ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்க்கி உப்பும் , உருவும்

Andrei Tarkovsky ( 4th April 1932 – 1986 டிசம்பர் 29 )

Tarkovsky for me is the greatest [director], the one who invented a new language, true to the nature of film, as it captures life as a reflection, life as a dream. – Ingmar Bergman

ரஷ்யா வின் யுர்ப்யேட்ஸ்கி மாவட்டம் சவ்ரஷ்யெ கிராமத்தில் 1932 ம் ஆண்டு பிறந்தவர் தார்க்கோவ்ஸ்கி .அப்பா ஆர்ஸ்னெய் அலெக்ஸாண்ட்ரோவிச் தார்க்கோவ்ஸ்கி அவர் ஒரு கவிஞர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் . அம்மா போலந்து வம்சாவளியைச்சேர்ந்தவர் மரியா இவானோவா விஷ்ன்யாகோவா.

தார்க்கோவ்ஸ்கி பிறந்த ஒரு சில வருடங்களிலேயே அவர் தந்தை அவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட தங்கை மரினா மற்றும் தாயுடன் அவர் குடும்பம் மாஸ்கோவுக்கு குடிபெயர்ந்தது.
அங்கு அவனது தாயார் ஒரு அச்சுக்கூடத்தில் பிழை திருத்துபவராக பணி செய்து குடும்பத்தை நிர்வகித்தார். தந்தை பிரிந்து போனாலும் தந்தை மீது அவருக்கு பிற்காலத்தில் மரியாதையும் அன்பும் மிகுந்திருந்தது. தந்தை பிரிவதற்கு அம்மாவின் சுபாவமே காரணமாக இருக்கும் என்பது அவருடைய நிலைப்பாடு .

1941ல் போர் வந்தவுடன் அவர்கள் மூவரும் மீண்டும் சொந்த கிராமத்துக்கு சென்று பாட்டி வீட்டில் வசித்தனர் . போர் முடிந்த பின் மீண்டும் மாஸ்கோவுக்கு வந்து பழைய பள்ளியில் படிப்பை தொடர்ந்தார் . மாணவப் பருவத்திலேயே அவரை டிபி எனும் காச நோய் கடுமையாக தாக்க சில காலம் மருத்துவ மனையில் தங்கியிருந்தார்.
தொடர்ந்து சிறுவயதிலேயே அவருக்கு ஏற்பட்ட இடமாற்றம் ,நோய், மருத்துவமனை வாசம் ஆகியவை அவரை உளவியல் ரீதியாக கடுமையாக பாதித்ததை அவரது ஆட்டோ பயோகிராபியாக எடுக்கப்பட்ட மிரர் படத்தில் காணமுடியும்

அம்மா அவருக்கு சிறுவயதிலேயே கவிதை வாசித்து காண்பித்து இலக்கியத்தின் மீதான ஈர்ப்பை உண்டாக்க அவரது விருப்பப்படியே பள்ளிக்கல்வியுடன் இசையும் ஓவியமும் கற்றுத்தேறினார் .
இந்த இரண்டும் தான் பிற்பாடு அவர் படங்களை இயக்கும்போது பின்புலனாக இருந்து அவரது படைப்புகளுக்கான பரிமாணத்துக்கு உதவி செய்தது

இத்தோடு நில்லாமல் உடன் 1951-1952இல் அரபு மொழியும் கற்றார். கல்விக்காலம் முடியும் முன்பே படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டு வெளியேறினார் திரைப்படக்கல்வி படிக்கும் ஆர்வம் அவரை இம்சித்து வந்ததுதான் அதன் காரணம்
1954 இல் State Institute of Cinematography (VGIK) அரசு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அதுவரை நிலவிவந்த ஸ்டாலின் அரசின் அதீத கட்டுப்பாடுகள், தடைகள் அடுத்து வந்த குருசேவ் காலத்தில் சற்று தளர்த்தப்பட்டிருந்த நேரம். இக்காலத்தில் திரைப்படக் கல்லூரி முற்றிலும் சுதந்திரமான இடமாக மாறியிருந்தது.

ஆசிரியர்கள் அமெரிக்க ஐரோப்பிய படங்களை தங்கள் பாடத்தில் சேர்த்திருந்தனர் . இக்காரணங்களால் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு இத்தாலியின் நியோரியலிஸ படங்களையும் இதர ஐரோப்பிய இயக்குனர்களின் படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது . ஆனால் அந்த வாய்ப்பை வாழ்க்கையாக மாற்றிக்கொண்டவர் தார்க்கோவ்ஸ்கி.

இயக்குனர்கள் அகிரா குரசோவா(Akira Kurosawa), இங்க்மர் பெர்க்மன்(Ingmar Bergman) , ராபர்ட் ப்ரெஸ்ஸான் (Robert Bresson) ;லூயி புனுவல் ( luie bunuvel) மற்றும் ரஷ்ய இயக்குனர் டாவ்ஷென்க்கோ (Dovzhenko).
ஆகியோரை மானசீக குருக்களாக ஏற்றுக்கொண்டார் குறிப்பாக போலந்து இயக்குனர் ஆந்த்ரேய் வாஜ்டாவின் (Andrzej Wajda)ஆஷஸ் அண்ட் டைமண்ட் (Ashes and Diamonds ) படம் அவரை மிகவும் பாதித்தது.

அங்கு அவருடன் படித்த நெருங்கிய நண்பர் செர்கேய் பரஜ்னோவ் (Sergei Parajanov). பின்னாளில் Shadows of Forgotten Ancestors, Color of Pomegranates போன்ற அற்புதமன படைப்புகளை அளித்தவர்

படிக்கும் போதே 1957 இல் தன்னுடன் படித்த இர்மாவை திருமணம் செய்துகொண்டார். 1962 இல் மகன் அர்செனேய் பிறந்தான்.

திரைப்படக் கல்லூரியில் உடன் படித்த நண்பர்கள் இருவருடன் இணைந்து இவர் இயக்கிய குறும்படம் The Killers (1956), இதுவே இவருக்கு முதல் படம் . ஹெமிங்வேயின் (Ernest Hemingway) சிறுகதையை அடிப்படையாக கொண்டு அவர் இயக்கிய இப்படத்தில் . தார்க்கோவ்ஸ்கியும் சிறு வேடத்தில் தோன்றுகிறார். உடன் படித்த ரஷ்ய இயக்குனர் அலெக்சாண்டர் கோர்டா இன்னுமொரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார் . ( இதே பெயரில் ஹங்கேரி இயக்குனர் ஒருவரும் இருக்கிறார் )
இப்படம் தார்க்கோவ்ஸ்கி யார் என கல்லூரிக்கும் சகமாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தியது.

இரண்டாவது மாணவக் குறும்படம் There Will Be No Leave Today (1959) .போருக்குப் பின் ராணுவக் குழு ஒன்று வெடிக்காத குண்டுகளை அகற்றி ஒரு சிறு நகரைக் காப்பாற்றும் கதை. . மூன்றாவது குறும்படம் The Steamroller and the Violin. வயலின் கற்கும் சிறுவன் சாஷாவும், அவனை எப்போதும் துன்புறுத்திக் கொண்டிருக்கும் சிறுவர்களிடமிருந்து காக்கும் நண்பனான செர்கெய்யும் இரு முக்கிய பாத்திரங்கள். சாஷாவின் பார்வையில் சொல்லப்படும் இக் கதையில், தார்க்கோவ்ஸ்கி சிறுவயதில் இசை கற்ற அனுபவம் சாஷா வயலின் கற்கும் கிளைக்கதையாக இணைகிறது. கலைக்கும் தொழிலுக்கும் இடையேயான உறவு பற்றிய உரையாடலை முன்வைக்கும் இப் படைப்பு, சிறந்த மாணவப்படைப்புக்கான அமெரிக்க விருதைப் பெற்றது.

இவான் : சைல்ட் ஹுட் (Ivan’s Childhood) 1962

ஒவ்வொரு தேசத்துக்கும் மறக்க முடியா போரின் ரத்தக்கறைகள் ஆழமாய் நினைவில் பதிந்திருக்கும் . ரஷ்யாவுக்கு இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் ஊடுருவலால் உண்டான பேரழிவு அதன் சரித்திரத்தில் மறக்க முடியாத திகிலை உண்டாக்கியது . இதனையொட்டி எடுக்கப்பட்டதுதான் தார்க்கோவ்ஸ்கியின் முதல் முழு நீளப்படம் இவான்ஸ் சைல்ட் ஹுட் (Ivan’s Childhood) என் பெயர் இவான்(My Name Is Ivan) எனும் Vladimir Bogomolov’s என்பவரது நாவலை அடிப்படையாகக் கொண்டு தன் கல்லூரி நண்பர் Mikhail Papava வுடன் இணைந்து தார்க்கோவ்ஸ்கி திரைக்கதை எழுதி இயக்கிய படம்

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப்படை ரஷ்யாவை பிடிக்க அதிரடியாக எல்லை பகுதியில் ஊடுருவ அதன் தாக்குதலை எதிர் கொள்ளும் பொருட்டு ரஷ்யா முகாமிட்டு காத்திருக்கும் பின்னணியில் இவான் எனும் 12 வயது சிறுவனின் நீண்ட கனவிலிருந்து துவங்குகிறது கதை. கனவு முடிந்ததும் அவன் வேகமாக காடு மலை மேடு என ஓடுகிறான் . .எதிர் படும் ஆற்றை நீந்தி கடக்கும் போது ரஷ்ய வீரர்களால் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு முகாமின் இளம் லெப்டின்ண்ட் ஒருவர் முன் விசாரணைக்கு நிறுத்தப்படுகிறான் .

அவரோ அவன் சொல்ல வருவதை ஓவியமாக வரைந்து காண்பிக்கச் சொல்லி பென்சிலையும் பேப்பரையும் தருகிறார் அவன் படம் வரையத் துவங்குகிறான் கோடுகள் வழி அவன் தாய் தங்கையின் முகம் தோன்ற அங்கிருந்து இடைவெட்டான ப்ளாஷ் பேக்குகள் வழி சிறுவன் இவான் கதை காண்பிக்கப்படுகிறது.
ஜெர்மனிய வீரர்களால் அவன் கிராமம் தரைமட்டமாக்கப்பட்டு அவன் தாயும் தங்கையும், கொல்லப்படுகிறார்கள் உடன் தந்தையும் அதில் தப்பிக்கும் அவன் ஜெர்மனி வீரர்களை பழிவாங்க ரஷ்ய படைகளுக்கு உதவ அவர்களுடன் சேருகிறான் சிறுவனை அவர்கள் பெரிதாக பொருட்படுத்தாவிட்டாலும் அவனிடம் அதிகாரிகள் பலரும் அன்பாகபழகுகிறார்கள் .
அவனது ஆர்வத்தை கண்டு ராணுவ பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட விரும்புகின்றனர் . ஆனாலும் அவனுக்கோ ஜெர்மனியரை பழி வாங்கும் உணர்வே பிரதானமாக இருக்கிறது . அதன் பொருட்டு உளவாளியாக ஜெர்மன் படைக்குள் ஊடுருவுகிறான் . அவன் சிறுவன் என்பதால் அது அவனுக்கு பெரிய தடையாக இல்லை

போரின் ஒரு கட்டத்தில் ஹிட்லர் வீழ்ந்து ஜெர்மனி ரஷ்யாவின் கைக்கு வருகிறது தூக்கிலிடப்பட்ட ரஷ்ய கைதிகளைப்பற்றிய கோப்புகளை .பெர்லினில் அந்த ரஷ்ய லெப்டினண்ட் புரட்டுகிறார் அதில் ஒரு படம் சிறுவன் இவானுடையது .
அவன் ஜெர்மனி வீரர்களால் தூக்கிலிடப்பட்டது தெரிய வந்து லெப்டினண்ட் மிகவும் வருந்துகிறார். இறுதியாக வரும் கனவுகாட்சியில் அவன் ஓடிக்கொண்டிருப்பதோடு படம் முடிகிறது.
கிட்டதட்ட பல கனவுகளின் தொகுப்பாகவே வரும் இப்படம் இவான் எனும் சிறுவனை பற்றிய கதையாக இருப்பினும் இடையே ஒரு ரஷ்ய ராணுவ வீரனுக்கும் அகதிப்பெண்னுக்குமான ஒரு காதல் காட்சியும் வருகிறது இருவருக்குமான ஒரு முத்தக்காட்சியும் வருகிறது

கதைக்கு பொருத்தமில்லாத இந்த காதல் மற்றும் முத்தக்காட்சிக்காக அவர் ஏறக்குறைய இரண்டு வருடங்கள் அரசின் திரைக்கதைக் கமிட்டியோடு போராட வேண்டியதாக இருந்தது. முகாமிலிருந்து காதலர் இருவரும் தனியே நடந்து செல்கின்றனர் விழுந்து கிடக்கும் ஒரு மரத்தின் ,மீது ஏறி காதலி நடந்து செல்ல அவனும் பின் தொடர்கிறான் . ஒரு பள்ளத்தை தாண்டவேண்டிய ஒரு முக்கிய நொடியில் அவன் அவளுக்கு உதவ கை நீட்ட எதிர்பாரா தருணத்தில் இருவரும் வசமிழுந்து இறுக்கி அணைத்து முத்தமிட்டுக்கொள்கின்றனர்

அதே நேரம் பின்னால் பயங்கரமான சத்தத்துடன் குண்டு வெடிக்கிறது பெரும் புகை மண்டலம் வியபிக்க அதன் பின்னணியில் முத்தமிடும் அந்த காதலர்களது உடல்கள் மனித வாழ்வில் போரின் அவலத்தை நமக்கு துல்லியமாக கடத்திவிடுகிறது.
வெறும் அது முத்தமில்லாமல் அழிவின் பின்னணியில் உயிரின் துவக்கமாகவும் அதை பார்க்க முடியும் . தார்க்கோவ்ஸ்கியின் பலமே இதுதான் அவரது படங்கள் கதைகளை தாண்டி மனிதகுலத்தின் நித்தியமான பிரச்சனைகளை ஆழ்ந்த தொனியில் சுய விசாரம் செய்து கொண்டிருக்கின்றன.

அவரது இந்த முதல் படமே ரஷ்யாவிலும் வெளிநாட்டிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது இத்தாலியின் Venice Film Festival in 1962 ஆம் ஆண்டுக்கான தங்கச்சிங்கம் விருதை வென்று ரஷ்யாவுக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் உலகசினிமாவில் முகவரி தேடிக்கொடுத்தது. ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் முடங்கிகிடந்த ரஷ்யாவின் கலைப் பெருமையை தார்க்கோவ்ஸ்கி மீண்டும் உயிர்பித்துவிட்டதாக உலகமெங்கும் சினிமா விமர்சகர்கள் கொண்டாடினர் .

இப்படத்தின் பிரதான அம்சம் அவர் காட்சிபடுத்திய விதம் . குறிப்பாக காமிராவை கையாண்ட விதம் . கதையை அவர் எங்கேயும் வாய் வழியாக சொல்லவில்லை அவரது காட்சிக்கோணங்கள் மற்றும் கட்டமைப்புகள் இதுவரை யாரும் பார்க்காத ஒரு புதிய அனுபவத்தை பார்வையாளனுக்குள் உண்டாக்கி தந்துவிடுகின்றன. குறிப்பாக இவான் மலைவழியாக ஓடிவரும் முதல் காட்சியில் அவன் அசுர ஓட்டத்துக்கு இணையாக மலைச்சரிவில் பயணிக்கும் காமிராவின் நகர்வு பிரமிப்பை உண்டாக்கிவிடுகிறது. ரோஷமான் படத்தில் காட்டினூடே பயணிக்கும் மரவெட்டியை பின் தொடரும் மிக நீண்ட காட்சிக்கு இணையான காட்சி என குறிப்பிடக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் நிறைந்த காட்சியாக உருவாக்கம் கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும் இன்று ஸ்டடிகேம் எனும் பிம்பம் அசையாமல் காமிரா நகர்த்துதலுக்கான நவீன கருவிகள் வந்து விட்டன ஆனால் அன்று இவை எதுவும் கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்திலேயே அவர் அப்படிபட்ட காட்சியை படம்பிடித்தது ஆச்சர்யப்பட வைக்கிறது.

படத்தின் ஒவ்வொரு சட்டகமும் மிகப்பெரிய ஆய்வுக்கு பின் உருவாக்கியது போல மைய உணர்வை மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் பார்வையாலனுக்குள் கடத்திவிடுவதுதான் தார்க்கோவ்ஸ்கியின் பலம் . இந்த முதல் படத்துக்கு மட்டுமே அவர் தேசம் போர் போன்ற புற விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருந்தார்.

தொடர்ந்த அவரது படங்கள் இந்த விளிம்புகளை இயல்பாக தகர்த்துக்கொண்டு தேசம் மொழி என மனிதன் உருவாக்கிய அனைத்து தடைகளையும் கடந்து பிரபஞ்சத்தின் உச்சமான பிரச்சனைகளை நோக்கி தேடத்துவங்கியது
இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவைப்பற்றியும் சமூகத்துக்கும் பிரபஞ்ச இயக்கத்துக்குமான உறவுகளைபற்றியுமான மிகப்பெரிய தேடலாக இருந்தது.
அது போல துவக்கத்திலிருந்தே ரஷ்ய அரசுக்கும் அவரது படைப்பு சுதந்திரத்துக்கும் முட்டல் மோதல்கள் நடந்து கொண்டேயிருந்தன

இரண்டாவது படமான ஆந்த்ரே ரூபலாவ்(Andrei Rublev) ரஷ்யா வில் 15ம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய ஆந்த்ரே ரூபலாவ் எனும் ஓவியனைப்பற்றியது. 1965 ல் இப்படம் வெளியாகி ஒரே ஒரு முறை மட்டுமே திரையிடப்பட்டு பின் அரசுக்கு ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக கூறி அவற்றை நீக்கச்சொல்லி தார்க்கோவ்ஸ்கியிடம் வற்புறுத்தியது .

ஆந்த்ரே ரூபலாவ் படம் தீவிரமாக ஆன்மீகத்தை பேசுவதுதான் அரசாங்கத்துக்கு பிரச்சனை ,சோசியலிச நாட்டில் ஆன்மிகம் ஒரு இருண்மையான சொல். அது மக்களிடம் தேவையற்ற குழப்பத்தை உருவாக்ககூடியது எனவே தார்க்கோவ்ஸ்கி சில காட்சிகளை நீக்கியே தீரவேண்டும் என அரசு வற்புறுத்தியது . இதை எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த தார்க்கோவ்ஸ்கி பின் இறுதியாக 1969ம் ஆண்டுதான் கான் விருதுக்கு வேறு ஒரு புதிய வடிவத்தில் அரசு அனுமதி அளித்தது.
அந்த வருட கான் விழாவில் சிறப்பு பரிசை பெற்றபின் அதற்கு பிறகுதான் 1971ல் ரஷ்யாவில் இப்படம் பல காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டது .
இதே ரஷ்ய அரசு தார்க்கோவ்ஸ்கி இறந்த பின்பு இதன் 205 நிமிடங்கள் ஓடக்கூடிய தணிக்கையற்ற முழுமையான படத்தை வெளியிட்டு தவறுக்கு பிராயச்சித்தம் தேடியது வேறு விடயம்

ஆந்த்ரே ரூபலாவ் வெளியான கையோடு முதல் மனைவி இர்மலாவ் விவகாரத்து செய்துகொண்டு அதே படத்தில் தயாரிப்பு உதவியாளராக பணி புரிந்து வந்த Larissa Kizilova என்ற பெண்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
முதல் மனைவிக்கு ஒருமகன் இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் என தார்க்கோவ்ஸ்கிக்கு இரண்டு ஆண் குழந்தைகள்
1972ல் அவர் இயக்கிய சோலாரிஸ் (Solaris) முழுக்க அறிவியல் திரைப்படம் . சமீபத்தில் வந்த ஹாலிவுட் படமான கிறிஸ்டோபர் நோலனின்(Christopher Nolan) INTERSTELLER படத்தின் கதைக்கும் சோலாரிஸ் கதைக்கும் பெரிய வித்தியாசமில்லை இன்னும் சொல்லப்போனால் இண்டர்ஸ்டெல்லர் சோலாரிஸின் பாதிப்பில் உருவான படம் என்று கூட உறுதியாகக் கூற முடியும்

விண்வெளிக்கு அனுப்பபட்ட செயற்கைக்கோள் சோலாரிஸ் திடீரென செயலிழந்து போக இதுகுறித்து ஆய்வு செய்ய ரஷ்யாவிலிருந்து கெவின் சோலாரிசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார் , ஏற்கனவே விண்கலனில் இருக்கும் மூவரில் ஒருவர் இறந்து போக மீதமுள்ள இரண்டு விஞ்ஞானிகளும் விபரீதமான ஏதோ ஒன்றின் ஆக்கிரமிப்பில் தாங்கள் கட்டுபடுத்தப்பட்டு செயலிழந்து காணப்படுகின்றனர் தொடர்ந்து நிகழ்வில் விஞ்ஞானி கெவின் பத்துவருடங்களுக்கு முன் தன் இறந்து போன மனைவியை அங்கு எதிர்பாராமல் சந்திக்கிறார். (நோலனின் இண்டர்ஸ்டெல்லாரில் இது அப்படியே நாயகன் அபூர்வமாக பூமிக்கு திரும்ப அங்கு தன்னையே சிறுவனாக பார்ப்பதாக மாற்றப்பட்டுள்ளது .கிரிஸ்டோபர் நோலனே தன் இண்டர்ஸ்டெல்லார் உருவாக தார்க்கோவ்ஸ்கியின் சோலரிஸ் படமும் ஒரு காரணம் என பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.பின் கடைசியில் கெவினும் திரும்ப முடியாமல் சோலாரிஸ் எனும் விண்கலத்திலேயே இறப்பதாக படம் முடிகிறது.
சோலரிஸ் படத்தின் மூலம் மனித மனத்திற்கும் ஆகாயவெளிக்குமான சமிக்ஞை ரீதியான உறவுகளைப்பற்றி தார்க்கோவ்ஸ்கி பேச முற்படுகிறார். இது ஆன்மீகம் கடவுள் போன்ற குறுகிய வடிவங்களை கடந்து இயற்பியல் ரீதியான பேருண்மைகளை குறித்தது அவரது இந்த தேடல் .

கிட்டத்தட்ட 34 வெட்டுகளுக்கு பின் 1972ல் வெளியான இப்படம் அவ்வருடத்துகான கான் திரைப்பட விழாவில் Grand Prix Spécial du Jury மற்றும் FIPRESCI prize ஆகிய பரிசுகளை வென்றது.

வரலாற்றுக்கு முன்பே கலைஞன் சிந்தித்துவிடுகிறான் ஆனால் அரசு சட்டகத்துக்கு அதைப்பார்க்க போதிய கண்கள் இருப்பதில்லை என்பது தார்க்கோவ்ஸ்கியின் வாழ்க்கையில் கண்கூடு

இப்படி உள்நாட்டில் புறக்கணிக்கப்பட்டும் வெளிநாடுகளில் கொண்டாடப்படுவதுமான இரட்டை நிலைமை தார்க்கோவ்ஸ்கியின் அடுத்த படமான Mirror க்கும் நிகழ்ந்தது. 1965லிருந்தே தன் சிறுவயது அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதி வந்த இதன் திரைக்கதையின் வடிவத்தை மிகுந்த பரிசோதனை ரீதியில் அணுகியிருந்தார் . அவருக்கும் அவரது தந்தைக்குமான உறவுதான் படத்தின் கதை. சிறுவயதிலேயே தந்தையை பிரிந்து வாழ நேர்ந்த அவரது ஆழ்மன அனுபவங்களின் வெளிப்பாடாக கதை புனையப்பட்டிருந்ததால் இருவருடைய வாழ்க்கையையும் அது பேசியது .

இதனால் இரண்டு தலைமுறைகளின் ரஷ்ய ஐரோப்பிய வரலாறுகளையும் அவர் பின் புலமாக சேர்த்துக்கொண்டு நான்லீனியர் முறையில் திரைக்கதையை உருவாக்கியிருந்த விதம் இன்றைக்கும் புதியதாக இருக்கிறது . இந்த உத்திகள் 90களுக்கு பிற்பாடுதான் ஹாலிவுட்டுக்கே வந்தது .

இதனால் இப்படம் உலக சினிமா ரசிகர்களுக்கே அப்போது முழுவதும் பிடிபடாமல் இருந்திருக்கிறது. ஒரு வேளை பிரெஞ்சு புதிய அலையின் கோதார்த் பாணியால் உந்தப்பட்டு எதார்த்தமான அன்றாட வாழ்க்கையையும் அரசியலையும் பின்னி இப்படியான நான் லீனியர் பரிசோதனையை மேற்கொண்டிருக்கவேண்டும்.
காரணம் அன்று கோதார்த் சினிமா எனும் கலையை தீவிரமாக நேசிக்கும் பலரையும் பாதித்திருந்தார். இது அவருக்கு புதிய பாணி என்ற போதும் வழக்கமாக அவர் கையாளும் கனவுகாட்சிகளை இதிலும் பயன்படுத்தத் தவறவில்லை. தன் சொந்த வாழ்க்கை அனுபவமாதலால் ஆங்காங்கு அவருடைய தந்தையின் கவிதைகளையும் பயன்படுத்தியிருந்தார் .

1975ல் வெளியான மிரர்(Mirror) கடும் விமர்சனங்களை சந்தித்தது. பூர்ஷவா கலை என கம்யூனிஸ்டுகள் கொதித்தனர். சிலர் படம் புரியவில்லை என்றனர் வேறு சிலரோ இது அவர் தன்னைப்பற்றி தனக்காக எடுத்துக்கொண்ட படம் இதில் நாட்டுக்கோ கலைக்கோ எதுவுமில்லை எனக் கூறினர் சிலர் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே பாதியிலேயே வெளி நடப்பு செய்தனர் .

——-முழுமையான கட்டுரைக்கு உலக சினிமா வரலாறு . பாகம் மூன்று 2017 டிசம்பர் விலை .300 , ஆசிரியர் அஜயன் பாலா நாதன் பதிப்பகம் தொடர்புக்கு
9884060274

1 Comment

  1. Pingback: ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்க்கி உப்பும் , உருவும் – இரசவாதம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *