41 வது புத்தகக் கண்காட்சியும்- பாக்கெட்டில் மிஞ்சிய கடல்மண்ணும்

மனித முகங்களை பார்த்துக்கொண்டேயிருபபதின் தீராத காதல் கொண்டவன் நான். அதனாலாயே ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின் போதும் தவறாமல் ஆஜர் ஆவேன் . 14 வது துவங்கி ஓரிரு வருடங்கள் தவிர அனைத்து புத்தகக் கண்காட்சியிலும் ஆவி போல அங்குமிங்குமாய் திரிந்து கொண்டேயிருப்பேன். இது வரை பார்வையாLனாக இருந்த நான் சமீபமாக பதிப்பாளனாகவும் பங்கெடுத்து வருகிறேன் . நாதன் பதிப்பகம் பங்கெடுத்த மூன்றாவது புத்தகக் கண்காட்சி இது.

துவக்க நாட்களில் கூட்டம் சரிவர இல்லாத தருணங்களீல் பகல் நேரங்களீல் வரும் சிலர் சட்டென என்னை குதூகலத்துக்கு அழைத்து செல்வர்

குறிப்பாக புத்தகங்களைத்தேடி வரும் முகங்களின் வினோதமான பாவனைகள் பெரும் ரசனைக்குரியவை, அவர்கள் கேள்விகள் நாம் யோசிக்காத திசையிலிருந்து வரும்.

சார் ஆற்றலரசுவின் அறுபதெட்டுகலைகள் உங்க கிட்ட இருக்கா…

சித்த வைத்திய சிகாமனி இரண்டாம் பாகம் வந்துடுச்சா….

சார் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாருக்கு எழுதின கடிதங்கள் அப்படின்னு ஒரு புக் ….

இப்படியாக வினோதமான தேடலுடன் வந்து நம்மை ஆச்சர்யப் படுத்துவார்கள்

இதற்கு தலைகீழாக சிலர் பெரிய சூட்கேஸ் ட்ராலியோடு தள்ளிக்கொண்டு வந்து
நாம் எடுத்து கொடுக்கும் புத்தகங்கள் அனைத்தையும் ” நீங்க சொல்றீங்கன்னு வாங்கிக்கறேன் சார்…” என மறுபேச்சில்லாமல் நிரப்பிக்கொண்டு செல்பவர்களும் இருக்கிறார்கள்,

பெண்களின் கண்களுக்கு மட்டும் வாசலிலேயே இங்கு நமக்கு வேலையில்லை என தெரிந்து விடும் போல… குறிப்பாக பளிச் நிற அட்டைகள் இருந்தால் அது அவர்கள் உலகம்… கொஞ்சம் வித்தியாசமான அடர் நிறங்களில் புத்தகம் இருந்தால் உள்ளே வருகிறார் போல வந்து எஸ்கேப் ஆகிவிடுவார்கள்…

தலித் நூல்களுக்கென பரவலாக ஒரு வாசகத்தன்மை சாதிய அடையாளங்கப்பாற்பட்டு அதிகரித்திருப்பதை இம்முறை காணமுடிந்தது, ஒரு பழுத்த பிராமணர் மனைவி குடும்பம் சகிதமாக வந்தவர், அம்பேத்கர், பெரியார் நூல்களை வாங்கினார் ஒரு வேளை அவர் ஆர் எஸ் ஏஸ் ஆக இருக்கலாமோ என்று கூட சந்தேகம், அப்படியே ஆனாலும் அவர்கள் படிப்பதால் புத்தக விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்பதை எண்ணி மகிழ்ந்தேன்…

அதுபோல தமிழ்அடையாளம், உளவாளிகள் ஆகியவற்றுக்கும் வாசக பரப்பு அதிகரித்துள்ளது… ராஜ ராஜ சோழனின் மரணம் முடிக்கப்படாத மர்மங்கள் என தலைப்பிட்டு யாராவது அடுத்த புத்தகக் கண்காட்சிக்கு புத்தகம் போட்டால் உறுதியாக கல்லாகட்டலாம் .. அந்த அளவுக்கு பொன்னியின் செல்வன் மார்கண்டேயனாக இருக்கிறான்.

அது போல புத்தகக் கண்காட்சிகென்றே சில முகங்கள் பலவருட உறவு போல அவர்கள் கைகுலுக்குவதும் கட்டிபிடிப்பதும் ” எங்க சார் டிவில அடிக்கடி பாக்கமுடியலை…”

” நாயகன் மாதிரி விகடன்ல திரும்ப எழுதுங்க சார்….”

என உரிமையுடன்பேசுபவர்கள் நம்மீது காட்டும் அக்கறையும்அன்பும் நெகிழ்ச்சியூட்டும்… அப்படிப்பட்டவர்களைபகத்தில் வைத்துக் கொள்ளவே இம் முறை பலருடன் செல்ஃபி எடுத்து பதிவாக்கிக்கொண்டேன்,

இடையில் செல்போன் தொலைந்தது போல திடுக் திருப்பங்கள் இருந்தாலும் இந்த 41வது புத்தகக் கண்காட்சி நல்ல திரைக்கதை போலவே உருவாகி இறுதி காட்சியின்பிரம்மாண்டத்தோடுமுடிந்தது.

இடையில் சில மறக்க முடியா நிகழ்வுகளூம் முத்தாய்ப்பாய் சேர்ந்து கொண்டது

அப்பா அம்மாவுடன் ஒரு மாணவி வந்தார் பெயர் அமிர்த வர்ஷினி . சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆடியோகிடாபி ஸ்பீச் தெரபி படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவி . சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் டைரீஸ் புக் கிடைக்குமா எனக்கேட்டார் . என் அங்காடியில் இல்லாத புத்தகங்களை உடனடியாக உதவியாளர்கள் மூலமாக வாங்கி, வழக்கமாக செய்யும் சேவை போல அந்த பெண்ணுக்கும் செய்தேன் . உதவியாளர் புத்தகம் வாங்கி வரும் இடைபட்ட வேளையில் அந்த பெண்ணையும் பெற்றோரையும் இருக்கைகளில் அமரவைத்தேன்.

அந்த பெண் மகிழ்ச்சியுடன் சார் எங்கெல்லாமோ கேட்டு பாத்தேன் தெரியலைன்னு சொன்னாங்க எனக் கூறினார்… அதற்குள் அவர் அம்மா ”நேத்துதான் ஒரு சேகுவேரா புக் வாங்கினா ஒரே நைட்ல படிச்சிட்டு இன்னைக்கு இன்னொரு புக் வாங்கனும்னு அடம்பிடிச்சி வந்துருக்கா .. எனச்சொல்ல ” நேத்து அந்த புக் அவ்ளோ நல்லா இருந்தது… அதை படிச்சதாலதான்ம்மா இன்னைக்கு இதை வாங்குறேன்… அதுல தான் இந்த புக்கை பத்தியும் போட்டிருந்தாங்க” என்று கூறிய அப்பெண்ணின் முகத்தில் அத்தனை மலர்ச்சி

நான்அப்பெண்ணிடம்

”அப்படியா…. நேத்து படிச்ச புத்தகம் எங்க வாங்கினீங்க.. யார் எழுதினது?

”விகடன்ல வாங்கினேன் சார் .. அஜயன் பாலான்னு ஒருத்தர் எழுதியிருந்தார் அவ்ளோ நல்லாருந்தது . ஒரே நைட்ல படிச்சிமுடிச்சேன்”

அடுத்த சில நிமிடங்களில் அவர் அருகில் அதுவரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த நாந்தான் அஜயன் பாலா என தெரிந்தவுடன் அந்த முகத்தில் தெரிந்த மின்னல் மகிழ்ச்சி இருக்கிறதே அந்த ஒரு கணம்….
எழுத்தாளனாக வாழ்வதன் முழுப்பலனை அந்த மகிழ்ச்சியில் உள்வாங்கினேன்

அதை விட அவர் அம்மா அப்பாவுக்கு சந்தோஷம் ஆச்சர்யம் எப்படிசார் நேத்து உங்க புக்கை படிச்சிட்டுதான் உங்க பேரை சொன்னா இன்னைக்கு உங்களையே மீட் பண்ணிட்டோமே என அக மகிழ்ந்த்னர்

பிறகு அந்த மாணவி எழுத்தாளராக என்ன படிக்கலாம் என கேட்டுக்கொண்டதிற்கிணங்க கிளாசிக்குகளையும் வாழ்க்கை வரலாறுகளும் படிக்கச்சொல்லி ஆலோசனை சொன்னேன்
இதேபோல இன்னொரு அனுபவம், எழுத்துசார்ந்த வாழ்வில் அது புத்தகக் கண்காட்சிக்கு வெளியே நிகழ்ந்தது.

அதுவும் ஆனந்த விகடனில் நான் எழுதிய நாயகன் தொடர் சம்பந்தப்பட்டது,

அப்போது நான் எழுதிய அம்பேத்கர் புத்தகம் நூலாக வெளியான நேரம் ஆம்பூரில் யாழன் ஆதி அதற்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சிறப்பு பேச்சாளராக அ.மார்க்ஸ் அவர்களை அழைத்திருந்தேன்.

நண்பர்கள் தளவாய் சுந்தரம், ராஜ கோபால் ஆகியோர் சகிதம் அ.மார்க்ஸுடன் ஆம்பூருக்கு பகல் பதினோரு மணிக்கு ரயிலில் ஏறினோம். ரயிலில் செம கூட்டம்… நெரிசலில் அனைவரும் நிற்க இடமில்லாமல் தடுமாறியபோது கீழே அமர்ந்திருந்த இரு பெண்கள் என்னையும் அ.மார்க்ஸ் அவர்களையும் சற்று ஒதுங்கி நிற்கும்படி கூறிவிட்டு தீவிரமாக கையில் வைத்திருந்த புத்தகங்களை ஆளுக்கொன்றாக விரித்துக்கொண்டு வாசிக்க துவங்கினார். நாங்கள் எந்த புத்தகத்தின் கூட்டத்துக்காக கூட்டத்தில் நிற்கக்கூட முடியாமல் ரயிலில் போய்க்கொண்டிருந்தோமோ அதே புத்தகமான நாயகன் அம்பேத்கார் அந்த இரண்டு பெண்களின் மடியில் விரிந்திருந்தது.

அந்த நொடியில் என்னை விட அ.மார்க்ஸுக்கு இன்ப அதிர்ச்சி. இது எனக்கு புது அனுபவம் எனகூறினார்…

எழுத்துசார்ந்த வாழ்க்கையில் இதுபோலகிடைக்கும் அபரிதமான மகிழ்ச்சிதான் புத்த கண்காட்சியினூடே ஒரு பதிப்பாளனாகவும் என்னை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது.

கண்காட்சி முடிந்து, கணக்குகள் செட்டில் பண்ணி கடைசியில் பிரிண்டருக்கு பாக்கி செட்டில் பண்ணது போக பாக்கெட்டில் எஞ்சுவது கொஞ்சம் கடல் மண்ணும் கையளவு வானமும் மட்டும்தான் . அதுகொடுக்கும் மகிழ்ச்சியே மனதில் தேனாய் இனிக்கும்

2 Comments

 1. Jan Zac

  Hello ,

  I saw your tweets and thought I will check your website. Have to say it looks very good!
  I’m also interested in this topic and have recently started my journey as young entrepreneur.

  I’m also looking for the ways on how to promote my website. I have tried AdSense and Facebok Ads, however it is getting very expensive.
  Can you recommend something what works best for you?

  Would appreciate, if you can have a quick look at my website and give me an advice what I should improve: http://janzac.com/
  (Recently I have added a new page about FutureNet and the way how users can make money on this social networking portal.)

  I have subscribed to your newsletter. 🙂

  Hope to hear from you soon.

  P.S.
  Maybe I will add link to your website on my website and you will add link to my website on your website? It will improve SEO of our websites, right? What do you think?

  Regards
  Jan Zac

  Reply
 2. innosilicon d9 firmware

  Nice article, i like it!

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *