#பெர்னாட்டோ_பெர்ட்டலூச்சி_Bernardo_Bertolucci 16 March 1940 – 26 November 2018)

A7A08A09_182.jpg

பாரீஸ் நகரின் பிரம்மாண்ட இரண்டடுக்கு பாலத்தின் மேல் ரயில் ஒன்று வேகமாக தடதடத்துச் செல்ல அதைப் பார்த்த படி மெல்ல கீழிறங்கும் காமிரா பாலத்தை தாங்கும் இரட்டை தூண்களுக்கிடையிலான சாலையொன்றில் முழு நீள கோட்டுடன் மிகுந்த மனச்சோர்வுடன் ஒருவன் (மார்லன் பிராண்டோ) நடந்து வருகிறான். கலைந்த கேசம் முகத்தில் வெம்பும் துயரம். அவன் சமீபமாக தன் மனைவியை இழந்து அத்துயரை கடக்க பாரீஸ் நகரத்தினுள் வந்திருக்கும் அந்நியன். கோட்டு பாக்கெட்களில் உள்ளங்கைகளை மறைத்தபடி தடுமாறும் அவனை காமிரா பார்க்க அவனுக்குப் பின்னால் குவியமிலா (அவுட் ஆப் போகஸ்) காட்சியில் இருபது வயது மதிக்கதக்க ஒரு இளம்பெண் நடந்துவருகிறாள். இவனைக் கடந்தவள் என்ன தோனியதோ அவனைத் திரும்பப் பார்க்கிறாள் . அதுவரை சோர்வாக இருந்தவன் அவள் பார்வையால் உற்சாகம் கொள்கிறான் . அவளை வேகமாக பின்தொடர அவளும் அவனை புரிந்து கொண்டவளாக ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் யாரும் வசிக்காத ஒரு ப்ளாட்டினுள் நுழைய இவனும் அவளுடன் நுழைகிறான். இவன் பேர் என்ன அவளுக்கு தெரியாது அவள் யார் எங்கிருந்து வருகிறாள் எதுவும் இவனுக்கும் தெரியாது. இருவரும் இணைகின்றனர். இப்படியாக துவங்கிறது பெர்ட்டலூச்சி இயக்கத்தில் 1972-ல் வெளியான Last Tango in Paris திரைப்படம்.
பிற்பாடு பெரும் சர்ச்சைக்குள்ளாகும் அளவிற்கு பாலுறவு காட்சிகளைக் கொண்ட இப்படம் பெர்ட்டலூச்சியின் திரைப்பட மேதமைக்கு எடுத்துக்காட்டாகவும் அதே சமயம் அந்த மேதமையின் சாரம் எதன் பொருட்டு என கேள்வி எழுப்பவும் செய்தது.
படத்தில் நாயகியாக நடித்த மரியாவின் அனுமதி பெறாமல் அவளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக வன்புணர்வு காட்சியை படம்பிடித்து அதை படத்தில் இணைத்திருந்தவிதம் தான் இத்தனை கேள்விக்கும் காரணம். இதன் பொருட்டு பெர்ட்டலூச்சி நான்கு மாத சிறைத்தண்டனையையும் ஐந்து ஆண்டுகள் அவரது குடியுரிமையும் பறித்துக்கொள்ளும் அளவிற்கு இவ்வழக்கு கொண்டுபோனது. .மேலும் அந்த திரைப்பட பிரதிகள் இத்தாலியில் திரையிடாமல் முழுமையாக அழித்தொழிக்கவும் உத்தரவிடப்பட்டது.
BETALUCCI WITH PASSOLINI
பெர்ட்டலூச்சி கட்டற்ற காமத்தின் மூலமாக சொல்ல விரும்பிய உடல் இச்சை சார்ந்த உண்மைகள் இத்தாலியின் மத இறுக்கத்திலிருந்து தப்பிக்கும் விதமாகவும் இருத்தலியல் கோட்பாட்டுக்கு ஆதரவாகவும் உருவாக்கப்பட்டிருந்தாலும் அது தனிநபரின் சுதந்திரத்தை பறித்து கொண்டதன் காரணமாக அவர் தொடர்ந்து இப்பிரச்சனைக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. நாயகியாக நடித்த மரியா 2011-ல் மரணிக்கும் போது கூட பெர்ட்டலூச்சியை மன்னிக்கவில்லை.
இத்தாலியின் பார்மா நகரத்தில் மார்ச் 1940-ல் பிறந்த பெர்ட்டலூச்சியின் தாய் ஒரு பள்ளிகூட ஆசிரியை. தந்தை ஒரு கவி வரலாற்றாய்வாளர் மற்றும் திரைப்பட விமர்சகர். இதனால் இலக்கியம் மற்றும் அறிவுசார் சமுக சூழலில் அவர் வளர்ந்த காரணத்தால் தன் இருபதாம் வயதில் சிறந்த கவிதைத்தொகுப்பை வெளியிட்டு அதற்காக பரிசுகளையும்
 SHOT FROM LOST TANGO IN PARIS 
பாராட்டையும் பெற்று அக்காலத்திய இலக்கியவாதிகளின் கவனத்தைப் பெற்றவராக இருந்தார். உடன் ரோம் பல்கலைகழகத்தில் நவீன இலக்கியதில் பட்ட படிப்பையும் முடித்தார்.
இக்காலகட்டத்தில் அவரது அப்பாவுக்கு இயக்குனர் பசோலினியின் நட்பு கிடைக்கப் பெற அவர் தன் மகன் பெர்னாட்டோ பெர்ட்டலூச்சியை உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். பசோலினியிடம் அப்போது போதுமான உதவி இயக்குனர்கள் இருந்தாலும் பணக்காரன் அர்த்தூலியோ பெர்ட்டலூச்சியின் மூலம் தன் முதல் நாவலை வெளிக்கொணர இது சரியான வாய்ப்பாக இருக்கும் என அவர் நினைத்தார். இந்த ஒப்பந்தத்தை அவரும் ஏற்க அதன்படி பசோலினியின் முதல் நாவல் அச்சாகி வெளியாகியது. பெர்னாட்டோ பெர்ட்டலூச்சியும் சினிமாவுக்குள் ஒரு உதவி இயக்குனராக நுழைந்தார்.
இதைத் தொடர்ந்து பசோலினியின் கவித்துவ சினிமாவும் பாலுறவு அரசியல் மத எதிர்ப்பு ஆகியவையும் பெர்ட்டலூச்சியினுள் ஊடுருவத் துவங்கின பெர்ட்டலூச்சி முதல் படம் இயக்க வாய்ப்பு வந்த போது அதற்கான திரைக்கதையையும் பசோலினியே எழுதித்தந்தார். 1962-ல் லா காம்ர்ஸ் செக்கா எனும் அப்படத்தின் கதை ஒரு கொலையையும் அதை சுற்றிய மர்மங்களையும் பிண்ணிப்பிணைந்து உருவாக்கப்பட்டிருந்தது. 1964-ல் தொடர்ந்து அவரது இரண்டாவது படம்Before the Revolution (Prima della rivoluzione)வெளியானது. முந்தையப் படத்தில் பசோலினியின் படம் போலவே இருப்பதாக வெளியான விமர்சனங்களை முன்னிட்டு இப்படத்தில் அவருக்கான தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆனால் படம் வெளியான போது அதே பசோலினியின் சாயல் எனும் விமர்சனம் தொடர்ந்தது .
இருவருமே கவிஞர்கள் இருவருமே முசோலினிக்குப் பின்பான சமகால அரசியலால் படைப்பாக்கம் உந்தப்பட்டவர்கள்.மத இறுக்கத்தின் மீது தீவிர வெறுப்பைக் கொண்டவர்கள். இதனை எதிர்க்கும் கருவியாக பாலுறவை கண்டடைந்தவர்கள் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்கள் இப்படியான பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்த காரணத்தால் அவர்களின் படங்களும் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருந்தன.
இந்தப் படைப்புத் தடையை மீறும் அவசரத்தில் அவர் 1972-ல் ஒரு படத்தை உருவாக்கப் போக அப்படம் தான் முன்பு குறிப்பிட்ட Last Tango in Paris.
இப்படம் இத்தாலியில் மட்டும்தான் பெரும் விமர்சனத்தையும் சர்ச்சைகளையும் உருவாக்கியதே தவிர வெளிநாடுகளில் இப்படம் பெருத்த வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் உலக இயக்குனருக்கான அங்கீகாரத்தையும் வழங்கியது.அதன்பிறகு சில ஆண்டுகளுக்குப் பின் அவர் எடுத்த திரைப்படங்கள் அவரைப் படிப்படியாக உயரத்துக்கு அழைத்துச்செல்ல துவங்கின.
ஆனாலும் பெர்ட்டலூச்சிக்கு தன் மதம் சார்ந்த வெறுப்பும் இத்தாலியே பொறாமைப்படும் அளவிற்கு சாதிக்கும் அவாவும் பெருகியது. ஐரோப்பாவை விட்டு வெளியேறி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸூக்கு குடிபுகுந்த அவர் 1987-ல் அந்த லட்சியத்தை தி லாஸ்ட் எம்பரர் படத்தின் மூலமாக தீர்த்துக்கொண்டார்.
இன்று வாழும் உலகின் தலைச்சிறந்த பத்து இயக்குனர்களுள் ஒருவராக பெர்ட்டலூச்சியை அடையாளம் காண உதவும் படம் தி லாஸ்ட் எம்பரர்.
கம்யூனிசப் புரட்சிக்கு முன்பாக சீனாவை ஆண்ட பேரரசனான புயி எனும் அரசனின் வாழ்க்கையை மார்க் பிப்புள் என்பவர் நாவலாக எழுத அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு பெர்டலூச்சி ஒரு திரைக்கதையை எழுதி தயாரிப்பாளர் ஜெர்மி தாமாசிடம் தர இருவரும் இப்படத்தை தயாரிக்க சீன அரசை அணுகினர். எதற்கும் இருக்கட்டும் என சீனா சார்ந்த இன்னொரு திரைக்கதையையும் அவர்களிடம் தர சீன அரசு The Last Emperorபடத்துக்கு அனுமதி வழங்கியது.
உண்மையில் அப்போது எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தது முதல் முறையாக சீனா தன் பூட்டிக்கிடந்த கதவுகளை வெளியுலகுக்கு திறக்க நினைத்த நேரம் அது இந்த திரைக்கதையை அதற்கு சரியான வாசலாக இருந்த காரணத்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டனர் என ஒரு பேட்டியில் படத்தின் தயாரிப்பாளர் ஜெர்மி தாமஸ் கூறுகிறார்.
1950-ல் ஐக்கிய குடியரசாக கம்யூனிச ஆட்சிக்கு சீனா மாறிய காலத்தில் தன் நாட்டுக்குத் திரும்பும் புயி மன்னனிடமிருந்து துவங்கும் திரைக்கதை பிற்பாடு புயியின் இளமைகாலம். கம்யூனிசப்புரட்சி மாவோவின் செம்படை எழுச்சி என பல காலங்களை வாரிச் சுருட்டி இறுதியில் ஒரு டூரிஸ்ட் கைட் அரண்மனை முன்பிருந்து புயியின் வாழ்க்கையை சுருக்கமாக சொல்வதில் வந்து முடிகிறது. அசாத்திய தொழில் நுட்பங்களின் வரவை முன்னெடுத்துக் கொண்ட இத்திரைப்படம் காட்சி மொழியின் புதிய அணுகு முறைகளை கொண்டு உலக சினிமாவின் காட்சியல்ரீதியான புதிய ட்ரெண்டை அறிமுகப்படுத்தியது.
புயியின் சிறுவயது வாழ்க்கையை காண்பிக்கும் காட்சிகளில் காமிரா நகர்வும் பிரம்மாண்டமும் உலகம் முழுக்க பார்வையாளர்களை பரவசப்படுத்தின. சீன அரசர்களின் பிரம்மாண்ட அரண்மனைகள் கண்டு உலகமே வியந்தது.
இன்று வரை ப்ளாஷ் பேக் உத்திகளின் பைபிளாக விளங்கும் இத்திரைப்படத்தில் காமிர மேனாக பணி புரிந்த விட்டோரிய ஸ்ட்ரோர்ரோ உலகின் தலைச்சிறந்த ஒளிப்பதிவாளராக அல்லது முதல் ஐந்து ஒளிப்பதிவாளர்கலுள் ஒருவராக இன்றளவும் கவனிக்கப்படுகிறார். உலகம் முழுக்க வணீகரீதியாகவும் பெரும் வெற்றிப்பெற்ற இத்திரைப்படம் 60ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த திரைப்படம் சிறந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவு உட்பட ஒன்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துக் கொண்டது.
இத்திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இத்தாலிக்கு திரும்பியபோது இத்தாலியே அவர் கனவு கண்டபடி வியந்து பார்த்து வரவேற்றது.
1993-ல் அவர் இயக்கத்தில் வெளியான லிட்டில் புத்தா ஞானம் பெறுவதற்கு முந்தைய புத்தரின் வாழ்க்கையை அடியொற்றி வெளியானது. சிவப்பும் ஆரஞ்சுமான ஒளிப்பதிவும் ரியூச்சி சகமட்டோவின் பின்னணி இசையும் பிரமிப்பூட்டியது தொடர்ந்து Stealing Beauty (1996)Besieged (1999)Ten Minutes Older: The Cello The Dreamers (2003)Me and You (2012) என வரிசையாகப் படங்களை இயக்கி வெளியிட்டு சிறந்த இயக்குனருக்கான அந்தஸ்தை முழுமையாக தக்க வைத்துகொண்டிருக்கிறார்.
அவரது ஒட்டுமொத்த திரை பங்களிப்புக்காக 2007ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்க விருதும் 2011-ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
(இயக்குனர் Bernardo Bertolucci (பெர்னாட்டோ பெர்ட்டலூச்சி) இன்று 26-11-2018 இயற்கை எய்தினார். பாலுமகேந்திரா நூலகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.)
– அஜயன் பாலா
(உலகசினிமா வரலாறு பாகம்-3 புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *