என் இருபது வருட கனவு – அஜயன் பாலா

அண்மையில் வெளியான என் முதல் இயக்க படமான ஆறு அத்தியாயம் படத்தையொட்டி புதிய பார்வை இதழுக்கு நான் எழுதிய கட்டுரை

இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் “ ஆறு அத்தியாயம்,” இயக்குனராக எனக்கு முதல் படம். எனக்கு மட்டுமல்ல என்னோடு சேர்த்து ஆறுபேருக்கு. ஆமாம் இப்படத்தில் மொத்தம் ஆறு இயக்குனர்கள், ஆறு பதினைந்து நிமிட குட்டிப்படங்கள், ஆறிலும் ஒரே நாயகன். அந்த நாயகன் வேறு யாருமில்லை பேய் தான். ஆறு வித்தியாசமான பேய் கதைகள், இப்படி ஒரே தீமில் பல இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து இயக்கிய முயற்சிகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல படங்கள் வந்திருக்கின்றன, ஏன் தமிழ்நாட்டிலும் வந்திருக்கிறது. ஆனால் அவையனைத்திலும் இந்த ஆறு அத்தியாயம் கொஞ்சம் மாறுபட்டது.
இதில் அப்படி என்ன விசேஷம் என்றால்.. ஒவ்வொரு கதையின் முடிவு காண்பிப்பதற்கு முன்பே அடுத்த கதை துவங்கும். இப்படியாக அனைத்து கதைகளும் பாதியாக சொல்லப்பட்டு, இறுதி இருபது நிமிடங்களில் ஆறு கதைகளின் க்ளைமாக்ஸ் திருப்பங்களும் அதேவரிசையில் காண்பிக்கப்படும், இதுபோன்ற புதுமையான வடிவத்தில் உலகசினிமாக்களில் கூட வந்ததில்லை… உலகிலே கிட்டதட்ட முதல் சினிமா என்றுகூட சொல்லலாம். என்னைத்தவிர எழுத்தாளர் கேபிள்சங்கர்,படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் மற்றும் ஸ்ரீதர் வெங்கடேசன், லோகேஷ், சுரேஷ், என ஆறு இயக்குனர்கள். இதில் எழுத்தாளர் கேபிள்சங்கர் மட்டும் ஏற்கனவே தொட்டால் தொடரும் என ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். நான் பல படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்தாலும், மற்ற நால்வரைப் போலவே எனக்கும் இயக்கம் என்பது இந்தப் படத்தின் மூலமாகத்தான் பிள்ளையார் சுழி…
திரும்பி பார்க்கிறபோது இயக்குனராகும் கனவோடு சென்னைக்கு நான் இறங்கிய முதல்நாள் ஞாபகம் வருகிறது, இன்று ஒரு எழுத்தாளனாக, திரைப்பட வசனகர்த்தாவாக, நடிகராக பல்வேறு அடையாளங்களோடு நான் மக்களுக்கு அறிமுகமானவன். ஆனால் இருபது வருடங்களுக்கு முன்போ இந்த அடையாளங்களை நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அப்போது என் மனதில் இருந்த ஒரே லட்சியம் இயக்குனர் இயக்குனர் இயக்குனர்தான்.
நமக்கிருக்கும் கற்பனைத்திறனுக்கு அடுத்த நாலே வருடங்களில் படம் இயக்கி பெரிய பெயர்பெற்று உலக நாடுகள் சுற்றுப்பயணம் என அந்த நாட்களில் பல கனவுகளும் அசைக்க முடியாத திமிரும் எனக்குள் ஒட்டிக்கிடந்தது. அந்த அசட்டுத்தனமான நம்பிக்கையை இன்று நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் சிரிப்பாகக்கூட இருக்கிறது. தலையை தடவிப்பார்க்கிறேன் காலம் என் தலையில் கொட்டிய வலிகளை முழுமையாக உணர்ந்து சிரிக்கிறேன்.
கடந்த காலங்களில் நான் கடந்து வந்த குண்டும் குழியுமான பாதை கண்ணில் படுகிறது. எத்தனை வலிகள்,எத்தனை சவால்கள்,எத்தனை திருப்பங்கள் என யோசிக்கிறபோது ஆச்சர்யமாகவும் இருக்கிறது.
இருபது வருடங்களுக்கு முன் அப்போது நான் தீவிரமான இலக்கிய வாசகன். சினிமா உலகம் வேறு, இலக்கிய உலகம் வேறு. சினிமாவில் ஜெயிக்க வேண்டுமானால் எழுதக்கூடாது,இலக்கியவாதிகளுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. என முரட்டு முடிவுடன் செயல்பட்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கும் வரை வேறு வழியில்லாமல் வயிற்றுபாட்டுக்காக எழுத்து வாழ்க்கைதான் கை நீட்டியது.
பத்திரிக்கைகளில் பணிபுரிந்த அந்த துவக்க காலங்களில் காலம் என் மென்னியை பிடித்து எழுத்தாளர்களின் சகவாசத்தை உண்டு பண்ணியது. இன்று பிரபலமாக இருக்கும் பலரும் அப்போது அறிமுகமானார்கள். அவர்களுள் ஒருவர் தான் வண்ணநிலவன். ஏதோ ஒரு விசயத்தில் என்மேல் அவருக்கு ஒரு பரிதாபம் வந்துவிட்டது, அப்போது கே.ராஜேஷ்வர் ஒரு படம் இயக்கப்போவதாக கேள்விப்பட்டேன். வண்ணநிலவனும் அவரும் அவள் அப்படித்தான் படத்தில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள், ஆகையால் வண்ண நிலவனைப் பிடித்தால் கே.ராஜேஷ்வரிடம் சேர்ந்து விடலாம் என குருட்டு கணக்கு போட்டேன், கணக்கு பலித்தது.
வண்ணநிலவனிடம் நான் கேட்டதுமே உதவி இயக்குனராக சேர பரிந்துரை எழுதி கொடுத்துவிட்டார். கடிதத்தோடு சென்று கே.ராஜேஸ்வரை பார்த்தவுடன் என்னை பாலோ செய்யுமாறு சொல்ல, மனதுக்குள் றெக்கை சுருள் விரித்தது. அடுத்த இரண்டு மாதத்தில் இயக்குனர் ராஜேஸ்வர் துறைமுகம் படத்தை துவக்க அதில் உதவி இயக்குனராக ஒட்டிக்கொண்டேன். துறைமுகம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். இதுகுறித்து ஒரு நாவலே எழுதலாம், அவ்வளவு சுவாரசியமான சம்பவங்கள்.
நான் அவரிடம் சேரும்போது எண்ணிக்கையின்படி பன்னிரண்டாவது உதவி இயக்குனர்.நானே கடைசி.
ஒரு வருடம் கழித்து படம் முடிவடையும்போது நான் மட்டுமே எஞ்சியிருந்தேன். இடைப்பட்ட காலத்தில் படப்பிடிப்பு பாதியில் தடைபட்டு படம் முடியுமா முடியாதா என்ற குழப்பத்தில் பலரும் பல திசைகளில் சிதறியிருந்தனர். நான் மட்டும் வைராக்கியமாக அவரிடமே பணி புரிந்தேன். காரணம் முதல் படம், அதுவே பாதி என்றால் கடைசிவரை கெட்ட பேராக இருக்கும் என்ற முடிவுடன் பல்லை கடித்துக்கொண்டு பொறுமையுடன் இருந்தேன்.
அந்த பொறுமைக்கு பரிசு உதவி இயக்குனராக பல பணிகளை கற்று தொழிலில் தேர்ந்திருந்தேன். அதில் கற்ற வித்தைகள் காரணமாக அடுத்த படமான இயக்குனர் பாலசேகரனின் லவ்டுடே வில் சுறுசுறுப்பாக வேலை செய்து முதன்மை உதவி இயக்குனராக இரண்டாவது படத்திலேயே பதவி உயர்வு பெற்றேன். லவ் டுடே படத்தை தயாரித்த சூப்பர்குட் பிலிம்ஸ் படங்களுக்கு அப்போது மிகப்பெரிய முக்கியத்துவம் இருந்தது, இண்டஸ்ட்ரீயில் பலராலும் கவனிக்கப்படும் உதவி இயக்குனராக மாறினேன். மனதில் ஒரு தெம்பு, புத்தெழுச்சி நாங்கள் எதிர்பார்த்தது போல படமும் மிகப்பெரிய வெற்றி. இனி இயக்குனராகிவிடலாம் என்ற முடிவோடு எனது தேடல் வாழ்க்கையில் இறங்கினேன். சரியாக ஆறுமாசம் நல்ல கம்பெனியில் கதை சொல்லி இயக்குனராவதுதான் லட்சியம்.
நாம் போடும் திட்டங்களுக்கு ஏற்ப எல்லாமே நடந்துவிட்டால் அந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. சினிமாவில்தான் வில்லன் மனித உருவில் வருவான். ஆனால் நிஜ வாழ்க்கையிலோ சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் தான் வில்லன்.
சென்னைக்கு வந்து திட்டமிட்டபடி ஆறே வருடங்களில் இயக்குனராகப்போகும் கனவோடு தனித்த பயணத்தை துவக்கிய எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. கதை ஓகே ஆகும் ஆனால் என்ன காரணத்தாலோ தள்ளிபோகும்.
நேருக்கு நேர் படம் வெளியான சமயம் ஒரு தயாரிப்பாளர் கிடைக்க, நடிகர் சிவக்குமாரை சந்தித்து சூர்யாவுக்கு கதை சொன்னேன். சிவக்குமார் சாருக்கும் சூர்யா அவர்களுக்கும் என்னையும் கதையும் பிடித்த அளவுக்கு அந்த தயாரிப்பாளரின் அணுகுமுறை பிடிக்கவில்லை. அந்த நபர் ஒரு ஆர்வக்கோளாறு. அதன்பிறகு சிவக்குமார் சாரே எனக்காக சில முயற்சிகள் எடுக்கும்போது பாலாவின் நந்தா படத்தில் சூர்யா ஒப்பந்தமானார். சரி இனிமேல் அவரை பாலோ பண்ணி பலனில்லை என்பதால் அப்போது கதை மும்முரமாக கேட்டுக்கொண்டிருந்த சேது மூலமாக கலக்கிய விக்ரமை சந்திக்க முயற்சி செய்தேன்.
அண்மையில் மறைந்த விக்ரமின் அப்பாதான் கதை கேட்டார். அவர் கேட்ட முந்நூறு கதையில் என் கதை பிடித்திருப்பதாக கூறினார். அடுத்த வாரம் விக்ரமிடம் அவரது பெசண்ட் நகர் வீட்டில் கதை சொன்னேன். விக்ரம், அவர் மனைவி ஷைலஜா இருவருக்குமே கதை மிகவும் பிடித்துப்போனது. உடனே விக்ரம் பேஜர் கருவி மூலம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிர்வாகியை தொடர்பு கொண்டார். அந்த ஒரு சில நிமிடங்களில் பலநூறு ஷாட்களில் நான் பூஜை துவங்கி விருது வாங்குவது வரை கற்பனை சிறகடித்து ரவுண்ட் கட்டியது.
அடுத்த சில நிமிடங்களில் விக்ரம் மொபைலுக்கு எதிர்பார்த்தபடி அழைப்பு. மறுமுனையில் அழைத்தவரிடம் என்னைப் பற்றி பேசினார். பேசிக்கொண்டிருக்கும் போதே விக்ரம் முகம் மாறியது…
பின் என்னிடம் திரும்பியவர், ”என்கிட்ட இப்ப பேசினவர் டைரக்டர் ராஜகுமாரன். டைரக்டர் விக்ரமன் சாரோட உதவி இயக்குனர். புதிய மன்னர்கள் படத்துல நான் நடிக்கும் போது எனக்கு பெஸ்ட் பிரண்ட், சூப்பர்குட் கம்பெனியில என் கால்ஷீட் கிடைச்சா அவருக்கு படம் கிடைக்கும்னு சொல்றார். கூட சரத்குமாரும் நடிக்கிறார் அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணு அஜய், நான் வேற ப்ரொட்யூசர் வரும்போது சொல்றேன்” என்றார். அந்த படம்தான் விண்ணுக்கும் மண்ணுக்கும். விண்ணிலிருந்து நான் மண்ணுக்கு இறங்கி பாதளத்தில் வீழ்ந்தேன், சரி என்ன செய்ய விக்ரமின் நட்பு ஒரு நாள் கைகொடுக்கும் என நம்பினேன். அதன்பிறகு அடுத்து இரண்டு வருடங்கள் அவரை படப்பிடிப்புகளில் பார்ப்பதும் காத்திருப்பதும் தொடர்கதையானது. என் அம்மா வேறு தினசரி விக்ரம் என்னப்பா சொன்னாரு எனக்கேட்க, ஒருநாள் அவரிடமே இதை உளறிவிட்டேன். உடனே விக்ரம் ”அப்படியா வாங்க உங்க வீட்டுக்கு போகலாம்” என மாலை படப்பிடிப்பு முடிந்ததும் காரில் என்னை ஏற்றிக்கொண்டு கோட்டூர் புரத்திலிருந்த என் தங்கை வீட்டுக்கு வந்து விட்டார். என் தங்கை, அம்மாவுக்கோ விக்ரமை பார்த்ததும் கை கால் ஓடவில்லை. ”கவலையே படாதீங்க, நானும் அஜய்யும் சீக்கிரம் படம் பண்ணப்போறோம்” என அம்மாவிடம் காபி குடித்துக்கொண்டே சொன்னார்.
அதன்படியே அடுத்த சில நாட்களில் ஒரு தயாரிப்பாளர் எண்ணைக் கொடுத்து கதை சொல்லச் சொன்னார். அந்த தயாரிப்பாளரிடம் நானும் சந்தித்து கதை சொன்னேன். ஆனால் அவரோ, தெலுங்கு பாணி மசாலா படம்போல ஆக்‌ஷன் கதையாக இருந்தால் படம் பண்ணலாம் என சொன்னார், என் உலகசினிமா அறிவு என் மண்டையில் சூட்டை கிளப்ப ஆக்‌ஷன் படமா நானா என புறப்பட்டேன். அதன்பிறகு அந்த கம்பெனி தில் எனும் திரைப்படத்தை தரணி மூலமாக வெளியிட்டு ஆக்‌ஷன் டிரெண்டை உண்டாக்கியது. தொடர்ந்து ஜெமினி படமும் விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றி. அதன் பிறகு அவரே ” சாரி அஜய்… இனி புது இயக்குனர் படங்கள்ள நடிக்க முடியாது, ஒரு படம் பன்ணிட்டு வாங்க பண்ணலாம்” என ஜெமினி 50வது நாள் விழாவில் சொல்லி இரண்டு வருட அலைச்சலுக்கு முடிவுரை எழுதினார்.
இடைப்பட்ட காலத்தில் படவாய்ப்பு கிட்டாத சோகம் கடுப்பேற்ற விரக்தியை போக்க விரதத்தை முறித்துக்கொண்டு பேனாவை எடுத்து எழுதத்துவங்கினேன். எழுத்து வேதாளம் போல என் முதுகில் உற்சாகமாக தொற்றிக்கொண்டது. முதல் கதை கூட்ஸ் வண்டியின் கடைசிப்பெட்டி.
இந்தியா டுடேவில் வெளியாகி அந்த மாத சிறந்த சிறுகதையாக இலக்கியச் சிந்தனை பரிசு பெற்று மிகுந்த வரவேற்பைப் பெற்றது, அது தந்த உற்சாகத்தில் அடுத்து பைசைக்கிள் தீவ்ஸ் திரைக்கதையை துரிதமாக மொழிபெயர்த்தேன். ப.நிழல் திருநாவுக்கரசு அவரது பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளிக்கொண்டுவர, அது பாலுமகேந்திரா, தங்கர்பச்சான் போன்ற இயக்குனர்களின் பாரட்டைப்பெற்று மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இண்டஸ்ட்ரியில் அதுவரை என்னைத் தெரியாத அனைவருக்கும் என்னை அடையாளப்படுத்தியது. அந்த புத்தகம் பல கூட்டங்களுக்கு வெளியூரில் அழைத்துச்செல்ல ஒரு எழுத்தாளனாக உருமாற்றம் ஆகினேன். யாராவது ” எப்ப பாலா படம் ஆரம்பிக்கறீங்க…” எனக்கேட்டால் கடுப்புடன் பை சைக்கிள் தீவ்ஸ் படிச்சீங்களா .. முதல்ல அத படிங்க என பதிலுறுத்தேன். ஒரு பக்கம் இயக்குனர் வாய்ப்பு இழுத்துக்கொண்டேயிருக்க இன்னொருபுறம் எழுத்தில் மிகப்பெரிய வரவேற்பு. அதே உற்சாகத்தோடு கொஞ்ச நாள் வாய்ப்புதேடும் வேட்டைக்கு ஓய்வுகொடுத்து, எழுத்து இலக்கிய கூட்டம் என தீவிரமாக அலையத்துவங்கினேன். 2002ஆம் ஆண்டு சிலம்பு என்ற பெயரில் முதல் குறும்பட விழா நடத்தினேன். எனது மூன்று கதைகள் கொண்ட சிறு நூலை பறக்கும் ரயிலில் வெளியிட அது தவறிப்போய் கூவத்தில் விழுந்தது. அஜயன் பாலா கூவத்தில் தன் புத்தகத்தை வீசி வெளியிட்டு விழா நடத்தினார் எனும் செய்தி குமுதம் இதழில் வெளிவர அது தமிழ்நாடு முழுக்க என்னை திட்ட சொல்லி வாய்ப்பு வாங்கி கொடுத்தது.
இப்படி இயக்குனர் வாய்ப்புகிட்டாத கோபத்தில் எழுத்து,இலக்கியம் என களமிறங்கி பல அதிரடியான களப்பணிகள் செய்து என் விரக்தியை போக்கிக்கொண்டாலும் உள்ளுக்குள் படம் இயக்க முடியாத வேதனை நெருஞ்சியாக அரித்துக்கொண்டுதான் இருந்தது.
அக்காலத்தில் நண்பர் அய்யப்பமாதவன் ஒரு போட்டோ ஸ்டூடியோ கோடம்பாக்கத்தில் நடத்தி வந்தார். ஒருமுறை நண்பர் ஒருவருக்காக அங்கு புகைப்படம் எடுக்கப்போக, அந்த பிலிம் ரோலில் கடைசியாக இருந்த ஒரு பிலிமில் என்னை கேமாரா முன் நிற்க வைத்து போட்டோ எடுத்தார். நண்பரின் 34 படங்கள் சரியாக வரவில்லை, என் ஒரு புகைப்படம் அட்டகாசமாக வந்தது. அப்போது ”நண்பா நீ நடிக்க ட்ரைபண்ணு” என்றார். அடுத்த சில நாட்களில் இயக்குனர் தங்கர்பச்சானை பார்க்க போனபோது அவரிடம் அந்த புகைப்படத்தை காண்பிக்க, அதுவரை ”உனக்கு எதுக்கு நடிப்பெல்லாம்“ என மறுத்தவர் புகைப்படத்தை பார்த்துவிட்டு ” நீ கண்டிப்பா நடிக்கிற” என வாக்குறுதி தந்தார்.

சொல்ல மறந்த கதையில் சின்ன வேடம் என்றாலும் பலரும் யார் இந்த ஆள் என கேட்கும் படியாக தெரிந்தேன். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்க வேண்டுமென்றால் நாயாய் பேயாய் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்க வேண்டும். ஆனால் எனக்கோ அது ஒத்துவராது. நான் ஒரு படைப்பு கலைஞன், அதனால் நடிக்க வாய்ப்பு கேட்டு போகாமல் தங்கர்பச்சானின் அழைப்பை ஏற்று அவரிடம் திரைக்கதை விவாதத்தில் பணிபுரிந்தேன். ஒன்றரை வருடம் அப்படி இப்படி பேசி ஒரு மலையாள படம் ரீமேக் ரைட்ஸ் வாங்கிமுடித்து, அதற்கு சிதம்பரத்தில் அப்பாசாமி என பெயரும் வைத்தாகிவிட்டது. லொக்கேஷன் பார்த்து நடிகர் தேர்வாகி ஷூட்டிங் கிளம்பபோகும் நேரம்.
இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு துவங்கப்போகிறது. அன்று வேலை மிகுதி காரணமாக இரவு அயர்ச்சியுடன் தாடியும் அழுக்கு ஜீன்ஸுமாக மேற்கு மாம்பலத்தில் என் அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, பல வருடங்கள் கழித்து இரண்டு நண்பர்கள். இருவருமே துறைமுகம் படத்தில் என்னோடு பணி புரிந்தவர்கள் சதீஷ், ஹரி. மகிழ்ச்சியுடன் என்னோடு அளவளாவியவர்கள் சட்டென என்னை உற்று நோக்கி இவன் அந்த வேடத்துக்கு சரியாவான் என அவர்களுக்குள்ளாக பேசிக்கொண்டனர்.
”என்னப்பா என்ன விடயம்” என கேட்க,
ஒரு புதுகம்பனி புது இயக்குனர் படத்தில் அவர்கள் வேலை செய்வதகாவும் அதில் வரும் ஒரு பாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்றும் கூறி ”ஆடிஷன் வரியா” எனக் கேட்டனர்.
இன்னும் இரண்டு நாளில் ஷூட்டிங் என்னால் வரமுடியாது என சொல்ல அவர்களோ அந்த இயக்குனரைப் பற்றி பக்கம் பக்கமாக பேச ஆரம்பித்தனர்.
சரி இவ்ளோ சொல்றீங்களேன்னு வந்து பாக்கறேன் எனக்கூறி, மறுநாள் நான் பணிபுரிந்து வரும் படத்துக்கு லொகேஷன் பர்மிஷன் வாங்கபோன கேப்பில் நம்பிக்கையில்லாமல் நண்பர்களின் அலுவலகத்துக்கு போனேன். உள்ளே போனதுமே என்னை வரவேற்றது சுவற்றில் மாட்டியிருந்த அகிராகுரசேவா. நான் பார்த்த இயக்குனர் மிஷ்கின். முன்பே கபிலன் பாடலாசிரியர் மூலமாக அறிமுகம் இருந்த காரணத்தால் முதல் சந்திப்பே முத்தாய்ப்பாக மாறியது, அந்த படம் சித்திரம் பேசுதடி, நான் நடித்தது தாமஸ் அண்ணா பாத்திரம்.
மறுநாள் குழப்பம் நடிப்பா, இயக்கமா ?
சிதம்பரத்தில் அப்பா சாமியா சித்திரம் பேசுதடியா ?
தங்கர்பச்சான், ”நீங்க சொல்றதைப் பார்த்தா நல்ல வாய்ப்பு மாதிரி தெரியுது, பேசாம நடிக்க ஒத்துக்குங்க” என சொல்லி மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.
இப்படியாக இரண்டாவது முறையும் டைரக்ஷனிலிருந்து விலகி நடிக்க போனேன். பெரிய பாத்திரம் ஆனதால் நடிப்பை கற்க மார்லன் பிராண்டோவின் புத்தகங்களை படித்தால் நன்றாக இருக்கும் என திட்டமிட்டேன். ஆனால் புத்தகம் வாங்கவோ அப்போது பணமில்லை. நண்பர் ஜெரால்டும் லீனா மணிமேகலையும் அப்போது கனவுப்பட்டறை என்ற பதிப்பகம் துவக்கியிருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஒருபுத்தகம் எழுதி தருமாறு கேட்க, நான் அவர்களிடம் ”மார்லன் பிராண்டோ புத்தகம் வாங்கித்தந்தால் உங்களுக்கு அவர் வரலாற்றை மொழிபெயர்த்து தருகிறேன்”,எனக்கூற அவர்களும் எனக்கு வாங்கிதந்தார்கள். படம் வெளியானபோது புத்தகமும் வெளியாக நடிப்பு, எழுத்து இரண்டிலும் நல்ல பேர்.
மறுபடியும் தங்கர்பச்சான் பள்ளிக்கூடம் படத்தில் பணிபுரியும்படி ஆளனுப்பினார். அதுவரை பேச்சிலராக இருந்த நான் அம்மாவோடு தனியாக வீடெடுத்து தங்க துவங்கினேன். இனிமாச வாடகை, அது இது என செலவு அதிகம். எனவே இந்த ஒருபடத்தோடு முடித்துக்கொள்வது என இணை இயக்குனராக பணிபுரிந்தேன்.
அதுபோல படம் முடிந்த கையோடு நண்பர்களுடன் கொடைக்கானல் சென்று புதிய திரைக்கதை எழுதிக்கொண்டிருந்த நேரம். எடுத்து போன பணம் எல்லாம் தீர்ந்து போக உதவி இயக்குனர் குழுவுடன் நண்பரை பார்க்க உடுமலைப்பேட்டை சென்றிருந்தோம். அன்றுபார்த்து அவரிடமும் பணமில்லை, என்னடா பண்ணுவது ஊருக்கு திரும்பலாமா என நினைத்த போது ஒரு அழைப்பு, ஆசிரியர் கண்ணன். ”உங்க பிராண்டோ புக் படிச்சேன் பாஸ், ரொம்ப நல்ல நடை. அதே பாணியில விகடன்ல புதுசா தலைவர்கள் பத்தி ஒரு தொடர் துவங்கலாம்னு இருக்கோம்” எனக்கூற,
என்னது விகடனில் தொடர் எழுதும் வாய்ப்பா, உடன் வந்த உதவி இயக்குனர்கள் ”சார் அதைவிட பெரிய விடயம் எதுவுமில்ல, இது யாருக்கும் கிடைக்காது பேசாம எழுதபோங்க” எனக்கூற எனக்குள் ஊசலாட்டம். மொத்தம் பதிமூன்று வாரம் பதிமுன்று தலைவர்கள் அவ்வளவுதான் பாஸ் கண்ணன் குரல் கேட்டது.
மனதுக்குள் குழப்பம் எழுதப்போனா இயக்குனர் கனவு தள்ளிப்போகுமே?
சார் இப்ப என்ன தயாரிப்பாளர் கிடைச்சு படமா ஆரம்பிக்க போறீங்க, என்ன மூணு மாசம் இல்லை ஆறு மாசம்…
என நான் மதிக்கும் உதவி இயக்குனர் ஒருவர் தூபம் போட்டார்,
வேறுவழியே இல்லாமல் ஸ்டியரிங் 180 டிகிரி திரும்பி சென்னை பயணித்தது. வாழ்க்கை பாதையும் எழுத்தாளன் என்ற அடையாளத்தை நோக்கி உயர்ந்தது. அன்று குனிந்த தலை இரண்டு வருடங்களுக்கு பின்பே நிமிர முடிந்தது. பத்து தலைவர்கள், தொடர்ந்து எழுதி எழுத்தாளன் எனும் மிகப்பெரிய அடையாளத்தை எனக்கு வாங்கி தந்தது. அந்த தொடருக்குப். பிறகு நண்பர் நா.முத்துக்குமார் மூலம் இயக்குனர் விஜய் அறிமுகமாகி மதராசபட்டினம், தெய்வ திருமகள் என அவர் படங்களின் திரைக்கதைகளிலும் இடையிடையே நடிகனாக வால்மீகீ, தென்மேற்கு பருவக்காற்று, மதராசபட்டினம், கிருஷ்ணவேணி பஞ்சாலை, வனமகன் என பல படங்களிலும்.
சென்னையில் ஒருநாள், வனயுத்தம், மனிதன், கரு வெளிவரப்போகும் நேத்ரா போன்ற படங்களில் வசன எழுத்தாளனாகவும் இவையல்லாமல் உலகசினிமா, இலக்கியம் என 31 புத்தகங்களையும் எழுதி, நாதன் எனும் பதிப்பாளனாகாவும் மாறி ஒரு உயரத்தை அடைந்தபின், ஆறுபேரில் ஒருவர் என்றாலும் அறுபது பேரில் ஒருவராக இயக்குனராக ஆனாலும் அது வாழ்க்கையின் முழுமையான வெற்றியைத் தவிர வேறென்ன!

1 Comment

  1. innosilicon d9 firmware update

    good article very hopeful

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *