமப்படம் எப்படி புற்றீசல்போல படையெடுத்ததோ அதுபோல பல படங்கள்  வெளியாகின. திரும்பிய திசையெல்லாம் தலைவிரி முடியுடன் வடசென்னை முகங்களைக் கொண்ட போஸ்டர்கள் மிரட்டின.

சிட்டி ஆப் காட் என்ற பிரேசில் திரைப்படம். இக்காலத்தில் கோடம்பாக்கம் உதவி இயக்குனர்களிடையே மிகப்பிரபலமாகி கொண்டிருந்ததும் இந்த  திடீர் வடசென்னை சார்ந்த படங்கள் அதிகம் வர மிக முக்கிய காரணம்.

இதுபோன்ற விளிம்பு நிலை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குற்றங்கள் குற்றவாளிகள் எப்படி உருவாகின்றனர் என்பதுதான் அந்த பிரேசில் படத்தின் கதை. வடசென்னையின் குறிப்பிட்ட பகுதிகள் அந்த கதைக்களத்துக்கு மிகவும் பொருந்தி வந்ததால் பலரும் இதை சினிமாவாக்க களமிறங்கினர்.

இதில் ஓரளவு பேசப்பட்ட படம் செல்வராகவனின் புதுபேட்டை. இப்படம்  வாழ்வியலைவிட பெரிதும் நாயக பிம்பம் சார்ந்து புழங்கியதால்  சென்னை பாஷை ஓரளவுக்கு மட்டுமே பயன்படுத்தபட்டது. ஆனாலும் சென்னை நகரின் குற்றப்பின்னணி கொண்ட வாழ்க்கையின் எதார்த்த உலகு முதன்முறையாக அதன் குரூர உலகத்துடன் பதிவானது.

இதே காலகட்டத்தில் உருவான சென்னை 28 திரைப்படம் சென்னையின் இன்னொரு முகத்தை கிரிக்கட் பின் புலத்தோடு காட்டப்பட்டது. மத்திய சென்னை தென் சென்னையின் நடுத்தர இளைஞர்களின் வாழ்க்கையாக இப்படம் அமைந்த காரணத்தால் இதிலும் சென்னை பாஷை பிரதானமாக பயன்படுத்தப்படவில்லை

இந்த வரிசையில் வாழ்வியல் அடிப்படையிலும் மொழி அடிப்படையிலும் ஓரளவு பொல்லாதவன் ஒரு உச்சத்தை கண்டது. இதிலும் ரவுடி வாழ்க்கை என்ற குறைதான் என்றாலும் வில்லனாக நடித்த கிஷோர் பாதி ஆங்கிலம் கலந்த சென்னைத்தமிழ் பேசும்போது எதார்த்தம் பிரதிபலித்தது, அதுகூட முழுமையில்லை வில்லன் பாத்திரபடைப்பில் மட்டும்தான்.

ஆனால் மெட்ராஸ்பாஷையின் உச்சம் என்றால் அது ரஞ்சித்தின் அட்டகத்தி மூலமாக நிகழ்ந்தது. அட்ட கத்தி, சென்னையின் புறநகர் பகுதியில் வாழும் ஒரு தலித் நாயகனாக சித்தரிக்கப்பட்ட காரணத்தால் அவர்களது குடும்ப வாழ்வை மிக எதார்த்தமான சித்தரிப்புடன் வாழ்வியலை பதிவுசெய்வதில் வெற்றி பெற்றது. வாழ்வியல் சித்தரிப்பு வந்தாலே பேச்சும் பாஷையும் எதார்த்தமாய் அமைந்துவிடும். அவ்வகையில் அட்டகத்தியில் நாயகன் சென்னைத்தமிழை அசலாக பேசினான்.

வெறும் மொழி என்பதை கடந்து உள்ளும் புறமுமாக வடசென்னை மக்களின் வாழ்க்கையை அதன் அழகை செதுக்கிய பெருமை ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தையே  சாரும். அட்டகத்தி போலவே இதிலும் நாயகன் குடும்ப வாழ்க்கையின் எதார்த்தமும் பேச்சு மொழியும் மிக உயிரூட்டமாய் அமைந்திருந்தது.  கால் பந்தாட்டம், சுவர் ஓவியம் என சென்னை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பதிவுசெய்யப்பட்டிருந்தது. அசலான சென்னை பாஷை பேசிய முதல் நாயகி இப்படத்தின் கேதரின் தெரஸாதான், என்னை கல்யாணம் பண்ணிகிறீயா.. அய்ய வாயேன் எனும் அவரது இயல்பான பேச்சு மொழி அனைவரையும் வசீகரித்தது

அதேபோல இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் டேனி பேசும் பிரண்டூ பீல் ஆயிட்டாப்ல வசனம் மிக பிரசித்தம். இதிலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி வாழ்க்கைதான். விஜய் சேதுபதி தன் உடல் மொழியால் சென்னை இளைஞனாக வாழ்ந்து காட்டியிருந்தார்.

நகைச்சுவை, கேலி, கிண்டல், பொழுதுபோக்கு என்ற அளவில் மட்டுமே இருந்த சென்னை வாழ்க்கை மொழியை அழகியலாக்கி அதை கலையாக்கிய பெருமை இயக்குனர் ரஞ்சித்துக்கு சேரும் என்றால் அதை கலாச்சார அதிர்ச்சிக்கு ஆளாக்கி பொது சமூகத்தை உறைய வைத்த பெருமை இயக்குனர் வெற்றிமாறனைச் சேரும்.

 

சமீபத்தில் வெளியான வெற்றிமாறனின் வடசென்னை மெட்ராஸ் பாஷையை மட்டுமல்லாமல் அவர்களது உயிரூட்டமான இருண்ட வாழ்வை அவர்களுக்கே உரிய கெட்ட வார்த்தைகள் என பொது சமூகம் மறுதளித்த வார்த்தைகளுடன் இன்னொரு எதார்த்தத்தை பிரதிபலித்தது. .ஆங்கிலத்தில் டிக்ஷன் எனப்படும் அசலான மெட்ராஸ் பாஷை உச்சரிப்பு இப்படத்தில்தான் மிகச்சரியாக பயன்படுத்தப்பட்டது.

இப்படம் முழுமையான சென்னை வாழ்க்கையாக அல்லாமல் அதன் ஒரு பகுதியான காசிமேடு எனும் கடற்கரை மீனவ குப்பத்தில் அடிதடி, கொள்ளை, கொலை ஆகிய குற்றப்பின்னணி கொண்ட இரண்டு ரவுடிகும்பல், அவர்களைச்சார்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை 1987 முதல் 2003 ஆம் ஆண்டுவரை துல்லியமாக பதிவு செய்தது இப்படம். என்றபோதும் இப்படத்திற்கு மீனவ சமூகத்திலிருந்தும் இன்னபிற வட சென்னை பகுதி வாழ் மக்களிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்ததையும் கவனத்தில் கொள்வோம்.

அயிட்டகாரன், கேஸ் வாங்குவது. மூஞ்சிகாரன், அசால்ட், மட்டையாயிட்டான், பெப்ஸி, லோடு ஏற்றுவது, தவ்லத்,  என்பது போல குறிப்பிட்ட இனக்குழுவுக்குள் பயன்படுத்தப்படும் குழுவூக்குறிகள் இப்படத்தில் அதிகம் பயனபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல உச்சரிப்பிலும் சென்னை பாஷையில் உச்சமான படமாக இதை சொல்லமுடியும்.

முன்பெல்லாம் சென்னை பாஷை பேசுபவர்களை அசூயையுடன் மூக்கை பிடிக்கிறார்போல பார்த்த காலமெல்லாம் இப்போது இல்லை. சென்னை பாஷை யாராவது பேசினால் அதன் அழகை நின்று ரசிக்கவும் தாங்களும் பேசிப்பார்க்கவும் இன்றைய இளைய தலைமுறை மாறியிருக்கிறது . மேற் சொன்ன ரஞ்சித் மற்றும் வெற்றி மாறன் தங்கள் கலைமுயற்சியால் சாதித்தது இதைத்தான்.

கானா பாலா, கானா உலகநாதன் போன்ற சென்னை பாஷையில் கானா பாடும் கலைஞர்கள் பிரபல மேட்டுக்குடி பாடகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குகின்றனர். சில படங்களின் வெற்றிக்கு இவர்களது கானா பாடல்கள் மட்டுமே பெரும் காரணமாகவும் இருந்து  வந்திருக்கிறது.

அதுபோல இசையமைப்பாளர்களில் முன்பு தேவா தனது பாடல்களில் சென்னை பாஷைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

ஆனால் இப்போது சந்தோஷ் நாராயணன் தனது அபாரமான பின்னணி இசை மூலம் சென்னை வாழ்க்கைக்கு புதிய பரிணாமத்தை கூட்டி வருகி்றார்.

இதுவரை தமிழ் சினிமாவில் சென்னை பாஷை அடைந்து வந்த பல்வேறு பரிணாம வளர்ச்சியை பார்த்தோம். இன்னும் இதில் நான் தொடாத பக்கங்கள் பல இருக்கின்றன. தொடர்ந்து பலரும் இந்த களத்தை எடுத்து ஆய்வு செய்தால் இதைவிட மேலும் பல சுவாரசியமான பக்கங்களை தருவிக்க முடியும்.

இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

நவம்பர் 17 2018 அன்று  சென்னை பல்கலைக்கழகம்  நடத்திய சென்னை வழக்காறு குறித்த கருத்த்ரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை 

2 Comments

 1. Elayathambi Thayanantha

  சென்னைத் தமிழில் கையாளப்படும் சொற்களுக்க்கான விளக்கம் அருமை. இதில் டபாய்க்கிறாய் என்பது ஏண்டா அப்பா ஏய்க்கிறாய் என்பதன் சுருக்கம் என்று யாரோ சொன்னது நினவுக்கு வந்தது. குண்டி இரு என்பதுதான் குந்தி என்று சொன்னதும், அதிர்ச்சியாய் இருந்தது. ராஜராஜ சோழன் தன் மகளுக்கு ஏன் குந்தி என்று பெயர் வைத்தான் என்று யோசித்ததில்…

  Reply
  1. ajayan bala (Post author)

   அது குந்தி அல்ல குந்தவை, மகபாரட்டஹ்திலேயே குந்தி வந்துவிட்டது ஆனால் அது வேறு

   Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *