நீதியின் மரணம் அல்லது மஞ்சள் லாரி வினோத கொலை வழக்கு

இன்று இறுதி நாள் . லாரியா அல்லது நீதிமன்றமா ஜெயிக்கப்போவது  யார் என இது நாள் வரையிலாக நடந்து வந்த  போட்டியின் இறுதி தீர்ப்பு நாள்.

அதற்கான பரபரப்பு காலையிலிருந்தே  கோர்ட்  வாசலில் துவங்கி விட்டிருந்தது.  லாரியை அப்புறப்படுத்த  கோர்ட் காம்பவுண்ட்டை ஒட்டிய சாலையில் பெரும் கூட்டம்கையில் கடப்பாறை சம்மட்டி சகிதம்  லாரியைச் சுற்றி சூழ்ந்திருந்ததுமுப்பதுக்கும் மேற்பட்ட காவலர்களும்  50க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுமாக கும்பல் கும்பலாக ஆங்காங்கே கூடி தீவிரமாக கதைத்துக்கொண்டிருந்தனர். லாரிக்கு வலப்புறமாக சாலையை  ஓட்டியிருந்த கடைகளின் வாசலிலும் கட்டிடங்களின் மொட்டை மாடிகளிலும்  பால்கனியிலும்  பலர் கூட்டம் கூட்டமாய் நின்று வேடிக்கைப் பார்க்க  அந்த இடமே கிட்டத்தட்ட ஒரு  போர்க்களம் போல  காட்சியளித்தது . சாலையின் வாகன போக்குவரத்துக்கு இடைஞ்சலாக யாரும் நிற்காதபடி போலீசார் சாலையில் இருபக்கமும் கட்டுபடுத்திக்கொண்டிருந்தனர்சாலையில்  வேகமாய்   வந்து  கூட்டத்தை பார்த்தவுடன் சட்டென தாமும் வேடிக்கைப் பார்க்க  பிரெக் போட்டு நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை  புறப்பட்டு செல்லுமாறு லத்தியை சுழற்றி விரட்டிக்கொண்டிருந்தனர். ஹாரன் சத்தங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இரைந்துகொண்டிருக்கஅந்த காலைப் பொழுதே அங்கு ஏதோ சினிமா படப்பிடிப்பு போல  பரபரப்பானதாக காட்சியளித்தது. குட்டி தெருநாயின் முகத்துடன் இவற்றிற்கெல்லாம் நடு நாயகமாக பரிதாபமாய் நின்றுகொண்டிருந்தது. அந்த பழைய மண் பாடி  மஞ்சள் லாரி

சட்டென  சிவப்பு விளக்கு சுழல், அங்கு ஒரு உயர் அதிகாரி வாகனம் வந்து நின்றதும் காவலர்கள் பதட்டமாகி லாரியை சுற்றி வட்டமாக பாதுகாப்பு வளையம் போல சுற்றி நின்றுகொண்டு கூடுதல் சுறுசுறுப்புடன் அனைவரையும் விரட்டிக்கொண்டிருந்தனர்.

ஒரு காவலர்  லாரியின்  டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தார்.  லாரியின் முன்பக்கம் நல்ல தடிமனான  இரண்டு தாம்பு கயிற்றை சிலர் கட்ட துவங்கினர். ஒரு கூட்டம் லாரியை சுற்றி கூடிநின்று இரண்டு கைகளாலும் தள்ள தயாராக இன்னொரு கூட்டம் தாம்பு கயிற்றை இரண்டுபக்கமும் வரிசையாக நின்று தேர்வடம் போல இழுக்க துவங்கியதுஅனைவரும் உற்சாக  குரல் எழுப்ப  ஓட்டுனர் ஆசனத்தில் அமர்ந்த காவலர் சாவியை போட்டு முடுக்கினார். ம்ஹூம் பலனில்லை ஸ்டியரிங்கை வளைத்தும் கியரை மாற்றியும்  பிரம்ம பிரயத்தனங்கள் செய்தார் .

ம்ஹூம் .. வண்டி அசைந்தபாடில்லை.

மீசை  ஈஸ்வரன் என்ற பெயர் நகரில் பிரசித்தம் . அவர் அந்தபக்கம் வருகிறார் என்றால் எப்பேர்ப்பட்ட கனரக வாகனமும் கொஞ்சம் நடுங்கும். டேங்கிலிருந்து டீசல்  ஒழுகும்.  காவல் துறையில் உயரதிகாரிகள் நகரத்துக்கு வரும்போது அவர்கள் வாகனத்தை ஓட்ட நியமிக்கப்படும் நகரின் ஆஸ்தான ஓட்டுனர் திலகம் அவர். அப்படிப்பட்ட அந்த ஓட்டுனர் திலகம் வாழ்நாளின் மறக்க முடியாத நாளை அன்று எதிர்கொண்டது.     ஜீப், லாரி , பஸ் ,ட்ரக், கண்டெய்னர் என எல்லாவிதமான வாகனத்தையும் அனாயசமாக ஓட்டக்கூடிய மீசை ஈஸ்வர மூர்த்தியின் கெடா  மீசை அன்று அறுந்து தொங்கியதுதான் மிச்சம் . சாவி போட்டு கிளட்சை மிதித்து கியரை மாத்தி  ஆக்சிலேட்டரை முடுக்கி ..புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ம்ம்ஹூம் .பிரயோஜனமிலை.

மிகவும் பிடிவாதமாக எதற்கும் அசைவதில்லை என்ற தீர்மானத்துடன் அந்த மஞ்சள் லாரி  உறுதியுடன் இருந்தது .  கிட்டத்தட்ட ஆறுமாதமாக அங்கேயே லாரி நின்று கொண்டிருந்த காரணத்தால் நான்கு டயர்களும் மண்ணில் அழுந்தி ஊன்றிக்கிடந்தன. ஒவ்வொரு முறை மீசை கியரை மாற்றி க்ளட்சை அமுக்கும் போதும் புடுபுடுவென பெரிதாக சத்தம் எழும்பி வண்டியிலிருந்து தூசு தும்பு பறந்ததே ஒழிய அதன் சக்கரங்கள்   உறுதியாக மண்ணில் அழுந்திக்கிடந்தன. அக்கம்பக்கம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஆட்களை உடன் சேர்ந்து தள்ளுமாறு போலீசார் அழைத்துக்கொண்டிருந்தனர். சிலர் அவர்களது அழைப்புக்கு இணங்கி லாரியை தள்ள முன் வந்தனர்சிலர் விலகி நின்று வேடிக்கை பார்த்தனர் .

ஓ பெல் .

பெல்

ஐலேசா

ஐலேசா

 

தூக்கி தள்ளு

ஐலேசா

 

நல்லா தள்ளு

ஐலேசா

 

லாரியை தள்ளு

ஐலேசா

 

அமுக்கி தள்ளு

ஐலேசா

 

லாரியை தள்ளும் போலீசாரின் குரல்கள் சூழலில் ஒரு வினோதத்தை உண்டாக்கியது. ஆனாலும் லாரி எதற்கும் அசைந்தபாடில்லை,வியர்வையில் சட்டை நனைந்து மூச்சிறைக்க அனைவரும் சோர்ந்து போய் கைகளை உதறிக்கொண்டனர்.

ஏம்பா வண்டி பால்ட்டா இருக்க போவுது . மெக்கானிக்க கொண்டுவந்து பாக்க சொல்லு,

அதெல்லாம் நேத்தே பாத்தாச்சு  வண்டியில் ஒரு பால்ட்டும் இல்லை,

சரி, சரி சீக்கிரம்அப்படியே இன்னொரு தடவ ட்ரை பண்ணுங்க,

என டிரைவர் சீட்டிலிருந்து மீசை உத்தரவிட  இப்போது இன்னும் சிலரும் லாரியை தள்ளும் ஆர்வத்தில் கை வைத்து முயற்சியில் இறங்கினர்.

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பொழுதில்  நகரின் பிரதான சாலையொன்றில் பைக்கில் சென்ற  ராகவன்  மீது  இந்த மஞ்சள் லாரி மோதியதுதான் வழக்கின்  மூல சம்பவம்விபத்து நடந்து சில மணி நேரத்திற்குள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராகவன் மூன்று நாட்களுக்குப் பின் உயிரை முழுவதுமாக விட்டான்.

உடனடியாக லாரியை கோர்ட் வளாகத்துக்குள் கொண்டுவர தாசில்தார் உத்தரவிட்டிருந்த காரணத்தால் விபத்து நடந்த இடத்திலிருந்து லாரியை அப்புறப்படுத்தி எப்படியோ கோர்ட் வளாகத்தின் முன் சாலையோரம் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர்.

விபத்து நடந்த இரண்டு நாட்களுக்குப் பின்  தப்பி ஓடிய  டிரைவர் முருகானந்தம்   போலீசில் சரண்டைந்தார். வழக்கின் போது மாஜிஸ்திரேட்முன் சாட்சிகூண்டில் குனிந்தபடியே நின்ற முருகானந்தம் சொன்ன தகவல்கள் முக்கியமானவை,

ஐயா அன்னைக்கு நான் காலையில  வண்டி எடுக்கறப்பவே க்ளட்ச் பால்ட்டா இருந்துச்சிய்யா .. நாலு நாளா மழை புயலா இருந்துச்சிங்கிறதால நானும் அதை பெரிசா எடுத்துக்கலைய்யா .. ஓனரு சிமண்ட் மூட்டை லோடு ஏத்த என்னை திரேசாபுரத்துக்கு ஓட்ட சொன்னாருங்கய்யா,   நானும் ஒட்டிகிட்டு தான்யா இருந்தேன், திடீர்னு எனக்குள்ள என்ன ஆச்சின்னு தெரியில   அப்படியே கண்ணைகட்டனா மாதிரியாயிடுச்சிங்கய்யாதிரும்ப நினைவு வந்தப்ப லரி முன்னாடி  ஒரு ஆள்  மோதுற சத்தம் கேட்டுச்சி. . வண்டியை அப்படியே அவசரமா ரோட்டோரமா நிப்பாட்டிட்டு குதிச்சி வெளியில வந்து ஓடிட்டான் . மாட்டியிருந்தேன் என் பொண்டாட்டிக்கு புருஷன் இல்லாம போயிருப்பான்ய்யா, என் புள்ள குட்டிங்களும் கஷ்டப்பட்டிருக்கும், நான் தப்பு செய்யல அய்யா அதான் நானா வந்து சரண்டர் ஆயிட்டேன் என கூறியிருந்தான்

வழக்கம் போல இதுவும் ஒரு  சாலை விபத்து என போலீசார் காது குடைய இல்லை, இது  திட்டமிடப்பட்ட கொலை எனக்கூறி வழக்கில் சூட்டை கிளப்பினார் நகராட்சி கமிஷனர் நமச்சிவாயம்.   அவர் தான் விபத்தில் பலியான ராகவனின் தந்தை .  விபத்து நடந்த பத்து பதினைந்து நிமிடத்துக்குள் சம்பவ இடத்துக்கு வந்த அவர்  ஓரமாய் நிறுத்தப்பட்டிருந்த லாரியை பார்த்ததும் கடும் உஷ்ணமடைந்தார். அப்போது மட்டும் அவர் கையில் ஒரு சுத்தியல் அல்லது கடப்பாறை கிடைத்திருந்தால் அன்றே  அந்த  லாரிக்கு விசாரணையில்லா மரண தண்டனை கிடைத்திருக்கும் . தனது செல்வாக்கை பயன்படுத்தி லாரி மீது உடனடியாக குற்றப் பத்திரிக்கை எழுதுமாறு ஆர்.டி.வுக்கு உத்தரவிட்டவர் கடைசி வரை ஓட்டுனர் யார், விபத்து எப்படி நடந்தது என்பதைப் பற்றி கொஞ்சமும் யோசிக்கவில்லை. அதுவும் கொலையை செய்தது ஓட்டுனர் அல்ல,அந்த மஞ்சள் லாரிதான். ஆகவே சட்டப்படி  அந்த கொலைகார லாரிக்கு மரணதண்டனை வாங்கித்தர வேண்டும்  எனக்கூறி அதில்  அவர் அழுத்தமாகாவும்  பிடிவாதமாகவும் இருந்தார்.

என்ன சார் அபத்தமா இருக்குஒரு லாரி  எப்படி சார்  திட்டம் போட்டு கொல்லும், என  அவரது வக்கீல் உட்பட பலரும்  சொன்னதை அவர் காது கொடுத்து கேட்கவில்லை . உங்களுக்கு தெரியுமாஎன்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாம பேசாதீங்க .  உங்களை மாதிரியாளுங்களுக்கு மூஞ்சில மட்டும்தான்  கண்ணு இருக்குது.

கமிஷ்னர் இந்த  குறிப்பிட்ட வசனத்தை  வழக்கு பற்றி விசாரித்த எல்லோரிடமும் திரும்ப  திரும்ப  சொல்லிக்கொண்டிருந்தார்.நீதிக்கு  ஆயிரம் கண்கள்  வேண்டும் என ஒரு எபிரேய பழமொழி இருக்கிறது. அதை வைத்துத்தான் அவர் திரும்ப திரும்ப   அதையே கூறிக்கொண்டிருக்கிறார் என  நகராட்சியின் சுகாதர அலுவலர் ரங்கசாமி சொன்ன பிறகுதான் அதன் அர்த்தம் பலருக்கும் தெரிய வந்தது.

இப்படியாக  கமிஷ்னர் நமச்சிவாயம்  கோபமாகவும்  எளிதில் புரியாத படிக்கும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் யாரும் மேற்கோண்டு அவரிடம் பேசுவதில்லை.அதே சமயம்  ஒரு மஞ்சள் லாரி  அவரது மகனை கொலை செய்வதற்கான காரணம் பற்றி எதுவுமே பேசமாட்டார்.

கமிஷ்னர்  நமச்சிவாயம் மற்றவர்களை போல சராசரியான ஆள் கிடையாதுதீவிரமான படிப்பாளி. அதே சமயத்தில் அவர் கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரார் என்றும் சொல்லிவிட முடியாது. இந்த பிரச்சனையில் அவர் எதையோ மறைக்கிறார் என்று மட்டும் பலர் ஊகித்தனர் .

நகரின் பிராதான  பத்திரிக்கை  நிருபர் தினகரன் மட்டும் மஞ்சள் லாரி வழக்கில் பின்தொடர்ந்து அதுகுறித்து செய்திகள் சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். மிகவும்  புரிபடாத இந்த வழக்கில் அவரது செய்தி சேகரிப்புகள்  மட்டுமே ஓரளவுக்கு சில விஷயங்களை வெளிக்கொண்டுவந்தன. ஆனாலும் அவையெதுவுமே  தீர்ப்பை பாதிக்குமா என்பது சந்தேகமே . காரணம் கமிஷ்னரும் நீதிபதி குகனும் பள்ளித்தோழர்கள் . எப்படியும்  திர்ப்பு மஞ்சள் லாரிக்கு எதிராகத்தான்  அமையும் என்பது அனைவரும் முன்கூட்டியே ஊகித்திருந்தாலும் நிருபர் தினகரனின் செய்தி சேகரிப்பினுள் செல்லும்போது சில ரகசியங்கள் நமக்கு தெரியவருகின்றன ,

இவ் வழக்கு தொடர்பாக விபத்து நடந்து  நான்கு வாரங்கள் கழித்து  வழக்கை கையாண்டு வந்த காவல் துணை  ஆய்வாளர் கார்திக்கை   தினகரன் விசாரிக்கப் போன போது  ஆய்வாளர்  பொறுமையாக பேசினார்.

“   இது  ரொம்ப டஃப் ஆன கேஸ் சார். இதுல விசாரிச்ச வரைக்கும் வண்டி ஓட்ன டிரைவருக்கோ இல்லை ஓனருக்கோ  எந்த மோட்டிவ்வும் இருக்கா மாதிரி தெரியலை .  நான்கூட ரெண்டு நாள் உள்ள வச்சி நாலு தட்டு தட்டி பாத்தேன்  ம்ஹூம்  ஒண்ணும் தேறலைகமிஷ்னர்  சொல்றா மாதிரி லாரிதான் இந்த கொலைய செஞ்சிருக்குமோன்னு எனக்கே டவுட்டாதான் இருக்கு. நான் கூட ஆரம்பத்துல கமிஷ்னர் சொன்னப்போ நம்பல . கோமாளித்தனமா சொல்றாரேன்னு தான் நெனச்சேன் . ஆனா டிரைவரோட வாக்குமூலம் ஸ்ட்ராங்கா இருக்குவிபத்து நடக்கறதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி வரைக்கும் ஞாபகம் இருக்கு அதுக்கப்பறம் மார்க்கட் சந்துல எப்படி திரும்பனேன் எப்புடி ஆக்சிடண்ட் நடந்துச்சின்னு ஒண்னுமே தெரியலைன்னு சொல்றான் . ஆளும் அப்புராணி .அதனால கமிஷ்னர் சொல்ற மதிரி லாரி கொல்றதுக்கு சில வாய்ப்புகள் இருக்கு. நான்  இது மாதிரி இங்க்லீஷ் படமெல்லாம் பாத்ருக்கேன். பழி வாங்கும் கார்னு  தமிழ்ல கூட டப்பிங் செஞ்சு வந்துருக்கு . வாகனங்களுக்கு பழி வாங்கற குணம் இருக்குங்கிறது எனக்கும் நம்புறதுக்கு கஷ்டமாதான் இருக்கு ஆனா வேற வழியில்லை.

சரி சார் அந்த லாரிதான் கொன்னதாவே இருந்தாலும் அதுக்கு ஒரு மோட்டிவ் இருக்கணுமில்லியா .. குறைஞ்சபட்சம் அதாவது  சொல்லுங்க

தம்பி  இன்னைக்கு உலகம்  மாறிடுச்சிஇந்த உலகம் காரண காரியத்தோடவா நடக்குது . எவன் எதை எப்ப பண்ணுவான்னு ஒண்ணுமே தெரியலை. அது மாதிரிதான்  இதுவும் . அதான்  ராகவனோட அப்பா கமிஷன்ரே சொல்லிட்டாரே லாரிதான் காரணம்னு . யாராவது மனுஷன சொன்னார்னா கூப்பிட்டு விசாரிச்சு உண்மையா பொய்யான்னு கண்டுபுடிக்ககலாம் லாரிதான் கொண்னுதுன்னு அவரே சொல்றப்போ கேஸை முடிக்கிறதுதானே நியாயம்.

நிருபர் தினகரன் புறப்படும்போது வாசல் வரை வந்த ஆய்வாளர் கார்த்திக் தனிப்பட்ட முறையில்  நீங்க விசாரிங்கலாரி தான் காரணம்னு கமிஷ்னர் சொல்றதுக்கு   ஏதோ ஒரு உள் காரணம் இருக்குநீங்க விசாரிங்க தம்பி . ஒருவேளை யாருமே கொண்டுவர முடியாத உண்மை உங்க மூலாமாவது தெரிய வரட்டுமே

தொடர்ந்து நிருபர் சிலரை சந்தித்து வழக்கு குறித்து விசாரிக்க போக, மூன்று பேர் சொன்ன தகவல் மிக முக்கியமாக இருந்தது.ஒன்றுக்கொன்று தொடர்பற்றும் ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருந்தது.

முதாலாமவர் இறந்து போன ராகவனின் காதலி  ஜெமீலா வினுடையது.

ராகவனும் நானும்  நாலு வருஷமா காதலிச்சோம். அவன்  எப்பவும் டென்ஷ்ன்லயே இருப்பான் . எதையுமே சட்டுனு முடிவு பண்ணமாட்டான் . எங்க கல்யாணம் டிலே ஆனதுக்கும் அவந்தான் காரணம்.  ரெண்டுபேருமே  ட்ரிபிள் . சிட்டிக்கு போனா, வேலை செஞ்சு ஹாப்பியா இருக்காலம் எவ்ளோ சொல்லி பாத்தேன். காண்ட்ராக்ட் செஞ்சு பில்ட்ராயி கோடீஸ்வரனாகப் போறேன்னு அவனுக்கு  ஒத்துவராத தொழிலை சொல்லிகிட்ருந்தான்.    கரெக்டா  இரண்டு மாசம் கழிச்சி அந்த லாரி  வாங்கபோறன்னு அவன் என் கிட்ட போன்ல சொன்ன அன்னைக்குதான் இனி எங்கூட பேசாத நான் வேற ஆளை கலயாணம் பண்ணிகப்போறேன்னு சொல்லி கட் பண்ணிட்டேன் . அன்னிக்கு மூணுதடவை போன் பண்ணினான் நான் எடுக்கவே இல்லை .  அதுக்கப்புறம் அடிக்கடி போன் பண்ணினான் நான்தான் எடுக்கலை . கடைசில அவங்கப்பா அனுப்பன மெசேஜ் பாத்துதான் ஆக்சிடண்ட் பத்தி தெரிஞ்சுகிட்டேன்.

இரண்டாவது  நபர் பேர் சொல்ல விரும்பவில்லை  கமிஷ்னரை நன்கு அறிந்த நெருங்கிய நபர்   “எனகென்னமோ கொலையை செஞ்சதே அந்த கமிஷ்னர் நமச்சிவாயம் தான்னு தோணுது சார் . படிச்சிட்டு வந்த்துலர்ந்தே அப்பாவுக்கும் பையனுக்கும் முட்டிகிச்சு . கூட படிச்ச பொண்ணை லவ் பண்றன்னு வீட்டுக்கு கூட்டியாந்துருக்கான் . இவரும் ஆரம்பதுல கலயாணத்துக்கு ஒத்துகிட்டார். இவங்கப்பா .டி.எமை எடுத்துட்டு போயி அந்த பொண்ணு லட்ச கணக்குல அபேஸ் பண்ணிட்டு நான் எடுக்கவே இல்லைன்னு சாதிச்சிடுச்சி பின் நம்பர் அவங்க பையனுக்கப்புறம் அந்த பொண்ணுக்கு மட்டும்தான் தெரியும்அவங்க அப்பா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண போறன்னு சொல்ல   அப்பனுக்கும் பையனுக்கும் முட்டிகிச்சி அப்புறம் அந்த பொண்ணா கழண்டுகிச்சி . அந்த வெறுப்புல இவன் இன்னொரு காரியம் பண்னான் அதான் கொலைக்கு காரணம் . கமஷ்னருக்கு பொண்ணாட்டி இல்ல. அவர் ஒரு பொம்பளைய செட் பண்ணி வெச்சிருந்தார் . அவ எப்படியோ பையனை கவுத்துட்டா .ரெண்டுபேரையும் கமிஷ்னர் ஒண்னா கட்டில்ல பாத்துட்டார் அதனாலதான் பையனை ஆள் வச்சி லாரில காலி பண்ணிட்டார் . டிரைவர் மாட்டினா பிரச்சனையாயிடும்னு அவனை யும் காப்பாத்தி நமக்கும் பிரச்சனையில்லாம பண்ண முடிவு செஞ்சிதான்  லாரி மேல பழியை போட்டு எஸ்கேப் ஆவறார்.  விஷயம் என்னைக்காவது வெளிய தெரியாமவ போயிடும்

இதுதான் மஞ்சள் லாரி வழக்கின் பின்னிருக்கும்  வெவ்வேறு கதைகள் இன்னும் ரெண்டு பேரை விசாரித்தால் இன்னும் சில கதைகள் கிடைக்கும்  யாராலும் இந்த வழக்கின் புதிரை அவிழ்க்க முடியாத நிலையில்  தெளிவாக இருந்த ஒரே நபர் கமிஷ்னர் மட்டும்தான். கமிஷ்னரின் அதிகாரம்  நட்பு ஆகியவை  கோர்ட்டையும்  போலீசையும் வளைத்துவிட்டது  என்பது மட்டும் உண்மை . யாராவது கேட்டால்  செடி கொடிக்கு சிந்திக்கும் திறன் இருப்பதாக எல்லோரும் நம்புகிற போது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படும் இயந்திரங்களுக்கும் மனிதனை போல எண்ணங்கள் பழிவாங்கும் உணர்ச்சிகள் ஏன் இருக்கக்கூடாது என்பதுதான் அவரது வாதம் . குறுக்கு விசாரணையின்  போது ஜட்ஜ் அய்யாவே மிரண்டு போனார். அந்த லாரிதான் என்  மகனை கொன்று விட்டது யுவர் ஆனர் அதற்கு மரணதண்டனை வாங்கி தந்து என் மகனது மரணத்துக்கு ஒரு தக்க நீதி வழங்கவேண்டும் யுவர் ஆனார் என கதறியழுதபோது பார்வையாளர் அரங்கில் இருந்த படித்த சிலரும்  கர்சீப்பால் கண்ணை ஓற்றிக்கொண்டதைப் பார்க்க முடிந்தது..

கடந்த ஆறு மாததிற்கு மேலாக லாரி இங்குதான் முன்சீப் கோர்ட்டை ஒட்டிய நெடுஞ்சாலையில்தான் நிற்கிறது.  வழக்கு நிமித்தமாக லாரியை ஒருமுறை ஜட்ஜ் அய்யா நேரடியாக பார்க்க வேண்டியிருந்தது. கோர்ட் வளாகத்துக்கு வெளியே வைத்து லாரியை பார்வையிடுவது தன் மதிப்புக்கு உகந்ததல்ல என நினைத்த அய்யா அவர்கள் கோர்ட்டுக்குள் அந்த கேடு கெட்ட லாரியை இழுத்து வரும்படி முன்பே உத்தரவிட்டிருந்தார்அப்போதெல்லாம் ஓரிருவர் வந்து முயற்சித்து பலனளிக்காமல் போக அப்படியே விட்டு விட்டனர்

இதனிடையே ஆறு மாதமாக நடைபெற்று வந்த வழக்கு கடந்த வாரம் சமூக ஆர்வல  இதயாதிகள் வாசகர் கடிதம் பகுதியில் இன்னமும் இழுத்துக்கொண்டிருக்கும்  மஞ்சள் லாரி வழக்கும் டிராபிக் இடைஞ்சலும் என எழுதப்போக வழக்கு முடுக்கிவிடப்பட்டு இதன் காரணமாக நடந்த துரித விசாரணையின் தீர்ப்பாக  லாரிக்கு மரண தண்டனை விதிக்க போக உடனடியாக லாரியை கோர்ட் வளாகத்தினுள் அடுத்த மூன்று நாட்களுக்குள் இழுத்து தயார் நிலையில் நிறுத்தும்படியும் போலீசாருக்கு கெடு விதித்து ஜட்ஜ் அய்யா உத்தரவிட்டிருந்தார்.

இன்று அந்த கெடு முடியப்போகிறது .. மூன்றாவது நாள் . முதல் இரண்டு நாட்கள் எவ்வளவோ முயற்சித்தும் ஒன்றும் முடியாமல் போக இன்று இரண்டில் ஒன்று என்ற தீர்மானத்துடன் போலீசார் பெரும்படையுடன் காலையிலிருந்து மிகப்பெரிய போரையே அங்கு நிகழ்த்திக்கொண்டிருந்தனர் . முன்று மணிநேரமாகியும்  அந்த மஞ்சள் லாரி மருந்துக்கும் அசையவில்லை .

இப்படி பலர் தள்ளியும் கோர்ட் வாசலில் நுழைய மறுத்து லாரி அடம் பிடித்துக்கொண்டிருந்தது.ஓட்டுனர் இருக்கையில்  அதுவரை ஸ்டீயரிங்கை பிடித்து முறுக்கிக்கொண்டிருந்த மீசை ஈஸ்வரனும்   வெறுத்து போய் கீழே குதித்தார்.  கீழே அதுவரை வேடிக்கை பார்த்த உயர் அதிகாரி லாரியை தள்ளிக்கொண்டிருந்த சக காவலர்களின்   சக்தியின்மையை கிண்டலடித்தார். இந்த வண்டியை தள்ளாதவர்கள் எப்படி இரவில் குடும்ப விஷயங்களை நடத்துவீர்கள்  என இரட்டை அர்த்தம் தொனிக்க அந்த அதிகாரி பேசியதை கேட்ட  சக காவலர்கள்  வெட்கத்துடன் புன்முறுவல் செய்தனர்,

அருகில் இருந்த காவலர் ஒருவர்

சார், வேற ஒரு வண்டி வச்சி தள்ளினா உள்ள போகுமே, என்னவோ நான் வேணும்னா அழைச்சிட்டு வர ஏற்பாடு செய்யட்டுமா என கேட்டார் .

ம்ஹூம் அதுக்கு பெரிய க்ரேனை வச்சிதான் தூக்கனும் . இந்த ரோட்ல கொண்டுவந்தா பெரிய ட்ராபிக் ஜாம் ஆயிடும் . அது வேஸ்ட்

இதை இங்கருந்து வெகேட் பன்ண முடியாதுன்னு ரிபோர்ட் பண்ணிடுங்க என்றார்.

இதுல ஏதோ பேய் கீய் இருக்கும்னு நெனக்கிறேன் , என்ற படி அதிகாரி லாரியை பார்க்க  பலரும் இப்போது அந்த லாரியை வினோதமாக  பார்த்துக்கொண்டிருந்தனர். அருகில் செல்லவே பயப்படுவது போல ஒரு பாவனையுடன் விலகியும் விலகாமலும் நின்ற படி நோட்டம் விட்டனர் . ரகசியமாக அடுத்து நின்றவரிடம் பேசிக்கொண்டிருந்தனர் . லாரியை பார்க்க பரிதாபமாக இருந்தது. அதன் முகமே மனித முகம் போல துவண்டு கிடந்தது. அது பழைய லாரி . இப்போதெல்லாம் அது போல லாரிகளை பார்க்க முடிவதில்லை. என போலீசார் ஒருவர் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார் சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை  வேறு ஒரு காவலர் ஒருவர் விலக்கி கொண்டிருந்தார்.

கோர்ட்டில் மதிய உணவு இடைவேளையின் போது  ஜட்ஜ் அய்யா லாரியை பற்றி கேட்டு வறுத்தெடுக்க போலிசார் என்ன செய்வது எனத் தெரியாமல் தலையை சொரிந்தனர்.  இன்று தீர்ப்பு வழங்கியே தீரவேண்டும் என நெருக்கடியில் இருந்த ஜட்ஜ் அய்யாவுக்கு கடும் கோபம் . லாரியை நேராக பார்க்காமல் தீர்ப்பு எழுதுவது தன்  பதவிக்கு பெரும் இழுக்கு என நினைத்தவர்  யாருமே எதிர் பாராத விதமாக  தன் அறையிலிருந்து  லாரியை நேரடியாக பார்த்துவிட புறப்பட்டார்.

ஜட்ஜ் அய்யா  வளாகத்தில் நடந்து செல்வதை பார்த்ததும் கோர்ட்டே திமிலோகப்பட்டது .ஓட்டுமொத்த கோர்ட்டும் தங்களது வேலைகளை அப்படியே பாதியில் விட்டு விட்டு அவர் பின்னால் வர , பெரும் ஊர்வலம் போல அனைவரும் வளாகத்தில் நடந்து வந்து கோர்ட் வாயிலை நோக்கி நடகத்துவங்கினர் .

டபெதார் தலைப்பாகையை சரிசெய்து கொண்டு அனைவரையும் இடித்து தள்ளிக்கொண்டு முன்பாக ஓடி  ஜட்ஜ் அய்யா நடந்து வர பாதியை சரிசெய்தபடி இருபக்கமும் வழி விடச்சொல்ல   வராந்தாவில் நின்று கதை பேசிக் கொண்டிருந்தவர்கள் சட்டென பதறி விலகி வழி விட்டனர். கோர்ட்வாசலில் கடை போட்டிருந்த ஸ்டாம் விற்பவர்கள் , வெத்திலை பாக்கு கடைக்காரர்கள்  ஆங்காங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் இந்த வித்தியாச  காட்சியைப் பார்த்து அவர்களும் பின்னால் அணி வகுக்க ஜட்ஜ் அய்யா  முதல் முறையாக காம்பவுண்டை விட்டு வெளியே நடந்து வந்து கொஞ்சமும் தன் உத்தரவை சட்டை செய்யாத  அந்த மஞ்சள் லாரி முன் வந்து நின்றார்.

மொத்த கூட்டமும் சாலையில் அவருக்கு பின்னால் நிற்க லாரியை சுற்று வட்டமாக பெரும் திரளாக மக்கள் கூடிவிட்டனர். நட்ட நடு நாயகமாக அந்த மஞ்சள் லாரி

இருபக்கமும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

அவசர அவசரமாக டைப்ரைட்டர்கள், கோர்ட் சிப்பந்திகள், அய்யா உதவியாளர் அனைவரும் அய்யா முன் ஆஜராக அந்த இடம் துரித கதியில்  ஒரு நீதிமன்றமாக மாறியது . அரசு வக்கில் அவசராவசரமாக தன் கறுப்பு கோட்டை மாட்ட அதன் நாடா அவர் காதில் மாட்டிக்கொண்டு  அந்த  இக்கட்டான நேரத்தில் பழி வாங்கியது.

தன்னை முறைத்துப் பார்த்த அய்யாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவசரஅவசரமாக அரசு வக்கீல் தன் தரப்பு வாதத்தை   முன்வைக்ககோபத்தின் உச்சியில் கண்னை மூடிக்கொண்டு ஜட்ஜ் அய்யா  அதை கேட்கத் துவங்கினார்.

அரசு வக்கீல் பேசி முடித்த சில நிமிடங்களில் நீதிபதி தீர்ப்பை  வாசித்தார் . டைப் ரைட்டர் டக்டக்கென சப்தமெழுப்பியது தவிர அவர் வாசிக்கும் போது துளி சத்தமில்லை . நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்தவுடன்  அங்கிருந்து பரபரப்பாக புறப்பட கமிஷ்னர் முகத்தில் மகிழ்ச்சி பெருமிதம் . கூட்டம் கலைய ஒருசிலர் மட்டும் இன்னும் கொஞ்ச நேரத்தில்  தீர்ப்பின் படி லாரிக்கு போலீசார் கொடுக்கப்பொகும் மரண தண்டனையை காண ஆவலாக நின்றுகொண்டிருந்தனர்.

அன்று மாலை செய்தி தாளில் கொட்டையாக  மஞ்சள் லாரிக்கு வழங்கப்ட்ட தீர்ப்பும் லாரி  உடைக்கப்பட்டு  அத்ன் பாகங்கள் ஏலமிடப்பட்ட செய்தியும்  பிரசுரமாகியது  யாரும் வாங்காத காரணத்தால் தனியாக விடப்ப்ட்ட அந்த லாரியின் பெயர் எழுதப்பட்ட முகப்பு  அனாதையாக கிடக்கும் புகைப்படம் ஒன்றும் அச்சாகியிருந்த்து. அந்த முகப்பில் நீதி என எழுதப்பட்டிருந்த்தை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை

நன்றி : நம் நற்றிணை,

கலை இலக்கிய காலாண்டிதழ் செப்நவ 2017

2 Comments

  1. பிரவின் குமார். ப

    அருமையாக இருந்தது

    Reply
  2. Pingback: நீதியின் மரணம் அல்லது மஞ்சள் லாரி வினோத கொலை வழக்கு – இரசவாதம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *