ஹாலிவுட்டுக்கு எதிராக ஒரு சினிமா புரட்சி -டாக்மே – 95

   

டாக்மே – 95

சினிமா புரட்சிகள்  – இதுவரை

இதுவரை உலக சினிமாவை நான்கு பெரும் இயக்கங்கள் பெரும் புரட்சியாகவும் உன்னத மாற்றங்களையும் உருவாக்கியதாக கருதப்படுகின்றன.முதலாவது ஐஸன்ஸ்டைன் , புடோவ்கின் எனும் இரண்டு இயக்குனர்கள் மூலமாக ருஷ்யாவில் 1924ல் உருவான சோஷலிச சினிமாக்கள்.இவை தன்னை இயக்கமாக அறிவித்துக்கொள்ளாவிட்டாலும் அதுவரையிலான சினிமா எனும் கலையை மடைமாற்றம் செய்த முதல் புரட்சி என சொல்லலாம் .
இரண்டாவது இத்தாலியின் நியோ ரியலிஸம் . இரண்டாம் உலகப் போருக்குப் பின் பெரும் இயக்கமாக வேரூன்றி உலகம் முழுக்க பாதித்து பல புதிய இயக்குனர்கள் படைப்புகள் உருவாக காரணமாக இருந்த இயக்கம் இது
மூன்றாவது 1959-க்கு பின் பிரான்சில் உருவான நியூவேவ் . புதிய அலை இயக்கம். இது சினிமா எனும் கலையின் முழு பரிமாணத்தையும் வெளிக்கொணர்ந்து உலக சினிமாவின் ரசனையையே நான்கு இளைஞர்கள் மூலம் தலைகீழாக புரட்டிப்போட்டது .

மேற் சொன்ன மூன்று இயக்கங்கள் குறித்தும் எனது உலக சினிமா வரலாறு பாகம் 1 மற்றும் 2 ஆகியவற்றில் விரிவாக எழுதியிருக்கிறேன் .
இந்த வரிசையில் நான்காவதாக உலக சினிமா வரலாறு அங்கீகரித்துக் கொண்ட கலைப்புரட்சி இயக்கம் டாக்மே 95
1994-ல் டென்மார்க்கைச் சேர்ந்த இரண்டு இளம் இயக்குனர்களால் உருவாக்கப்பட்டது இந்த டாக்மே 95.

பிறந்தது டாக்மே 95

மார்ச் 13 1995 சினிமா பிறந்து 100 ஆண்டுகள் ஆனதையொட்டி பிரான்ஸ் அதை கோலாகலமாக கொண்டாடியது. விழாவின் ஒரு பகுதியாக உலகின் தலை சிறந்த இயக்குனர்கள் அனைவரையும் அழைத்து சினிமாவின் எதிர்காலம், குறித்து கருத்தரங்கம் ஒன்றையும் நிகழ்த்தியது. அந்த அரங்கில் டென்மார்க் நாட்டின் பிரதிநிதியாக கலந்துகொண்டார் இளைய இயக்குனர் லார்ஸ் வான் டிரையர் . அவரை மேடையில் அழைக்கும் முன் அரங்கிலிருந்த அவரது சகாக்கள் எழுந்து திடுமென பார்வையாளர்களிடம் துண்டறிக்கைகளை விநியோகிக்க அதனைத் தொடர்ந்து மேடையேறிய லார்ஸ் வான் டிரையர் டாக்மா 95 எனும் தாங்கள் தோற்றுவிக்கப் போகும் புதிய இயக்கத்தை அறிவித்தார்.
டாக்மா உருவாக காரணம் ?
90-களின் துவக்கத்தில் சோவியத் ருஷ்யா துண்டுகளாக சிதறியபின் உலக அரசியலில் பல மாற்றங்கள் நடக்கத் துவங்கின . அமெரிக்கா சந்தையை விரிக்க துவங்க க்ளோபலைசேஷன் எனும் உலகமயமாக்கலின் ஆக்டோபஸ் கால்கள் எல்லா நாடுகளையும் விழுங்க துவங்கியது. கோக் பெப்சி-யில் ஆரம்பித்த படையெடுப்பு பிஸா,பர்கர் என விரிந்து உடை,உணவு,விவசாயம் அனைத்தையும் பாதித்து இன்று நம் பல நோய்களுக்கும் காரணமாகி அதற்கு பயன்படுத்தும் மருந்துகளையும் அவர்களே உற்பத்தி செய்து கிட்டத்தட்ட அந்த மருந்துகளுக்கான வர்த்தக சந்தையாகவும் இது நம்மை மாற்றியிருப்பது கண்கூடு.
இந்த உலகமயமாக்களின் இன்னொரு விளைவு சினிமா . பிரம்மாண்டம் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என்ற ஹாலிவுட்டின் உத்திகள். இது உலகம் முழுக்க அனைவரையும் வசீகரித்தன, கோக்,பாப்கார்ன் வயிற்றுக்குள் போய் உடம்பைக் கெடுக்க அதீத தொழில் நுட்பம் மூளைக்குள் சென்று அதுவரையான சினிமா ரசனையை மாற்றியது, ரசனை மாற்றத்தால் சமூக ஆரோக்கியமும் சீர்கெட்டது.
இதனை முதலிலேயே கண்டறிந்த டென்மார்க்கின் இரு இளைஞர்கள் இதனை எதிர்த்து உருவாக்கிய இயக்கம் தான் டாக்மே 95.
ஒரு இயக்குனரின் படைப்பாற்றலை இந்த தொழில் நுட்பங்கள் கற்பழிக்கின்றன. ஹாலிவுட் ரசனைக்கு மாற்றாக தங்களது நிலத்தின் ரசனையையும் தங்களது வாழ்வையும் பிரதிபலிக்கும் படங்கள்தான் இதற்கு தீர்வு என முடிவெடுத்த அந்த இளைஞர்கள் கூடிபேச நாற்பத்தைந்தே நிமிடத்தில் உட்கார்ந்து எழுதி அதற்கான கொள்கை வரைவுகளையும் வரையறுத்தனர்.
இப்படியான பின்புலத்தில் உருவான இயக்கம் தான் டாக்மே இதனை உருவாக்கிய அந்த இளைஞர்கள்
Lars von Trier , Thomas Vinterber
லர்ஸ் வான் டிரையரும் தாமஸ் விண்டர் பெர்க்குக்குமிடையில் பத்து வருட இடைவெளி இருந்த போதும் ரசனை, அரசியல் மற்றும் சிந்தனை ஆகியவற்றில் ஒத்த கருத்துள்ளவர்களாக இருந்தனர்.இருவரும் பேசும்போது தங்களது படைப்பு சுதந்திரம் புற சூழல்களால் பறிக்கப்படுவதை உணர்ந்து இதிலிருந்து தப்பித்து அசலான உயிர்ப்பான சினிமாவை மீட்டெடுக்க எதையாவது செய்யவேண்டும் என யோசிக்கும் போது உருவானதுதான் டாக்மே 95
இருவரும் ஒத்த கருத்தில் ஒத்திசைந்த பின் அடுத்த 45 நிமிடத்தில் தங்களது டாக்மா 95-க்கு பத்து விதிகளை திட்டமாக வரையறை செய்துக்கொண்டனர் இந்த பத்து விதிகளுடன் கூடிய அறிக்கைக்கு அவர்கள் சூட்டிய பெயர் The Vow of Chastity

டாக்மா 95 / பத்து விதிகள் :

1. படப்பிடிப்பு அசலான இடங்களில் மட்டுமே ஷூட் செய்யப்பட வேண்டும். அரங்க நிர்மாணம் மற்றும் திரைக்கதைத் தாண்டிய கூடுதல் அலங்காரப் பொருட்கள் பயன்படுத்தப் படக்கூடாது அப்படியே பயன்படுத்துவதாக இருந்தால் கதைக்கு அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2. இயற்கை ஒலியைத் தவிர செயற்கை ஒலிகள் எதுவும் சேர்க்க கூடாது. பின்னணி இசைக்குக் கூட இந்த கட்டுப்பாடு. அதாவது திருவிழாவிலோ, காரிலோ காட்சி நடைபெறுவதாக இருந்தால் அங்கு இயல்பாக பயன்படுத்தப்படும் பாடல் பயன்படுத்தலாம்

3. கேமரா செயல்பாட்டுக்கு கிரேன் உள்ளிட்ட உபகரணங்கள் எதுவும் பயன்படுத்தக்கூடாது, முழுவதுமாக கைகளால் அல்லது தோளில் சுமந்து மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

4. படபிடிப்பு முழுவதும் இயற்கை ஒளியே பயன்படுத்தப் படவேண்டும் தளத்தில் சிறப்பு விளக்குகள் பயன்படுத்தக்கூடாது.

5. அதே போல படப்பிடிப்புக்கு பின்பு ஆப்டிகல் கிரேடிங் போன்ற தொழில் நுட்பங்கள் பயன் படுத்தக்கூடாது .

6. படத்தில் கதைக்கு தொடர்பற்ற சண்டைக்காட்சிகள் சேர்க்கக்
கூடாது கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும், ஆயுதங்கள் கூட
வரையறைக்குட்பட்டே பயன்படுத்தப்பட வேண்டும்.

7. ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறான இடங்களில் நடப்பது போன்ற காட்சியமைப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.

8. ஹாலிவுட் பாணியில் த்ரில்லர் , ஆக்‌ஷன், பாண்டஸி மற்றும் வெஸ்டர்ன் போன்ற குறிப்பிட்ட வகை மாதிரி படங்களாக இருக்கக்கூடாது.

9. திரைப்பட வடிவில் 35 மிமீ இருக்க வேண்டும்.

10. படைப்பே பிரதானம் என்பதால் இயக்குனர் பெயர் இடம் பெறக்கூடாது.

ஒரு இயக்குனராக எனது ரசனைகளுக்கு உண்மையாக ஒன்றை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். நான் இனி கலைஞன் இல்லை. அந்த சுய அடையாளத்தை தவிர்த்து ஒரு சினிமாவை உருவாக்கும் பணி செய்கிறேன். அவ்வளவே என்னுடைய உச்ச நோக்கமெல்லாம் கிடைக்கும் கட்டமைவு மற்றும் பாத்திரங்களின் வழி மகத்தான உண்மையை வெளிக்கொணர்வது . தேர்ந்த ரசனையின் வழி மற்றும் அழகியலுடன் கூடிய படைப்பை இந்த சட்டகத்துள் கிடைப்பவற்றைக் கொண்டு உருவாக்குவேன் என உறுதி கூறுகிறேன்

மேற்சொன்ன பத்து விதிகளுடன் கீழ் காணும் உறுதியையும் சேர்த்து அவர்கள் தங்கள் அறிக்கையாக உருவாக்கிய The Vow of Chastity முன்பே சொன்னது போல பிரான்சில் சினிமா நூற்றாண்டு விழாவில் துண்டறிக்கையாக வெளியிட்டு பெரும் பரபரப்பை உருவாக்கினர்.

இப்படியான விதிகளுடன் யாராவது இக்காலத்தில் படமெடுக்க முடியுமா .. இதெல்லாம் ஒரு ஸ்டண்ட் என விமர்சித்தவர்கள் ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் தொழில்நுட்பம் இல்லாமல் இவர்கள் படம் எடுத்தால் அது திரையிடும் தகுதிகூட இல்லாமல் புகையடித்து மங்கலாகத்தான் இருக்கும் எனவும் சிலர் விமர்சித்தனர்.

வேறு சிலரோ என்னதான் இவர்கள் செய்ய போகிறார்கள் என ஆவலுடன் பலர் காத்திருந்தனர்.

1998ம் ஆண்டு லண்டன் பிலிம் பெஸ்டிவல்,

டாக்மே 95 அறிவிப்பின் படி அந்த விதிகளை முழுவதுமாக பின்பற்றி இரண்டு படங்கள் திரையிடப்போவதாக அறிவிப்பு முன்கூட்டி வெளியாகவே இயல்பான பரபரப்பு விழாவில் தொற்றியிருந்தது.

லர்ஸ் வான் டிரேயர் Idiots, என்ற படமும் தாமஸ் விண்டர் பர்க் Festen. என்ற படமுமாக இருவருமே ஆளுக்கொருப் படத்துடன் களமிறங்கியிருந்தனர் .

ஆதரவு கொடுத்தவர், வரவேற்றவர், விமர்சனம் செய்தவர், கேலி செய்தவர் என பலரும் டாக்மா படங்களின் திரையிடலுக்காக காத்திருந்தனர். மேலும் பிலிம் ரோல் அல்லாமல் டிஜிட்டலில் உருவாக்கப்பட்ட படம் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பிற்கு இன்னொரு காரணம் .

டாக்மா 95 இயக்கத்தின் முதல் படம் என்ற அறிவிப்புடன் தாமஸ் விண்டர் பெர்க்கின் Festen. படம் திரையிடப் பட்டது

துவக்கத்திலேயே டாக்மா 95 என்ற சான்றிதழுடன் காட்சிகள் துவங்கின . கதை தனியாக வசிக்கும் ஒரு தந்தையின் 60-ஆம் வயது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக வெவ்வேறு இடத்திலிருந்து விடுதிக்கு வந்து சேரும் 3 பிள்ளைகளிடமிருந்து துவங்குகிறது .

விழாவில் தந்தையின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என பெரும் கூட்டம் கூடுகிறது. அனைவருமே தந்தையின் உழைப்பைப் புகழ்ந்து தள்ளுகின்றனர். அப்போது யாரும் எதிர்பாராவிதமாக அவருடைய கடைசி மகன் கடந்த வருடம் இதே விடுதியில் இறந்து போன தன் சகோதரியின் தற்கொலைக்குக் காரணம் தன் தந்தைதான் என குற்றம் சாட்டுகிறான். தங்களுடைய சிறுவயதில் தந்தையின் பாலியல் வன்புணர்வுக்குத் தானும் தன் இறந்த சகோதரியும் ஆட்பட்டதாகக் கூற விழாவிற்கு வந்த அனைவரும் அதிர்ந்து போகின்றனர். அதன் பிறகு நடக்கும் திருப்பங்களும் சுவாரசியமான சம்பவங்களும் தான் திரைக்கதை .

டாக்மா-வின் முதல் படம் என்பதால் விதிகள் முழுமையாக கடைபிடிக்கப் பட்ட இப்படம் மிக சாதராண Sony DCR-PC3 Handy cam காமிரா மூலமாக படம் பிடிக்கப்பட்டு Mini-DV cassettes. மூலமாக பதிவு செய்யப்பட்டது என்பதை படம் பார்த்தவர்கள் யாரும் நம்ப மாட்டார்கள் ஒளிப்பதிவில் அத்தனை துல்லியம். மேலும் பின்னணி இசை எதுவுமில்லாமல் வெறுமனே பார்ட்டியில் பயன்ப்படுத்தப்பட்ட பாடல்கள் மட்டுமே பயன்படுத்த பட்டிருந்தன. பெஸ்டர்ண் விமர்சனம் வணிகம் என இரண்டு ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியது.

டாக்மா 1 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டாக்மா 2 இடியட்ஸ் பக்கம் ஒட்டு மொத்த பார்வையும் ஆவலுடன் திரும்பியது . ஆனால் நடந்ததோ வேறு படத்துக்கு பல இடங்களில் கடும் எதிர்ப்பு . கான் திரைப்பட விழாவின் சிறப்பு திரையீட்டின் போது ஒரு விமர்சகர் படத்தை நிறுத்த சொல்லி கூச்சல் போடும்,அளவுக்கு பாலியல் துய்ப்பு படத்தில் கட்டுக்கடங்காமல் இருந்தது.

ஆனாலும் படைப்பு ரீதியாகவும் பரிசோதனை முயற்சிகளுக்காகவும் லார்ச் வாண்டிரையர் உலக சினிமாவில் இதற்கு முன்பே பெயர் வாங்கி பெருமை பெற்றிருந்தார்.

1984-ல் தி எலிமண்ட்ஸ் ஆப் க்ரைம் The Element of Crime (1984), எனும் முதல் படத்திற்கே பிரான்ஸின் கான் விருது வாங்கியவர் தொடர்ந்து , Epidemic (1987), and Europa (1991). ஆகிய படங்களை எடுத்து உலக சினிமாவில் தனி முத்திரை பதித்தார். அவரது இந்த முதல் மூன்று படங்களும் இணைந்து Europa trilogy என அழைக்கப் படுகின்றன.

இந்த பெரிய வெற்றிகளுக்குப் பிறகு சொந்தமாக Zentropa எனும் திரைப்பட கம்பெனியை உருவாக்கி பல படங்களை தயாரித்தவர்
மேலும் அவ்வப்போது திரைப்பட விழாக்களில் இவர் உண்டாக்கும் சலசலப்புகளுக்கு பஞ்சமிருக்காது
அடிப்படையில் அவரது அப்பா ஜெர்மனியைச் சேர்ந்த யூதர் 1989-வாக்கில் மரணப்படுக்கையில் இருந்த அவரது தாயார் லர்ஸ் வான் டிரையரை அழைத்து உண்மையில் உடற்கூறு ரீதியாக அவருடைய தந்தை ஒரு ஜெர்மானியர் நாஜி படையில் பணி புரிந்தவர் எனக்கூற அதை லர்ஸ் வான் டிரையரும் உலகிற்கு வெளிப்படையாக அறிவித்தார் .

2011-ல் அவருடைய மெலோன்கலி படத்துக்காக பிரான்ஸ் கான் விருதுக்கு வந்திருந்த போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிலர் அவரை வம்புக்கிழுக்கும் நோக்கத்தில் ஒரு நாஜியாக இப்போது எப்படி உணர்கிறீர்கள் எனக் கேட்க அவர் உடனே இப்போது எனக்கு ஹிட்லரின் பக்கம் சில நியாயம் இருப்பதாக உணர்கிறேன் என அதை காமெடி என நினைத்து சொல்ல பெரும் சர்ச்சையாகி கான் விருது கமிட்டி அடுத்த ஒரு வருடத்திற்கு அவரை கான் விழாவில் பங்கேற்க தடை விதித்து விட்டது. இந்த அவப்பெயரால் அவரால் கொஞ்ச காலம் வெளியில் தலைகாட்ட முடியவில்லை . மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வர அவர் ஒரு திட்டமிட்டார்.

2014-ல் வெளியான தனது Nymphomaniac அதன் படு பயங்கர பாலியல் காட்சிகளுக்காக உலகையே பேச வைத்தது. மொத்தம் நான்கரை மணி நேர படம் இரண்டு வால்யூம்களாக மாற்றபட்டு லண்டன் திரைப்பட விழாவில் முதல் திரையீடு செய்யப்பட்டு மிகபெரிய வெற்றியைப் பெற்றது .
ஆனாலும் இந்த படத்துக்கும் விமர்சகர்கள் கடுமையாக எழுந்தன. இது உயர்தர நீலப்படம் என சிலர் நிராகரித்தனர். ஆனால் வேறு சிலரோ இவரது முந்தைய படங்களான Antichrist (2009) Melancholia (2011 film)ஆகியவற்றைச் சேர்த்து டிப்ரஷன் டிரையாலஜி என வரையறுத்து படத்துக்கு தகுதியைக் கூட்டினர்

இப்படியான விமர்சன ரீதியாக லார்ஸ் வான் டிரையர் பல பிரச்சனைகளை சந்தித்திருப்பினும் திரைப்பட மொழி சார்ந்த அவரது அணுகுமுறை காரணமாக உலகின் தலை சிறந்த இயக்குனர்களுள் ஒருவராகவே போற்றப்படுகிறார்.MIFUNE’S LAST SONG – DOGME 3 :
டாக்மா வரிசையில் மூன்றாவதாக வந்து அசத்திய படம் மிஃபுனே யின் கடைசி பாடல் . இதை இயக்கியவர் SOREN KRAGH-JACOBSEN
இந்தப் படமும் முழுக்க முழுக்க டாக்மா விதிகளுக்குட்பட்டே எடுக்கப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றது படத்தில் நடித்த அனைவருக்கும் தங்க ஹோட்டல்கள் இல்லை ஒரே கேர்வானிலேயே தங்கினர். அவரவர் சொந்த உடைகளையேப் பயன் படுத்தினர்.
டென்மார்க்கில் துவங்கிய இந்த டாக்மா 95 இயக்கம் பிற்பாடு இத்தாலி, சிலி, அமெரிக்கா, ஸ்பெயின் என் பலநாடுகளுக்கும் பரவியது, அனைவரும் டாக்மா 95 குழுவினரிடம் ஒப்புதல் வாங்கி அதன் கொள்கைகளுக்கு உட்பட்டே படங்களை இயக்கி டாக்மா வின் அங்கீகாரத்துடன் படத்தை வெளியிட்டனர் .

2004-ல் இத்தாலியில் வெளியான Cosi x Caso எனும் டாக்மா 35 வது படத்துடன் அந்த இயக்கம் முடிவுக்கு வந்தது. டாக்மா 95 உருவாக்கிய லார்ஸ் வான் டிரையர் மற்றும் தாமஸ் விண்டர்பெர்க் ஆகிய இருவரும் 2005ல் கூட்டாக அறிக்கை விடுத்து அந்த இயக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டனர் .

டாக்மா 35 படங்களில் சில முக்கியமான படங்கள் பட்டியல்

Dogme #1: Festen
Dogme #2: The Idiots
Dogme #3: Mifune’s Last Song
Dogme #4: The King Is Alive
Dogme #5: Lovers
Dogme #6: Julien Donkey-Boy
Dogme #8: Fuckland
Dogme #12: Italian for Beginners
Dogme #14: Joy Ride
Dogme #18: Truly Human
Dogme #21: Kira’s Reason: A Love Story
Dogme #23: Resin
Dogme #28: Open Hearts
Dogme #31: El desenlace

நன்றி : அயல் சினிமா

நவம்பர்  2017 இதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *